விருந்தினர்கள் உடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வறையை உருவாக்கித்தர அனைத்து ஓட்டல்களுக்கும், நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கும் உத்தரவு – தமிழக அரசு எடுத்த முன்மாதிரி நடவடிக்கை

செய்தி சுருக்கம்:
வாகன ஓட்டுநர்களின் நலனில் அக்கறை கொண்டு நம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியானதாக பார்க்கப்படுகிறது. ஓட்டுனர்களின் முறையான ஓய்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அனைத்து ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களும் தமது கட்டிட வளாகத்தில் அல்லது அதிலிருந்து 250 மீட்டர் தொலைவுக்கு உட்பட்டு குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் டிரைவர்கள் தங்குவதற்கு ஓய்வறைகளை கட்டித்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரத்தில் தமிழ்நாடு கட்டிட மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் தனது சட்ட வரைவினில் கட்டிட வளர்ச்சி விதிகளில் சிறப்பு வாய்ந்த திருத்தம் ஒன்றினை செய்துள்ளது. அதன்படி அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஸ்டார் ஓட்டல்கள் தங்கள் விருந்தினர்களின் கார்களை பார்க்கிங் செய்வதற்கு ஒதுக்கியுள்ள இடத்தில் நிறுத்தப்படும் கார்களின் எண்ணிக்கை அடிப்படையில் வாகன ஓட்டிகள் தங்கி ஓய்வெடுத்துக் கொள்ள Dormitory எனப்படும் ஒருவர் தூங்குமளவு சிறிய வகையிலான ஓய்வறைகளை விரைவில் உருவாக்கித் தர அறிவுறுத்த பட்டுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
தமிழக அரசின் சமீபத்திய உத்தரவின்படி தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்ற அனைத் தங்கும் விடுதிகளும் ஓட்டல்களும் தாங்கள் நிர்மாணிக்கின்ற பார்கிங் வசதி இடத்தின் அளவு எண்ணிக்கை கொண்ட ஓய்வறைகளை உடனடியாக அமைக்க கூறியுள்ளது. விருந்தினர்களுடன் வருகின்ற வாகன ஓட்டிகள் நன்றாக தூங்கி ஓய்வெடுக்கும் வகையில் அந்த அறைகளை அமைத்துத்தர உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் படி ஓய்வறைகள் அமைக்கும் பொழுது 8 படுக்கைக்கு ஒன்று என்ற வீதத்தில் எளிதில் அனுகும்படியான கழிவறை மற்றும் குளியலறைகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அங்கு வந்து சேரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் எந்த நேரத்திலும் அறைகள் தயாராக இருக்கும்படி அந்த ஓய்வு அறைகளை அமைக்க கூறியுள்ளது. இந்த ஓய்வறைகள் தொகுப்பானது ஓட்டல் வளாகத்திற்குள் அல்லது அதிலிருந்து 250 மீட்டர் தொலைவிற்குள் இருக்குமாறு அமைத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு எடுத்த இந்த ஓட்டுனர்களின் நலன்சார்ந்த முன்னெடுப்பு நடவடிக்கைக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர், மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும், அனைத்து மாநில ஓட்டல்களும் விடுதிகளும் தங்களுடைய விருந்தினராக வருபவர்களின் வாகன ஓட்டிகள் சிரமப்படாத வகையில் சிறந்த முறையில் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள உதவும் வகையில் இதுபோன்ற ஓய்வறைகளை உருவாக்க வேண்டும். இதற்கென அனைத்து மாநிலங்களும் தங்கள் கட்டிட மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்ட விதிகளில் துணை சட்டங்கள் இயற்றி விரைவில் இந்தியா முழுவதும் இந்த வசதியை நடைமுறைக்கு கொண்டு வர உதவ வேண்டும்.
மேலும், அரசு முனைந்து நடவடிக்கை எடுத்து நம் நாட்டின் அனைத்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ஆங்காங்கே ஓட்டுனர்கள் கட்டணமின்றி ஓய்வெடுக்கும் வகையில் சிறந்த ஓய்வறைகளை உருவாக்கித் தர வேண்டும் எனவும் யோசனை கூறுகின்றனர் போக்குவரத்தில் அனுபவம் கொண்டவர்கள். இதில் Anil Chhikara என்பவர் கூறும்போது “ஓட்டுனர்கள் என்பவர்கள் வெறும் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, அவர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தை முதுகில் சுமந்து கொண்டு அதன் வளர்ச்சிக்காகவும் ஓடித்திரியும் நபர்கள். இவர்கள் நாட்டின் மேன்மைக்கு முக்கிய பங்களிப்பவர்கள். அவர்கள் தகுந்த முறையில் ஓய்வெடுக்கும் படியான வசதிகளை அனைத்து வகையிலும் அரசு உருவாக்கி தர வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறார். இதன் மூலம் பாதுகாப்பான பயணம் உறுதியாகும், அசம்பாவிதங்களோ, விபத்துக்களோ அதிகம் நிகழாமல் இருக்க இது போன்ற ஓய்வறை திட்டங்கள் உதவும் என்றும் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறை சார்ந்தவர்கள், பெரிய அளவுகளில் வாகனங்களை இயக்கும் Logistics நிறுவனங்கள் தங்கள் ஓட்டுனர்களின் அதிகபட்ச வாகனம் இயக்கும் நேரத்தில் திருத்தங்களை செய்து அவர்களின் பணிச்சுமையையும், மன உளைச்சலையும் குறைக்க முயல வேண்டும், அதனால் ஏற்படுகின்ற பெருமளவு விபத்துகளைத் தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.
பின்னணி:
சுற்றுலா தளங்களிலும் மற்ற சிறு பெரு நகரங்களிலும் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் மற்றும் ஸ்டார் ஹோட்டல்கள் தங்களிடம் வருகின்ற வாடிக்கையாளர்களின் ஓட்டுனருக்கு என்றுமே அறையை ஒதுக்குவதில்லை. அவர்கள் மீது எந்த அக்கறையும் காட்டுவதில்லை. வாகனங்களை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க பார்க்கிங் வசதி பெரிதாக செய்ய முன்வரும் ஓட்டல்கள் கூட ஓட்டுனர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை. ஓட்டுனர்கள் தங்கள் சுய செலவில் அறை எடுத்து தங்கவோ அல்லது காரிலேயே தூங்கிக் கொள்ளவோ நிர்பந்திக்க படுகிறார்கள். இது அவர்களுக்கு ஓய்வு அளிப்பதை விட அதிகமான அலுப்பினை தான் உருவாக்கும் என்பதே நிதர்சனம். இதனால் சாலையில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உருவாகிறது.
இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு கட்டிட மற்றும் நகர்ப்புற வசதி மேம்பாட்டு ஆணையம் இந்தியாவிலேயே முதல் முறை முன்மாதிரி சட்டம் ஒன்றை இயற்றி அதனை அனைவரும் விரைவில் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டின் அனைத்து ஓட்டல்களும் தங்கும் விடுதிகளும் தாங்கள் வைத்துள்ள கார் பார்க்கிங் அளவிற்கு இணையாக ஓட்டுனர்கள் தாங்க ஓய்வறைகளை உருவாக்கித் தர உத்தரவு, கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் எளிதில் அனுகும்படியாக இருக்குமாறு இந்த ஓய்வறைகளை அமைக்க வலியுறுத்தியுள்ளது.
டிரைவர்கள் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசின் இந்த புதிய மாற்றத்தை தமிழர்களாக நாமும் கைதட்டி வரவேற்போம்.