ஜனநாயக ஆட்சியும் செங்கோல்களின் வரலாறும்!

செய்திச் சுருக்கம்
இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட்டது. இச்செங்கோல், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை கைமாற்றும் பொருட்டு ஒரு குறியீடாக இருந்தது என்று தற்போதைய ஆட்சியாளர்களால் வலியுறுத்தப்படுகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ஒருவகையில் இந்தியாவின் முகமாகத் திகழ்ந்த, நமது பழைய பாராளுமன்ற கட்டிடம் ஓய்வு பெறுகிறது. இந்த பழைய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு 1927 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் இர்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் கொதிக்கும் பிரச்சனைகளையும் கண்ட இப்பாரம்பரியக் கட்டிடம் இனி கொஞ்சம் ஓய்ந்திருக்கலாம்.
இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் அருகே முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்றத்தை கட்டும் பணிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 3 ஆண்டுகளாக இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தன. புதிய நாடாளுமன்ற கட்டடம் 1200 கோடி ரூபாய் செலவில், 18 ஏக்கர் அளவுக்கு அதாவது 64,500 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கடந்த மே 28ம் தேதி திறந்து வைத்தார். இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திறப்பு விழாவுக்கு அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்திருந்தன.
முன்னதாக, சோழர் காலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பயன்படுத்தப்படுவதைபோல், திருவாவடுதுறை ஆதீனம் 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின்போது ஜவஹர்லால் நேருவிடம் வழங்கிய செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவப்போவதாக அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்திலிருந்து 21 ஆதீனங்களின் குருமகா சன்னிதானங்களும் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாதீன தலைவர்கள் உரிய மரியாதையுடன் இச்செங்கோலை பிரதமரிடம் வழங்கினர். பிரதமர் செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் நிறுவினார்.
செங்கோலின் தத்துவம் என்ன?
பண்டைய மன்னர்கள் காலத்திலிருந்து மக்களை ஆள்பவர்கள் சராசரி மக்கள் திரளில் இருந்து சற்றே மேம்பட்டவர்கள் என்று பொதுமக்களுக்குக் காட்டுவதற்காக சில சடங்கு சம்பிரதாயங்களைச் செய்துவந்தனர். அச்சடங்குகளையும் சமூக அடுக்கில் உயர்தட்டில் இருக்கும் அந்தணர்களைக் கொண்டே நடத்தி வந்தனர்.
சில சடங்குகளின் முடிவில் அரசன் தெய்வத்தின் பிரதிநிதியாக உயர்ந்துவிட்டதாகவும், மறுபிறப்பை எய்திவிட்டதாகவும் நம்பப்பட்டது. அவ்வாறு அம்மன்னர்கள் தெய்வத்தின் பிரதிநிதியாக உயர்வடைந்ததைக் குறிக்கும் விதமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதே செங்கோல்கள்.
செங்கோல் என்பதற்கு நேரான கோல் என்று பொருளாகும். மன்னன் நீதி நெறி பிறழாது தனது கடமையை ஆற்றும்போது நேராக இருக்கும் இந்த கொலானது நீதி தவறும்பொது வளைந்து கொடுங்கோலாக மாறும் என்பது பொதுவாக கருத்து. இதை புலவர்களும் இலக்கியங்களில் பாடி நிலைநிறுத்தினர்.
செங்கோலைக் கையில் கொண்டு ஆண்டுவரும் அரசன் இனி இறைவனின் பிரதிநிதியாக கருதப்படுதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும், அரசனை எதிர்ப்பவர்கள் இறைவனையே எதிர்ப்பவர்களாக கருதப்பட்டு கழுவில் ஏற்றப்பட்டதும் அக்கால கட்டங்களில் இயல்பான ஒன்றாக இருந்துவந்தது.
