அதிகத் திரைநேரம் குழந்தைகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் திரைகளுக்கு முன்பாக அமர்ந்திருப்பது பிற்காலத்தில் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எனப் புதிய ஆய்வு ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 90களில் பிறந்த குழந்தைகள் அதாவது 1991-92 க்கிடையில் பிறந்த பதினான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பங்கேற்றனர். அவர்கள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் குழந்தைகளின் திரைக்கு முன்பான அதிக நேர அமர்வு, பிற்காலத்தில் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை உயர்த்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் திரை நேரம் அவர்களது இதயத்தைக் கனமாக்குகிறது என்றும் அவர்கள் தங்கள் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் திரைக்கு முன் அமர்வதிலிருந்து நெடுந்தூரம் விலக வேண்டும் என்றும் இந்த ஆய்வின் ஆசிரியர் டாக்டர் ஆண்ட்ரூ அக்பாஜே கூறியுள்ளார்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக 11 வயது குழந்தைகளுக்கு ஆக்டிவிட்டி டிராக்கருடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டது. அதை அவர்கள் ஏழு நாட்கள் அணிந்து கொள்ளக் கோரப்பட்டது. பின்னர் அவர்களது பதினைந்தாவது வயதிலும் 24வது வயதிலும் மீண்டும் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது செயல்பாடுகள் அவற்றின் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளன.
வயது, பாலினம், இரத்த அழுத்தம், உடல் கொழுப்பு, புகை பிடித்தல், உடல் செயல்பாடு மற்றும் சமூகப் பொருளாதார நிலை போன்ற வெளிப்புறக் காரணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் 17 மற்றும் 24 வயது இளைஞர்களின் இதயங்கள் எக்கோ கார்டியோகிராபி எனப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 766 குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 362 நிமிடங்கள் திரைக்கு முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் இளமைப் பருவத்துக்கு வந்த போது அந்த நிமிடங்கள் 474 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது 24வது வயதில் 531 நிமிடங்களாக அதிகரித்திருக்கிறது. இது அந்த ஆண்டுகளுக்கு இடையே 169 நிமிட அதிகரிப்பு என்று கூறப்படுகிறது.
11 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களிடையே இருந்த ஒவ்வொரு நிமிடத் திரை நேர அதிகரிப்பும் அவர்களுக்கு 17 முதல் 24 வயதாகும் போது அவர்களது இதயத்தின் இடது வென்ட்ரிகிள் நிறையை 0.004 கிராம்/2.7 மீட்டர் வரை அதிகரித்துள்ளது. இதை 169 நிமிடங்களுடன் பெருக்கும்போது தினசரி 0.7 கிராம்/ 2.7 மீட்டர் என்ற ரீதியில் அது உயர்ந்திருக்கிறது. இது சராசரியாகக் குழந்தைகள் வளர்ந்த பின்னர் இடது வென்ட்ரிகிள் நிறையை 3 கிராம் அதிகரிப்பதற்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதே போன்று வயது வந்தவர்களிடையே நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுகள் 7 வருட காலப்பகுதியில் ஒரு கிராம்/ 2.7 மீட்டர் என்ற ரீதியில் அவர்களது இடது வென்ட்ரிகிள் நிறை அதிகரித்ததைக் குறிப்பிடுகின்றன. இதனால் அவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, உடல் எடை மற்றும் இரத்த அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல் திரைகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அமர்ந்திருப்பார்களேயானால் அவர்களது இதயம் நிச்சயம் பாதிக்கப்படும் என்று கூறும் டாக்டர் ஆண்ட்ரூ அக்பாஜே, பெற்றோர்கள், குழந்தைகளையும் இளைஞர்களையும் சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கு அவர்களைவெளியுலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நடைப்பயிற்சியைக் கற்றுத் தர வேண்டும் என்றும் கூறுகின்றார்.
சமீபகாலமாக குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் சர்வசாதாரணமாக மாரடைப்பு ஏற்படுவதைத் தினசரி பத்திரிக்கைகளில் படிக்கிறோம். பக்கத்து வீடுகளிலும் கூடப் பார்க்கிறோம். நேற்று வரை நன்றாக இருந்த இளம் வயது நண்பர்கள் மாரடைப்பால் இன்று மரணமடைவைதை எண்ணி அதிர்ந்து போகிறோம். ஏன் இப்படி சிறு வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது என்று அச்சத்தில் உறைந்து போகிறோம். ஆனால் இதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதில் மட்டும் அக்கறை இல்லாமல் இருக்கிறோம். உண்மைதானே? சிறு வயதில் ஏற்படும் இத்தகைய மாரடைப்பு மரணங்களுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கிய காரணமாக, மாறி வரும் சமூக நெறிமுறைகளால் குழந்தைகளும் இளைஞர்களும் அதிக அளவில் உட்கார்ந்தே இருக்கிறார்கள், குறிப்பாக வீடியோ கேம்கள், மொபைல்கள், லேப்டாப்கள் மற்றும் பிற கேட்ஜெட்களுடன் இணைந்தே இருக்கிறார்கள் என்பதைத்தான் கூறுகிறார்கள் மருத்துவர்கள். இளைஞர்களும் குழந்தைகளும் சரியான உடற்பயிற்சி செய்வதில்லை என்றும் வெளிப்புற விளையாட்டுக்கள் என்பதே அவர்களுக்கு இல்லை என்பதையும் அவர்கள் நினைவு கூர்கிறார்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மிகவும் ஆரோக்கியமற்றது என்று கூறும் அவர்கள் ஓய்வெடுக்கிறோம் பேர்வழி என்று ஒவ்வொருவரும் தினமும் மொபைல், கணினி மற்றும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருப்பது அவர்களின் கண்கள் மற்றும் மூளையைப் பாதிப்பதோடு அதிக மன அழுத்தத்தையும் உண்டு பண்ணுகின்றன என்றும் இவை இதயத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கின்றன என்றும் இதனால்தான் சிறு வயதிலேயே அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உருவாகின்றன என்றும் தெரிவிக்கிறார்கள். இதைத்தான் சமீபத்திய ஆய்வு “நீண்ட நேர அமர்வானது ஒருவரை விரைவில் அமரராக்கிவிடும்” என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.