RIP Meaning in Tamil

English: RIP; R.I.P.; acronym of requiescat in pace
Tamil: ஆன்மா சாந்தி அடைக! ஓம் சாந்தி!
Explanation:
R.I.P. என்பது rest in peace என்பதன் சுருக்கப்பெயர் என்று பரவலாகச் சொல்லப்பட்டாலும் இது requiescat in pace என்னும் இலத்தீனச் சொற்றொடரின் சுருக்கப்பெயராகும். இந்தச் சொற்றொடருக்கு உண்மையில் “(அவர்/அவன்/அவள்) ஆன்மா சாந்தி அடையட்டும்” என்பதே பொருள்; ‘rest in peace’ என்பதன் சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பான “(அவர்/அவன்/அவள்) (உடல்) அமைதியாக இளைப்பாறட்டும் என்பதல்ல. இது இறந்தவர்களின் ஆன்மா குறித்த ஒரு விருப்பம் அல்லது வேண்டுதலாகும்.
R.I.P. என்னும் இந்தக் சுருக்கப்பெயர் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்லறைகளில் முதன்முதலில் காணப்பட்டது. இது 18-ஆம் நூற்றாண்டில் பரவலாக கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் பொறிக்கப்பட்டது. இங்கிலாந்துச் திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் அவர்களுடைய ஆன்மா மரணத்துக்குப் பின்னான வாழ்வில் அமைதி காணவேண்டும் என்பது ஒரு வேண்டுதலாக இருந்ததை இச்சுருக்கப்பெயர் காட்டுகிறது. கத்தோலிக்க, லுத்தரன், இங்கிலாந்துச் திருச்சபைப் பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் இன்றும் R.I.P. என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.
யாரேனும் இறந்த செய்தி வரும்போது—குறிப்பாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸப் போன்ற செயலிகளிலும்—பிற மதத்தினரும் RIP என்று மறுமொழி தருவதை அடிக்கடி பார்க்கலாம். தற்போது பலர் “RIP” என்று ஆங்கிலத்தில் எழுதுவதற்குப் பதிலாக “ஓம் சாந்தி!” என்றோ “ஆன்மா சாந்தியடைக!” என்றோ தமிழில் எழுதுவதைக் காணமுடிகிறது.
Examples:
1. R.I.P. என்பது ஒருவரின் மரணத்தைக் குறிப்பிடும்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் மறுமொழியாகும். (R.I.P. is a widely used response when someone’s death is mentioned.)
2. ஷ்யாம் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஓம் சாந்தி! (I can’t believe that Shyam is dead. R.I.P!)
3. நமது மேலாளர் குமார் நேற்றிரவு இறைவனடி சேர்ந்தார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைக! (Our manager Kumar attained the Lord’s feet last night. May he RIP!)
4. “ஓம் சாந்தி, என் நண்பரே!” என அவர் கண்ணீருடன் கூறினார். (“RIP, my friend!” he said through his tears.)
5. ஆர்.ஐ.பி. என்ற சுருக்கப்பெயருக்கு உடலை மையமாகக் கொண்ட விளக்கத்தை அளிப்பது தவறு. (Providing a body-centric interpretation of the acronym R.I.P. is incorrect.)
6. கிறிஸ்டினாவின் ஆன்மா சாந்தியடையட்டும்! (May Christina rest in peace (RIP)!)
7. RIP என்ற சுருக்கப்பெயர் பொதுவாக கல்லறைகளின் மீதே காணப்பட்டதால், ஆன்மாவிற்கான வேண்டுதலாக அது பயன்படுத்தப்படுவது மறைந்து உடலைப் பற்றி அது சொல்லப்பட்டதாக கருதப்பட்டுவிட்டது. (As the acronym RIP was found commonly on tombstones, its use as a prayer for the soul was lost and it was thought to be said about the body.)
8. கத்தோலிக்க, லுத்தரன், இங்கிலாந்துச் திருச்சபை, மற்றும் சீர்திருத்தத் திருச்சபைப் பிரிவுகள் இறந்தவர் ஒருவரது ஆன்மா நித்திய இளைப்பாறலையும் அமைதியையும் அடைய வாழ்த்த ஆர்.ஐ.பி.யைப் பயன்படுத்துகின்றன. (The Catholic, Lutheran, Anglican, and Methodist denominations use R.I.P. to wish the soul of a dead person eternal rest and peace.)