விலங்குகளிலும் உள்ளது ஓரினச்சேர்க்கைப் பழக்கம்! இது இயல்பானதே…இயற்கைக்கு முரணாணதில்லை – ஆய்வு முடிவு!!

எவ்வளவோ முற்போக்கு கருத்துகள் இம்மண்ணில் தோன்றி வேரூன்றி வளர்ந்துவிட்ட போதும், இன்னும் ஓரினச்சேர்க்கை பற்றி நம் மக்களுக்கு முழுமையான புரிதல் இல்லை என்பதே உண்மை. இது இயற்கைக்கு மாறானது என்று கூக்குரல் இடுவதில் தொடங்கி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டங்களைக் கொண்டிருப்பது வரை இதற்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறது.
ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவர்கள் சொல்வதெல்லாம், ‘இது இயற்கைக்கு எதிரானது, இயற்கையான விலங்குகளிலும் பறவைகளிலும் இந்த பழக்கம் இல்லை. இது இனப்பெருக்கத்திற்கு உதவாத ஒன்று’ என்பதுதான். விலங்குகளில் இருக்கும் ஓரினச்சேர்க்கை வழக்கத்தைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு சொல்வதென்ன..? வாருங்கள் பார்க்கலாம்..
இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உண்டானதா உடலுறவு!
மனித இனம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் உடலுறவில் ஈடுபடுவதில்லை. அன்பை வெளிப்படுத்தவும், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பதை உறுதி செய்யவும், சந்தோஷத்திற்காகவும், உடல்/மன அமைதிக்காகவும் மனிதன் உடலுறவில் ஈடுபடுகிறான்.
எனில், ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்றும், இனப்பெருக்கத்திற்கு உதவாத ஒன்று என்ற வாதமும் அர்த்தமற்றதாகிறது. தன் பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் தம் அன்பை வெளிப்படுத்தவும், உறவை மேம்படுத்தவும் உடலுறவை ஒரு கருவியாக கையாளுவதை எவ்வாறு குறையாக கூற இயலும்?
இயற்கையில் விலங்குகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றனவா?
ஆம். நிச்சயமாக! அடேலி பென்குயின்கள், ஸ்கேராப் வண்டுகள், டால்பின்கள், வெளவால்கள் மற்றும் பல உயிரினங்களில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
இவ்வாறு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுதல் இவ்விலங்குகளில் மரபணு வாயிலாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதும் நடக்கிறது. எனில் இது இயற்கைக்கு மாறானதும் அல்ல, இயல்புக்கு எதிரானதும் அல்ல என்பது புலனாகிறது.
குரங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வு சொல்வதென்ன?
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஜாக்சன் கிளைவ் மற்றும் அவரது குழுவினர் புவேர்ட்டோ ரிக்கோவின் கயோ சாண்டியாகோவின் வனாந்தரத்தில், ரீசஸ் மக்காக் இனத்தைச் சேர்ந்த 236 ஆண் குரங்குகளின் குழுவை மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்தனர்.
ஆண் குரங்குகளில் 72% ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், 46% மட்டுமே இரு பாலின உறவில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கண்டறிந்தனர்! உண்மையில், பெரும்பாலான ஆண் குரங்குகள் ‘நடத்தை ரீதியாக இருபாலினராக’ இருந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘இயற்கை’யில் ஓரினச்சேர்க்கைக்கான உதாரணங்களை நீங்கள் தேடினால், இதைவிட சரியான உதாரணத்தை நீங்கள் பெற முடியாது!
இனப்பெருக்கத்திற்கு உதவுகிறதா ஓரினச்சேர்க்கை?
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் குரங்குகள் இனப்பெருக்கத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்று கொள்ளவேண்டியதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் இந்த ஓரினச்சேர்க்கை செயல்பாடு அந்த குரங்குக் குழுவின் இனப்பெருக்கம் வெற்றிகரமாக இருக்க உதவியதாம்.
நீண்ட காலமாக மக்கா குரங்குகளின் நடத்தைகளை அவதானித்த குழு, ஓரினச்சேர்க்கை பழக்கமானது, அந்த ஆண் குரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்ட பிணைப்புகளுடன் இணக்கமாக இருந்ததாக தெரிவிக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, ஒரே பாலின நடத்தையில் ஈடுபடும் ஆண் குரங்குகள் ஒருவருக்கொருவர் மோதல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் மற்ற குழு மோதல்களில் ஒன்றாக இருந்து எதிரிகளை எதிர்க்கும் வாய்ப்பு அதிகம். இது அவர்களுக்கு குழுவில் நீடித்து உயிர்வாழும் நன்மையை வழங்குகிறது.
இந்த தன்மைகள் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. ஒரே பாலின நடத்தையில் ஈடுபடும் ஆண் குரங்குகள் இனப்பெருக்கம் செய்வதில் அதிக வெற்றியை பெறுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓரினச்சேர்க்கை என்பது பரம்பரை பழக்கமா?
1956 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு தனிநபரின் விரிவான மரபனு பதிவுகளைப் பயன்படுத்தி மக்காக்களில் ஒரு மரபணு பகுப்பாய்வையும் குழு நடத்தியது. இது ஒரே பாலின நடத்தை 6.4% மரபுவழி என்று கண்டறிய வழிவகுத்தது.
சில குரங்குகள் பாலுறவில் ஈடுபடும் போது, சில குரங்குகள் ‘மவுண்டராக’ இருக்கும் என்றும், மற்றவை, ‘மவுண்டீகள்’ என்றும், மரபணு ரீதியாக முன்னோடியாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நிறைவாக ஒரு வார்த்தை!
ஓருவருக்கு எந்த பாலினத்தின் மீது ஈர்ப்பு வருகிறது என்பது அந்த தனி மனிதரைப் பொருத்தது. அதற்கு மரபான அல்லது சூழ்நிலை காரணங்கள் இருக்கலாம். ஒருவரது பால் தேர்வு என்பதை விமர்சிக்கவோ அல்லது தடுக்கவோ எவருக்கும் உரிமை இல்லை என்பதே நிதர்சனம்.
ஓரின பால் ஈர்ப்பிற்கு இயற்கையின் ஆதாரங்களைத் தேடுபவர்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஓரளவிற்கு தரவுகளைத் தந்திருக்கும் என்று நம்புகிறோம்.