ஜனநாயகமும் செங்கோலும்
மன்னராட்சி மறைந்து உலகமெங்கும் மக்களாட்சி மலர்ந்திருக்கும் நிலையில் செங்கோல்கள் தேவைப்படுகின்றனவா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள ஆகப்பெரிய வேறுபாடு என்ன? மக்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் ஒருவன் ஆட்சி செய்தல்தான் மக்களாட்சி. தனது ஆட்சிக் காலம் முடிந்தபின்னர் அவன் தனது ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கி மக்களோடு மக்களாகிறான். மன்னராட்சியில் மன்னன் மக்களோடு மக்களாதல் என்ற நிலைக்கே இடமில்லை.
மக்களாட்சியில் ஆள்பவனைக் கேள்வி கேட்டல் என்பது ஒரு இன்றியமையாத செயல்பாடாகும். இங்கே செங்கோல் நேராக இருக்கிறதா இல்லை வளைந்துவிட்டதா என்பதை ஆளப்படும் மக்களின் மனநிலையே தீர்மானிக்கிறது.
ஆள்பவர்களை புனிதப்படுத்தும் செங்கோல் ஜனநாயக ஆட்சியில் அவசியமற்றதாகிறது.
உண்மையில் இந்தியாவின் சுந்தந்திரம் செங்கோல் வழி கைமாற்றப்பட்டதா?
இந்தியா சுதந்திரம் அடைந்தபொது நாடெங்கும் ஒரு பூரிப்பு மனநிலை பரவிப் பெருகியது. நாட்டில் இருந்த அனைத்து அமைப்புகளும் தங்கள் சார்பில் புதிய ஆட்சியாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை தங்கள் மகிழ்வையும் ஆதரவையும் தெரிவிக்கும் விதமாக அனுப்பி வைத்தன.
சால்வைகளும், தத்தங்களால் ஆன நினைவுச் சின்னங்களும், தஞ்சாவூர் ஒவியங்கள், கங்கை நீர் நிறைந்த கலசங்கள் போன்ற பிராந்தியங்கள் சார்ந்த கலைப்பொருட்களும் தலைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவை அனைத்துமே திருமணத்திற்கு சென்றவர்கள் அளிக்கும் பரிசுப்பொருட்கள் போன்றவையே. இதில் எது இல்லையென்றாலும் சுதந்திரம் வழங்குவது என்ற கல்யாணம் நடந்திருக்கும். ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்ற நிகழ்வில் செங்கோல் என்பது ஏதோ கல்யாணத்தில் இருக்கும் தாலிபோல முக்கியத்துவம் கொடுத்து சித்தரிப்பது தவறானது.
அதேபோல இங்குள்ளவர்கள் சொல்வது போல இந்த செங்கோல் சோழர்காலத்தைச் சேர்ந்ததல்ல. சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு நகைக்கடையில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதில் இருக்கும் நந்தி அடையாளம் சோழர்களுடையது அல்ல, திருவாடுதுறை ஆதீனத்தின் அடையாளமே ஆகும்.
ஜனநாயக ஆட்சியின் அர்த்தத்தைச் சிதைக்காதிருங்கள்
ஆள்வோரை கேள்வி கேட்டலும், நம்மில் ஒருவரை நம்மை ஆள அமர்த்தியிருக்கிறோம் என்ற எண்ணமும் சாமானிய மனிதருக்கும் இருக்க வேண்டியது அவசியம். மக்களாட்சியின் அடிநாதமே அந்த தார்மீக உணர்ச்சிதான். மக்கள் நலன் சாராத நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் இறங்குகையில் அவ்வாட்சியை தூக்கி எறிவதும் எதிர்த்து கேள்விகள் கேட்பதுவும் ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கங்கள்.
ஆள்பவர்களை செங்கோல்கள் கொண்டு இறைவனோடு தொடர்பு படுத்துவதும், அதற்கென போலியான ஆதாரங்களை உருவாக்கி நிலைநிறுத்துவதும் தேவையில்லாத ஆணிகள்.