fbpx
LOADING

Type to search

உலகம்

ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே புத்திசாலித்தனம் என்கிறார் ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ கர்னல்

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வாஷிங்டன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்கிரகோர் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளார். மாஸ்கோவிற்கும் கீவ்விற்கும் இடையிலான பகைமையின் உண்மையான நிலையை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தத் தவறிவிட்டன என்று கூறிய அவர், கீவ்வின் எதிர்த்தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றும் உக்ரைன் கடந்த மாதத்தில் குறைந்தது 40 ஆயிரம் படை வீரர்களை இழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். 

அதேவேளையில் உக்ரேனிய மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன என்றும் காயமடைந்தவர்களை வெளியேற்ற இயலாததால் உக்ரைன் துருப்புகள் சரணடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய கூற்றுப்படியே ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் ஜூன் தொடக்கத்திலிருந்து உக்ரைன் படைகள் சுமார் 43 ஆயிரம் வீரர்களையும் 5000 கனரக உபகரணங்களையும் இழந்துள்ளனர் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இன்னும் பெரிய பணியாளர் இருப்புகள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகளின் நிலையான வினியோகம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் மெக்கிரகோர்.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததால் ரஷ்யா அதன் மீது போரைத் தொடுத்தது. சுமார் பதினேழு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரின் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை. உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது அண்டை நாடான ரஷ்யாவுக்கு மிகப்பெரும் மற்றும் நேரடியான அச்சுறுத்தல் ஆகும். எனவே உக்ரைன் இதில் இணையக் கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ஆனால் உக்ரைன் ரஷ்யாவின் பேச்சைக் கேட்காமல் நேட்டோவுடன் இணைவதில் உறுதியாக இருந்ததால் ரஷ்யா அதன் மீது படையெடுத்தது. தற்போதுவரை இப்போரில் சுமார் ஒன்பது ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் 15779 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 3.44 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளைச் செய்துள்ளது அமெரிக்கா. அது மட்டுமல்ல 40 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளைத் தற்போதும் செய்திருக்கிறது. இது இந்தியாவின் ஒட்டு மொத்த ராணுவ பட்ஜெட்டில் 95% என்று கூறப்படுகிறது. 

நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஐஸ்லாந்து, லக்சம்பர்க், நார்வே, நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் ஆகிய 12 நாடுகள் 1949இல் உலகப் போருக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவக் கூட்டமைப்புதான் நேட்டோ. தற்போது இந்த நேட்டோ ஜெர்மனி, செக் குடியரசு, அல்பேனியா பெலாரஸ் உட்பட 30 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. 

இந்த அமைப்பின் ஒப்பந்தப்படி நேட்டோ உறுப்பு நாட்டின் மீது எந்த நாடாவது போர் தொடுத்தால் மற்ற உறுப்பு நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதுதான் அடிப்படை சாராம்சம். தனது அண்டை நாடான ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீது போர் தொடுக்கலாம் என்பதால்தான் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் இந்த அமைப்பில் சேர விரும்பியது உக்ரைன். அதே வேளை இந்த நேட்டோ நாடுகள் உக்ரைன் மூலம் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால்தான் அதைத் தடுக்க விரும்புகிறது ரஷ்யா. ரஷ்யாவின் இந்த எண்ணத்திற்கு மிக முக்கியக் காரணம் உண்டு. கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவு பெற்றபோது நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா அமைத்திருந்த வார்சா ஒப்பந்த நாடுகளில் பலவும் நேட்டோ படைகளில் இணைந்திருந்தன. மேலும் இந்த நேட்டோ அமைப்பு தனது பன்னாட்டு போர்த் தளவாடங்களை ரஷ்யாவின் அண்டை நாடுகளில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அமேரிக்கா உள்ளிட்ட போட்டி நாடுகள் தங்களது அதிகார எல்லைக்குள் வந்துவிடுமோ என்ற அச்சம் ரஷ்யாவுக்கு இருந்து வருகிறது. இதுவே ரஷ்யாவுக்கு நேட்டோ மீதான கோபத்தை அதிகரிக்கச் செய்தது. நேட்டோவைத் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்த்து வரும் ரஷ்யா, ஐரோப்பியக் கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான உக்ரைன் அதனுடன் இணைவதை  விரும்பவில்லை. உக்ரைன் இந்த உறுதியைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ரஷ்யாவின் கோரிக்கையை உக்ரைன் நிராகரித்ததே ரஷ்யா-உக்ரைன் போர் வெடிப்பதற்கான காரணம்.

இந்நிலையில் கீவ்வைத் தோல்வியில் இருந்து காப்பாற்றும் எந்த ஒரு முயற்சிக்கும் நேரடியான மேற்கத்தியத் தலையீடு தேவைப்படலாம். ஆனால் அது பேரழிவை நோக்கிச் செல்லும் என்று கூறியிருக்கும் அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் மெக்கிரகோர் “நாங்கள் தலையிட்டால் எங்களுக்கும் நேட்டோவிற்கும் ஏற்படும் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அணு சக்தித் தடுப்பில் பின்வாங்கக் கூடும். இது உலகை முழுவதுமாக மோதலின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தும். அதனால் நாங்கள் அதற்குத் தயாராக இல்லை. எனினும் தற்போது நாம் செய்யக் கூடிய புத்திசாலித்தனமான காரியம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே”, எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய பதிவுகள் :

அதிபர் பைடனின் மனத்திறன் குறைவதை அமெரிக்க ஊடகங்கள் மறைக்கின்றனவா?
குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை தடுக்க இந்திய தூதரகங்கள் முன்பு போலீசார் குவிப்பு -...
திசை மாற்றும் சமூக வலைத்தளங்கள்
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
மற்றவர்களுக்காக வாழாதீர்கள்! சாதாரண கார்களை ஓட்டும் அமெரிக்க பணக்காரர்கள் உலகத்திற்குச் சொல்வது என்ன...
தென்கொரியாவில் தடை செய்யப்படும் நாய் இறைச்சி உற்பத்தி! பல நூற்றாண்டு பழக்கத்திற்கு கொரியாவில் எதிர்ப...
BRICS கூட்டமைப்பில் இணைந்த ஆறு புதிய நாடுகள் - சர்வதேச அரங்கில் வலுவான அமைப்பாகிறது பிரிக்ஸ்.
தமிழர்களின் தாயக நிலத்தில் இருந்து பௌத்த சின்னங்களை அகற்ற மோடியிடம் தமிழர்கள் கோரிக்கை!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதர் சந்திப்பு: இந்திய-சீன உறவு பலப்படுமா...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *