fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம்

கருத்தடை சிகிச்சை செய்த ஆண்கள் உடலுறவு கொள்ள முடியுமா?

vasectomy

செய்தி சுருக்கம்:

ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பி அருகே இருந்து வரும் சுக்கிலம் என்னும் செமனுடன், விரைகளிலிருந்து சுருள் குழாய் வழியாக வரும் விந்தணுக்கள் கலந்துவிடாமல், சுருள் குழாயை வெட்டப்படுதலே ஆண்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சை ஆகும். இது வாசக்டமி என்று அழைக்கப்படுகிறது.

வாசக்டமி செய்து கொண்ட ஆண்கள் கரு உண்டாகிவிடுமோ என்ற கவலையில்லாமல் தாம்பத்ய உறவு கொள்ளலாம். உறவில் முழு மனதுடன் ஈடுபட இது உதவும்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

வாசக்டமி மினிமலி இன்வேசிவ் எனப்படும் நுண்துளை அறுவை சிகிக்சை ஆகும். இந்த அறுவை சிகிச்சை செய்வோர் மருத்துவமனையில் தங்கியிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

கருத்தடை அறுவைசிகிச்சை, ஆண்களில் பாலுறவு ஈடுபாட்டில் அல்லவிருப்பத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கருவை உண்டாக்கக்கூடிய விந்தணு மாத்திரமே தடுக்கப்படுகிறது. மற்றபடி, பாலுணர்வு தூண்டல், உறவில் ஈடுபடும் ஆற்றல் எதுவும் குறைவதில்லை.

கருத்தடை அறுவைசிகிச்சை செய்தால் விறைப்பு தன்மை குறைபாடு, சீக்கிரத்தில் விந்து வெளிப்படுதல் ஆகிய பாதிப்புகள் வரக்கூடும் என்ற அச்சமும் சிலரிடையே காணப்படுகிறது. ஆனால், அதுபோன்ற பாதிப்புகள் இருக்காது.

பின்னணி:

ஆண் இனத்திற்காக முதன்முதலில் செய்யப்பட்ட கருத்தடையானது 1830ம் ஆண்டு நாய்க்கு செய்யப்பட்டதே ஆகும். கூப்பர் என்பவர் ஆண் நாய்க்கு கருத்தடை செய்தார். முதலில் மனிதனுக்கு கருத்தடை செய்தவர் லண்டனை சேர்ந்த ஹாரிசன் ஆவார்.

இரண்டாம் உலகப்போரின்போது மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்கும்விதமாக ஆண் கருத்தடை முறை உபயோகிக்கப்பட்டது. தற்போது கையாளப்படும் கத்தியின்றி செய்யப்படும் நோ ஸ்கால்பெல் வாசக்டமி என்ற முறையை சீனாவை சேர்ந்த மருத்துவர் லீ ஷன்கியாங் என்பவர் மேம்படுத்தி 1974ம் ஆண்டு செய்தார். வாசக்டமி முறை பாதுகாப்பானது; எளிமையானது; செலவு குறைவானது.

இந்தியாவில் தேசிய அளவில் 1954ம் ஆண்டு ஆண் கருத்தடை சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டது. தாய்லாந்து பாங்காங்கை சேர்ந்த மருத்துவர் அபிசார்ட் நிரபாத்போங்போர்ன் என்பவரிடம் பயிற்சி எடுத்த இந்திய மருத்துவர்கள் ஆர்.சி.எம். காஸா மற்றும் அலோக் பானர்ஜி இருவரும் 1991ம் ஆண்டில் இந்தியாவில் நவீன முறையில் வாசக்டமி சிகிச்சையை அளித்தனர். தேசிய அளவிலான மருத்துவர்களுக்கு இவர்கள் பயிற்சி கொடுத்தனர்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 5 லட்சம் ஆண்கள் கருத்தடை செய்துகொள்ள முன்வருகிறார்கள்.

செமன் மற்றும் ஸ்பெர்ம் – என்ன வேறுபாடு?

சுக்கிலம் என்று கூறப்படுகிற செமன் திரவம், ஃப்ரக்டோஸ் என்னும் சர்க்கரை மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த புரோஸ்டேட் திரவம் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. ஆணின் பெல்விஸ் என்னும் இடுப்புப் பகுதியிலுள்ள செமினல் வெசிகல்ஸ் என்ற இரண்டு குழாய்களிலிருந்து ஃப்ரக்டோஸும் புரோஸ்டேட் திரவமும் வந்து கலந்து சுக்கிலம் என்னும் விந்துநீர் உருவாகிறது.

ஆணின் விரைகளிலிருந்து வரும் ஸ்பெர்ம் என்னும் விந்தணு பெண்ணின் உடலுக்குள் நீந்தி கருமுட்டைக்குள் செல்ல செமன் உதவும். ஆனால், பெண்ணை கருவுறச் செய்யும் ஆற்றல் சுக்கிலம் என்னும் செமனுக்குக் கிடையாது.
விந்தணுவில் வைட்டமின் பி12 மற்றும் சி, கால்சியம், அஸ்கார்பிக் அமிலம், சிட்ரிக் அமிலம் லாக்டிக் அமிலம், ஃப்ரக்டோஸ், துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், கொழுப்பு, சோடியம் ஆகியவற்றுடன் பல புரதங்களும் காணப்படும். இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் மிகக்குறைவான அளவில் இருக்கும்.

அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள்

விந்தணு உற்பத்தியாகி, சுக்கிலம் அல்லது விந்துநீருடன் கலக்கும் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், ஏற்கனவே அந்தக் குழாயில் இருக்கும் விந்து வெளியேறும் வரைக்கும் கருவுண்டாகும் வாய்ப்பு உண்டு. அதாவது, கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு ஆண்களுக்கு 15 முதல் 20 முறை விந்து வெளியேறிய பிறகு அல்லது 3 மாத காலம் கடந்த பிறகு விந்துநீரில் விந்தணு இருக்காது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதிலிருந்து 8 மற்றும் 16 வாரங்களுக்கு இடையே விந்தணு பரிசோதனைக்கு மருத்துவர் அறிவுறுத்துவார். சுக்கிலத்தில் விந்தணு இல்லை என்பது உறுதியான பிறகு கருவுண்டாவதை தவிர்க்க வேறு வழிகளை கையாள தேவையில்லை. அதற்கு முன்பு உடலுறவு கொண்டால் கருவுண்டாதலை தடுக்க உரிய பாதுகாப்பை கையாள வேண்டும்.

கருத்தடை அறுவைசிகிச்சை செய்து கொண்ட பிறகு வெளியேறும் சுக்கிலத்தில் இரத்தம் இருக்கக்கூடும். காலப்போக்கில் இரத்தம் கலந்திருக்காது. விந்துநீரில் கலந்திருக்கும் விந்தணுவின் அளவு மிகக்குறைவுதான். ஆகவே, கருத்தடை செய்து கொண்ட ஆண்களுக்கு வெளிப்படும் சுக்கிலம் என்னும் விந்துநீரின் அளவில் பெரிய வித்தியாசம் இருக்காது.
கருத்தடை அறுவைசிகிச்சை செய்து கொண்ட ஆண்கள், வீட்டில் ஒரு வார காலம் ஓய்வு எடுக்கவேண்டும். விரைப்பையை தாங்குவதுபோன்று உள்ளாடை அணியவேண்டும். பாரம் தூக்காமல், ஓடாமல் கவனமாக இருக்கவேண்டும். இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆலோசனை கூறப்படுகிறது.

வாசக்டமி சிகிச்சை செய்தபிறகு சில ஆண்களுக்கு கோபம், எரிச்சல், சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதற்காக வருத்தப்படுதல் ஆகியவை காணப்படுகிறது. உடல்ரீதியானதை காட்டிலும் மனரீதியான பாதிப்புகளே பலரிடம் காணப்படுகின்றன. பலர் இரகசியமாக இந்த அறுவைசிகிச்சையை செய்து கொள்கின்றனர்.

