அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் புத்திசாலிகளாக இருப்பதில்லையா? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

உலகில் யாருக்குத்தான் அதிகமான சம்பளம் வாங்கவேண்டும் என்ற ஆசை இராது? பில்லியனர் ஆவதன் மூலமாக என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா? சொகுசு வீடு, சொகுசு வாகனம், ஏன் சொகுசுக் கப்பல், விமானம் என எல்லாவற்றையும் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்களையும் ஆடைகளையும் வாங்கலாம். உயர்தர மற்றும் வித விதமான உணவு வகைகளைச் சுவைக்கலாம். உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளையும் சுற்றிப் பார்க்கலாம். சொகுசு விடுதிகளில் விடுமுறையைக் கழிக்கலாம். விருப்பப்பட்ட எதையும் பணத்தைக் கொடுத்து உடனே வாங்கிவிடலாம். இப்படிப்பட்ட வாழ்க்கையை யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?
இருந்தால் அம்பானியைப் போல் இருக்க வேண்டும் என்று நம்மூர் முகேஷ் அம்பானியைப் பார்த்து ஏங்காதவர்கள்தான் யார்? தற்போது சுமார் 246 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பெரும் பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க்கை பார்த்துத்தான் ஏங்காதவர்கள் யார்? உலகின் அதிக சம்பளம் பெறுபவர்களில் டெஸ்லாவின் சிஇஓவான இந்த எலான் மஸ்க்தான் முதலிடத்தில் இருக்கிறார். அவருடைய சம்பளம் சுமார் 23.5 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.82 லட்சம் கோடி என்று சொல்லப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக ஆப்பிள் சிஇஓ டிம் குக் 770.5 மில்லியன் டாலர்களை சம்பளமாகப் பெறுவதாகவும் இதன் இந்திய மதிப்பு 6,000 கோடி என்றும் கூறப்படுகின்றது. ‘நம்ம ஊரு’ சுந்தர் பிச்சை அதாவது உலகின் தலைசிறந்த தேடுபொறியாக விளங்கும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சுமார் 1769 கோடி. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்கும் தமிழர் இவர் ஒருவர்தான்.
ஆனால் உங்களுக்குத் தெரியுமா? சிறந்த அறிவாற்றலும் திறமையும் கொண்ட பணியாளர்களைவிடப் பன்மடங்கு ஊதியம் பெற்றுச் செழிப்புடன் வாழும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பலரும் தங்கள் பணிகளில் அறிவோடும் திறமையோடும் இருப்பதில்லை என ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவர்களின் இந்தச் சமீபத்திய ஆய்வின்படி பில்லியனர்களாக உயர்ந்தவர்கள் அறிவுத்திறனைக் கொண்டிருப்பதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகச் சம்பளம் வாங்குபவர்களிடையே நிகழ்த்தப்பட்ட அறிவாற்றல் சோதனைகளில் குறைந்த சம்பளக்காரர்களை விடக் குறைவான மதிப்பெண்களே அவர்கள் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. யூரோப்பியன் சோசியல் ரிவ்யூ இதழின் ஜனவரி மாதப் பதிப்பில் வெளியான அந்த ஆய்வு முடிவில் மிக அதிக அளவு ஊதியம் பெறும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் அவர்களை விடப் பல மடங்கு குறைவாக ஊதியம் பெறுபவர்களை விடப் புத்திசாலித்தனத்திலும் செயல்திறனிலும் மிக மிகக் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த லிங்கோபிங் பல்கலைக்கழகம், இத்தாலியில் உள்ள ஐரோப்பியப் பல்கலைக்கழகம், நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடத்தப்பட்டுள்ளது. அந்தச் சோதனையின் தரவுகள் 1971 லிருந்து 1977 வரையிலும் 1980 லிருந்து 1999 வரையிலான காலகட்டங்களில் பதிவு செய்யப்பட்டவை. அந்தச் சோதனையானது ராணுவச் சேவையின் போது தங்களது பதினெட்டு-பத்தொன்பது வயதில் ஸ்மார்ட்டாக இருந்தவர்கள் தங்களது முப்பத்தைந்து – நாற்பத்தைந்து வயதில் தொழில் மற்றும் வேலை ரீதியில் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதைப் பற்றிய ஆய்வு.
இளம் வயதினராக இருந்தபோது ராணுவக் கட்டாயச் சோதனையில் ஈடுபட்ட ஸ்வீடனைச் சேர்ந்த 59,400 ஆண்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அவர்களுடைய மொழித்திறன், தொழில்நுட்ப அறிவு, இடம் சார்ந்த அறிவு, தொழில் பாதை, வருவாய் மற்றும் வேலை கௌரவம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்த போது ஆராய்ச்சியாளர்களுக்கு அந்தச் சோதனையில் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைத்தன.
பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 35 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களின் வருமானம் 64 ஆயிரம் டாலரைத் தாண்டும் வரை ராணுவச் சேவைக்கும் சம்பாதிக்கும் திறனுக்கும் இடையே வலுவான தொடர்பு இருந்ததாகவும் அந்தப் புள்ளிக்கு அப்பால் இந்தத் தொடர்பு கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டதாகவும் முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் ஊதிய விகிதங்கள் உயர்ந்த போது சமூகப் பொருளாதாரப் பின்னணி, கலாச்சாரம், ஆளுமைப் பண்புகள் மற்றும் அதிர்ஷ்டம் போன்ற பிற காரணிகளே முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கின்றன.
இதைப் பற்றிப் பேராசிரியர் மார்க் கியூஸ்நிக் கூறுவது என்னவென்றால், “திறமையற்றவர்கள் பெறும் அதிக ஊதியத்திற்கும் திறமை மிக்கவர்கள் பெறும் குறைவான ஊதியத்திற்கும் இடையிலான இடைவெளி என்பது சமூகத்தில் பணக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வருவாய் சமத்துவமின்மை அதிகரிப்பதற்கான எச்சரிக்கை மணி என்றும் இந்த வருவாய் சமத்துவமின்மை சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் அதிகம் என்றும் தனித்திறமைகள் மற்றும் புத்திசாலித்தனத்தைக் காட்டிலும் குடும்பச் சொத்துவளமும் அதிர்ஷ்டமும்தான் பலரை அதிக ஊதியத்துடன் உயர்பதவிகளில் வெற்றிகரமாக வலம் வரச் செய்கின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும் புத்திசாலித்தனம் துளியும் இல்லாமல் அதிக ஊதியம் வாங்கிக்கொண்டு உயர் பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் பல முடிவுகள் பல நேரங்களில் மக்கள் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறுகின்றார்.
தனி நபர்களுக்கு இடையேயான இந்தச் சிறிய ஆரம்ப வெற்றி வேறுபாடுகள் காலப்போக்கில் தீவிர ஏற்றத்தாழ்வுகளாக வளரக் கூடும் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அசாதாரண ஊதியத்தைப் பெறுபவர்கள் அவர்களின் பாதி ஊதியத்தைப் பெறுபவர்களை விடத் தகுதியானவர்கள் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள் கூறியிருப்பதுதான் உச்சபட்ச ஹைலைட். இது, ஒருவர் தனது பணியில் பெறும் வெற்றியோ அல்லது அதிக வருமானமோ, அது அவரது அதிசிறந்த அறிவாலும் தனித்திறமையாலும் கிடைப்பதுதான் என்னும் பொதுவான கருத்துக்குச் சவால் விடுவதாக அமைந்துள்ளது.
வெளிநாடுகளில் என்ன, நம்மூரிலும் இதே கதிதான் என்கிறீர்களா? இருக்கலாம். இருப்பினும், எந்த நாடாயிருந்தாலும் உயர்பதவிகளில் இருப்பவர்கள் திறமையானவர்களாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பதே எல்லோருக்கும் எப்போதும் நல்லது.