நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!

பெற்றோர்களாகிய நாம் எப்போதும் பிசியாக இருக்கிறோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத்தான் நாம் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்கிறோம். உண்மை. அக்குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வீட்டில் உண்டாக்கி வைத்திருக்கிறோம். பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும், இன்றெல்லாம் அனைவருமே வீட்டில் மொபைல் போன் வைத்திருக்கிறோம். அதை நம் குழந்தைகள் கையில் கொடுத்து அவர்கள் அதை உபயோகப்படுத்தும் அழகை ரசிக்கிறோம்.
ஒருகட்டத்தில் மொபைல் போன் என்பது நம் குழந்தைகளைச் சாப்பிட வைக்க, அவர்கள் அழுது அடம்பிடிக்காமல் ‘சமத்தாக’ இருக்க, வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடாமல் இருக்க என்று பல காரணங்களுக்காக உதவும் ஒரு சாதனமாக மாறிவிட்டது.
குழந்தைகளும் இன்று மொபைல் மற்றும் டேப்லெட் திரையில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்பதுதான் நிஜம். பெற்றோர்களான நம்மை நம் குழந்தைகள் தொல்லை செய்யாமல் இருக்க அல்லது வீட்டில் அமைதியாக இருக்க என்று நாம் தொடங்கி வைத்த ஒரு சிறு நெறுப்பு இன்று தற்காலத் தலைமுறையினரின் எதிர்காலத்தை எரிக்கும் ஒரு பெரு நெறுப்பாக மாறி நிற்கிறது.
ஆய்வு தெரிவிப்பது என்ன?
7,097 குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த புதிய ஆய்வில், 1 வயதில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் நான்கு மணிநேரம் வரை திரையைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள், தகவல்தொடர்பு, உடற் செயல்பாடுகள், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் தனிப்பட்ட மற்றும் சமூக திறன்களில் வளர்ச்சி போன்றவற்றில் தாமதங்களை எதிர்கொள்வதாக தெரியவந்திருக்கிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஜேசன் நாகாடா கூறுகையில், ‘இது ஒரு முக்கியமான ஆய்வு, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் குழந்தைகள் குறித்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒன்று’, என்றார்.
1 வயதில் குழந்தைகள் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் திரையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து, 2 மற்றும் 4 வயதில் அக்குழந்தைகளது தகவல் தொடர்பு திறன், மோட்டார் திறன்கள், தனிப்பட்ட மற்றும் சமூகத் திறன்கள் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் போன்ற பல வளர்ச்சிக் களங்களில் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை இந்த ஆய்வு அளவிடுகிறது.
2 வயதிற்குள், நாள் ஒன்றுக்கு நான்கு மணிநேரம் வரை திரை நேரம் வைத்திருந்தவர்கள், தகவல் தொடர்பு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் வளர்ச்சி தாமதங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்பது இந்த ஆய்வு முடிவு தெரிவிப்பதாகும்.
2 வயதிற்குள் திரைகளுடன் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் செலவழித்த குழந்தைகளின், வளர்ச்சியடையாத தகவல் தொடர்பு திறன் 4.78 மடங்கு அதிகம். வளர்ச்சியடையாத தனிப்பட்ட மற்றும் சமூக திறன்கள் இரு மடங்கு அதிகம். 4 வயதிற்குள் , தகவல் தொடர்பு மற்றும் சிக்கலைத் தீர்த்தல் போன்றவற்றில் மட்டுமே திணறுகின்றனர்.
திரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது எப்படி குழந்தைகளை பாதிக்கிறது?
குழந்தைகள் பேச ஊக்குவிக்கப்பட்டால் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் அடிக்கடி, அவர்கள் ஒரு திரையைப் பார்த்துக் கொண்டிருந்தால், பேசுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பில்லை.
அவர்கள் நிறைய வார்த்தைகளைக் கேட்கலாம், ஆனால் அவர்கள் நிறைய வார்த்தைகளைச் சொல்வதையோ அல்லது முன்னும் பின்னுமாக தொடர்புகொள்வதையோ பயிற்சி செய்வதில்லை.
ஒரு திரையில் உள்ள கதாபாத்திரங்களை விட உண்மையான மனிதர்கள் பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதால், நிஜ உலகில் மனிதர்களை தொடர்புகொள்ளும் சமூகத் திறன்களை இக்குழந்தைகள் பெறாமல் போகலாம். நபர்களின் முகங்களைப் பார்ப்பது, அவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை நமது மூளை பயில வேண்டும்.
உடற் செயல்பாடுகளை கெடுக்கும் திரைகள்..
ஓடி விளையாடும் அல்லது உடல் செயல்பாடுகள் ஏதும் இல்லாத செயலற்ற திரையைப் பார்ப்பதால், குழந்தைகள் உட்கார்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், பின்னர் மோட்டார் திறன்களைப் பயிற்சி செய்ய முடியாது.
குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு போதுமான நேரம் இல்லையென்றால் அல்லது எதிர்மறை உணர்ச்சிகளைத் தணிக்க ஒரு டேப்லெட்டைக் கொடுத்தால், அது குழந்தைகளின் உடல் செயல்பாட்டைத் தடுக்கும் ஒரு தடைக்கல்லாக மாறிவிடுகிறது.
படைப்பாற்றலும் ‘போர்’ அடித்தலும்!
ஒருவர் எவ்வளவு நேரம் தன் சொந்த எண்ணங்களுடன் அமர்ந்திருக்க இயலும் என்பதே அவரது மன உறுதிக்கும் மனத்திட்பத்திற்கும் சான்றாகும். சற்று நேரம் சும்மா அமர்ந்துவிட்டு போர் அடிக்கிறது என்று போனை நோண்டுபவர்கள் மன ஆழமற்றவர்களாகிவிடுகிறார்கள்.
சிறிதுநேர அமைதிக்குப் பிறகு ஏதோ சங்கடமாக உணரும் மனது தன்னை வெளிக்கொணரவும், தன்னை சரியாக மாற்றிக்கொள்ளவும் ஒரு செயல்பாட்டில் ஈடுபடும். படைப்பாற்றல் அப்போது மட்டுமே வெளிப்படும்.
குழந்தைகளுக்கு சற்றே ‘போர்’ அடிக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களை சரிசெய்துகொள்ள ஏதேனும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். அதை விடுத்து, போர் அடிக்கிறது என்றதும் போனை எடுத்து நீட்டினோமென்றால் அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுவார்கள்.
பிறகு எப்படித்தான் குழந்தைகளை சமாதானமாக வைத்திருப்பது?!
முந்தைய தலைமுறை எப்படி நேரத்தைச் செலவு செய்தது? புத்தங்கள், வண்ணம் தீட்டும் பொருட்கள், பொம்மைகள் ஆகியவற்றால் குழந்தைகளை ஆக்கிரமிக்க வேண்டும்.
கல்வி சார்ந்த உள்ளடக்கம் அல்லது அன்பானவருடன் வீடியோ அரட்டைகளைத் தேர்வுசெய்யவும். அதனால் அவர்கள் இன்னும் சில சமூக தொடர்புகளைப் பெற முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்களாகின நாம் நமது திரை நேரத்தைக் குறைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை, நாம் செய்வதைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.