பெரும்பாலான ஆண்கள் இந்த அறுவைசிகிச்சை எதிர்பார்த்ததை விட வலி குறைவாக இருப்பதாகவே கூறுகிறார்கள். விரைப்பையில் இலேசான வீக்கம் மற்றும் இரத்தக்கசிவு இருக்கலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்களில் 1 முதல் 2 சதவீதம் பேரே வலி இருப்பதாக கூறுகின்றனர். வீக்கமோ வலியோ இருந்தாலும் அது மறைந்துவிடும். ஆகவே, கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் ஆண்கள் வலியைக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. விரைப்பையினுள் கட்டி இருப்பதுபோன்று அல்லது ஏதோ அழுத்துவதுபோன்று அல்லது நீர் கோத்திருப்பதுபோன்று சிலருக்கு தோன்றும். உள்ளே விந்தணு சேகரமாவதால் இதுபோன்று தோன்றலாம். இயல்பு நிலை சீக்கிரமே திரும்பும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறலாம்.

வாசக்டமி – யார் செய்யலாம்?

உடலுறவுக்கு தகுதியான ஆண்கள் எந்த வயதிலும் இதை செய்து கொள்ளலாம். ஆனாலும் மிக இளவயதினருக்கு செய்வதில் மருத்துவர்கள் தயக்கம் காட்டுவர். இல்லறவாழ்வில் குறிப்பிட்ட காலம் கடந்தவர்களுக்கு, குழந்தைகள் இருப்பவர்களுக்கு வாசக்டமி பொருத்தமானது. ஒருவேளை மனைவி குழந்தைப்பேறு அடையும் பருவத்தை தாண்டியிருப்பாரானால் ஆணுக்கு கருத்தடை அவசியமல்ல.

ஆண்கள் கருத்தடை – கவனத்தில் கொள்ளவேண்டியவை

நவீன முறையில் வாசக்டமி என்னும் கருத்தடை செய்து கொண்ட ஆண்கள் மீண்டும் குழந்தை பெற விரும்பினால், வாசக்டமி ரிவர்சல் என்னும் மீள்அறுவைசிகிச்சை செய்யலாம்.
கருத்தடை செய்து கொள்ளும் ஆண்கள் தங்கள் விந்தணுவை உரியவிதத்தில் சேகரித்து வைத்துக்கொள்ளவும் ஆலோசனை கூறப்படுகிறது.

மீள்அறுவைசிகிச்சை மற்றும் விந்தணு சேகரிப்பு ஆகியவை அனைவருக்கும் அது வெற்றியாக அமையும் என்று நம்ப இயலாது.

ஆகவே குடும்பத்தினர் குழந்தை தேவையில்லை என்று முழுவதுமாக ஒப்புக்கொண்டால் மட்டுமே வாசக்டமி செய்யலாம். சிலர் பரம்பரை வியாதிகள் சந்ததிக்கு கடத்தப்படாமல் இருப்பதற்காக இந்த முடிவுக்கு வருவர். அடுத்து கருவுறுவது மனைவியின் உடல்நலத்திற்கு ஆபத்து என்றாலும் ஆண்கள் கருத்தடை செய்து கொள்கின்றனர்.
இவையல்லாமல் தம்பதியர் உறவில் பிரிவு, குடும்ப பொருளாதார சிக்கல், மற்றவர்களின் தொடர் அறிவுறுத்தல் ஆகியவற்றின் காரணமாக கருத்தடை அறுவைசிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்கவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் :

காதல் உணவுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்..! சிறப்பான காதல் வாழ்க்கைக்கு நீக்க வேண்டிய மற்றும் சேர்க...
ஸ்மார்ட் போனில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்: ஒரு எச்சரிக்கை
அஜினமோட்டோ - முதுமை, இதயப் பிரச்சனைகளை வேகமாக ஏற்படுத்தும். - அலகாபாத் பல்கலைக் கழகம் ஆய்வு. 
சாராயத்தால் சீரழியும் பல குடும்பங்களின் இன்பகரமான இல்லறவாழ்வு.
விண்வெளியை கதிர்வீச்சால் நிரப்பும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள்!
கருப்பை புற்றுநோய்க்கான மரபணு சிகிச்சை!
‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ - பில் கேட்ஸ் எச்சரிக்கை...
சின்னச் சின்ன இன்பங்களில் இருக்கு ரகசியம்! அன்றாடம் அனுபவிக்கும் சிறிய இன்பங்கள் மூளை செயல்பாட்டை மே...
குழந்தைகளுக்குத் தலைவலியா? கண்ணில் பிரச்னை இருக்கலாம்!
இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் - ஆய்வு முடிவு!!
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *