fbpx
LOADING

Type to search

உடல் நலம் தொழில்நுட்பம் பொழுது போக்கு

மொபைல் மற்றும் கணினித் திரையில் அதிக நேரம் செலவிடுகிறார்களா உங்கள் குழந்தைகள்? எச்சரிக்கை தேவை

கனடியக் குழந்தைகள் மருத்துவச் சங்கம் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் மொபைல் மற்றும் கணினித் திரைகளில் செலவிட வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளது. மேலும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கனடா நாட்டின் நரம்பியல் மற்றும் கற்றல் குறைபாடுகளுக்கான ஆராய்ச்சித் தலைவரும் உதவிப் பேராசிரியருமான எம்மா டுயர்டன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தின்போது குழந்தைகள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கணினி மற்றும் மொபைல் திரைகளில் நேரத்தைச் செலவிட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர். திரைநேரம் என்பது கணினி, தொலைக்காட்சி, அலைபேசி, மடிக்கணினி அல்லது ஏதேனும் காட்சித் தொடர்புடைய சாதனங்களின் திரைகளைப் பார்ப்பதில் ஒரு நாளைக்குச் செலவிடும் மொத்த நேரமாகும்.

பிஎம்சி சைக்காலஜி இதழில் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையில் கோவிட்-19 தொற்றுக்காலத்தின்போது குழந்தைகளின் இந்த திரைப் பயன்பாட்டு நேரம் ஒரு நாளைக்குச் சராசரியாக ஆறு மணிநேரத்தைத் தொட்டது என்றும் சில குழந்தைகள் பதின்மூன்று மணிநேரம் வரையிலும் திரைக்கு முன் அமர்ந்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. கம்பாஸ் என்னும் இந்த ஆய்வு நவம்பர் 2020 – 2021க்கு இடையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வாகும். கணினி மற்றும் மொபைல் திரைகளைப் பயன்படுத்திய குழந்தைகளின் பெற்றோர்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டோரிடமிருந்து தரவுகளைச் சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வு இது. “இந்தக் கண்டுபிடிப்பு எங்களுக்கு மிகவும் வியப்பைத் தருகிறது. இது நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த உலகளாவிய உடல்நலம் சார்ந்த ஒரு பிரச்சனை. அதேவேளையில் குழந்தைகள் திரையில் நேரத்தைச்  செலவிடுவதற்கும் கல்வி அல்லது மற்ற வீட்டுக் காரணிகளுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை” என்று இந்த ஆய்வின் தலைவர் எம்மா கூறியுள்ளார். மேலும் இங்ஙனம் சிறு வயதில் தொடங்கும் பழக்கம் அவர்கள் வளர வளர மிகவும் அதிகமாகும் என்றும் கவலையுடனும் மனச்சோர்வுடனுமே அவர்கள் அதிகமாகத் திரையில் நேரத்தை செலவழிக்கிறார்கள், இவை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த ஆய்வில் பெற்றோர்களின் பங்கு குறித்து அவர் கூறும்போது “இந்த ஆய்வின் முடிவுகள் இதில் பங்கேற்ற பெற்றோர்களை மிகுந்த ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. ஏனென்றால் இவ்வளவு நேரம் தங்கள் குழந்தைகள் திரைகளில் செலவிடுகிறார்கள் என்பதை அவர்களே அறிந்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகள் திரையில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் நிறைய உள்ளன. அவற்றுள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது மிக முக்கியமான கருவி. பெற்றோர்களின் மன அழுத்தம் குழந்தைகளின் திரைப் பயன்பாட்டுக்குக் காரணமாக உள்ளது. முதலில் பெற்றோர்கள் திரையில் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 கோவிட்-19 தொற்றுக்காலம் நமக்குக் கற்றுக்கொடுத்த மிக முக்கியமான பாடம் நம்மை நாம் எப்படி கவனித்துக் கொள்வது மற்றும் பாதுகாத்துக் கொள்வது என்பதைத்தான். குறிப்பாக நீண்ட நேரம் கணினி மற்றும் மொபைல் போன்களில் செலவிடுவதைக் குறைத்துக் கொள்ளாவிட்டால் கண்களும் மூளையும் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதை அந்தத் தொற்றுக்காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

கல்வி, தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, பரிவர்த்தனைகள் மற்றும்  சமூகச் செயல்பாடுகள் என இந்தத் திரைகள் நம் வாழ்வின் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டன என்றபோதிலும் உணவு உட்கொள்வதில் சரியான அளவு மற்றும் சரியான நேரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் டிஜிட்டல் சாதனங்களின் திரைகளைப் பயன்படுத்தும் விதமும் கால அளவும் மிகவும் முக்கியம். குழந்தைகளின் திரைநேரம் அதிகரிக்கும்போது உடல் பருமன், தூக்கமின்மை, தலைவலி, கண் சோர்வடைதல், கழுத்து மற்றும் மணிக்கட்டுகளில் வலி ஆகியவை ஏற்படலாம். அதிவேகத் தன்மை, தாமதமான பேச்சு, வன்முறை, மோசமான செறிவுத்தன்மை, பயம், பதட்டம், ஆபாசம், அடிமைத்தனம், போதைப்பொருள் பயன்பாடு, மனச்சோர்வு, உடனடியாகத் தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் என மனநலன் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும்.

முக்கியமாகக் குழந்தைகளுக்கு அவர்களது கல்வித் திறனில் குறைபாடு ஏற்படும் எனவும் அறியப்படுகிறது. திரைநேரத்தைப் பற்றிய விழிப்புணர்வு முதலில் பெற்றோர்களிடத்தில் வேண்டும். சமூக ஊடகங்கள் அல்லது வீடியோ கேம் போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபடுவதற்கு முன் பெற்றோர்கள் அவற்றைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும் இது அவர்களின் வயதிற்கு ஏற்றதுதானா என்பதை அறிந்து கொள்ளுதல் முக்கியம். அவற்றை அவர்கள் பயன்படுத்துவதற்கான காரணங்களை அவர்களிடமே கேட்கலாம். பின்னர் அவர்களுக்குச் சரியான  பாதுகாப்பு விதிகளைக் கற்றுத் தரலாம். அவற்றிலிருந்து ஓய்வெடுக்கும் சில வழிமுறைகளையும் அவர்களது தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விஷயங்களில் ஈடுபடுத்தும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். தூக்கம், உடல்நலம், படிப்பு, குடும்பம், உணவு மற்றும் பயனுள்ள பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். ஆரோக்கியமான டிஜிட்டல் பயன்பாட்டிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தாத டிஜிட்டல் சாரா விரதத்தைக் கூட பின்பற்றலாம். தப்பே இல்லை. இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தும் அவற்றை எல்லாம் மீறி உங்கள் குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி மற்றும் மொபைல் திரைகளுக்கு அடிமையாகிறார்கள் என்றால் உடனடியாக அவர்களைக் குழந்தைகள் நல மருத்துவர் அல்லது மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டியதுதான். வேறு வழியே இல்லை.

தொடர்புடைய பதிவுகள் :

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்
உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!
இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களா? அப்படியானால் நீங்கள்தான் பாக்கியசாலிகள்!
முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல: சிட்னி பல்கலைக்கழக ஆய்வு முடிவு
படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
பெரும்பாலான ஆண்களுக்கு சுய இன்பம் என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் ஆய்வு கூறுகிறது
கத்தி முனையில் கடத்தப்பட்ட தமிழ் ராப் பாடகர் தேவ் ஆனந்த்! சோசியல் மீடியா பிரபலங்களுக்கான எச்சரிக்கை!...
மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் குட்டித்தூக்கம் - ஆய்வு முடிவு!
பல் ஆரோக்கியமின்மை மூளையைப் பாதிக்குமா?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *