தொடர் கனவுகள்-ஏன்? எதற்கு?எப்படி?

தொடர்ச்சியாக உடல் பறப்பது, தளர்வது போல பற்கள் வெடிப்பது போல அல்லது மலை உச்சியிலிருந்து விழுவது,பள்ளி அல்லது வேலைக்கு தாமதமாக ஓடுவது, பஸ்,ட்ரெயின், பிளைட் மிஸ் செய்வது போன்ற கனவுகள் வருகிறதா? அந்த கனவுகள் என்ன சொல்ல வருகிறது என்று யோசித்தது உண்டா? தொடர் கனவுகள் பற்றி ஆய்வாளர்களும் மருத்துவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
“திரும்பத் திரும்ப வரும் கனவுகள் மிகவும் ஆழமான வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் உங்களில் ஒரு பகுதியாக இருக்கும் நிஜ வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மை கொண்ட தர்க்க சிக்கல்களைப் பற்றியதாக இருக்கும்” என்கிறார் கனவு ஆய்வாளர் டெய்ட்ரே பாரெட்.
ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலில் மனநலப் பிரிவில் உளவியல் விரிவுரையாளராக இருக்கும் டெய்ட்ரே பாரெட் மீண்டும் மீண்டும் ஒரே கனவு வருவது குழந்தை பருவத்தில் மிகவும் பொதுவானது ஆனால் சிலருக்கு இது முதிர்வயது வரை நீடிக்கும். மீண்டும் மீண்டும் வரும் கனவுகள் எப்போதும் ஒன்றுக்கொன்று அருகாமையில் நிகழாது – அவை மாதத்திற்கு பல முறை அல்லது வருடங்கள் இடைவெளியில் தோன்றும். இவை ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாக இருக்கலாம் அல்லது அதே வகையான காட்சிகள் அல்லது உணர்வுகளை மறுசுழற்சி செய்யலாம் என்று விவரிக்கிறார்.
ஈரானில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் மூத்த விரிவுரையாளரான மருத்துவர் மற்றும் உளவியலாளர் டாக்டர் நிரிட் சோஃபர்-டுடெக் கூறுகையில், “தொடர்ந்து வரும் கனவுகளின் பரவலை மதிப்பிடுவது கடினம். கடந்தகால கனவுகளை பற்றி கேட்கும் போது சிலர் நினைவாற்றல் சிதைவுகள், கற்பனை கனவுகள் என மற்ற விதமாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்”
“திரும்பத் திரும்ப வரும் எவையும் விசாரிக்கத் தகுந்ததாகும்” என்கிறார் மனநலம் மற்றும் தூக்கமருந்து ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் அலெக்ஸ் டிமிட்ரியு. மேலும் மக்களுக்கு பொதுவாகவே ஆழ்ந்த புரிதல் இல்லாத விசயத்தை ஐய்யத்தோடு தான் அனுகுவார். அதிலும் சங்கடமான அல்லது பயத்தை தூண்டும் விஷயங்களில் இருக்கும் கவலை உணர்வுகள் கனவுகளில் எதிரொலிக்கும். இந்த தொடர் கனவுகள் உங்களுக்கு எதையோ சொல்ல வருகிறது. அது என்னவென்று அலசி பார்ப்பது மனதிற்கு அமைதியை கொடுக்கும். இந்த கனவுகள் வருவது குறையலாமென நான் நினைக்கிறேன் என்கிறார்.
சில தொடர்ச்சியான கனவுகளுக்கு, அது கொடுக்கும் செய்தி நேரடியானது. பள்ளி அல்லது வேலைக்கு தாமதமாக செல்வது பற்றி நீங்கள் மீண்டும் மீண்டும் கனவு கண்டால், அந்த விஷயங்களுக்கு நீங்கள் தயாராக இல்லாததால் பதட்டப்படுகிறீர்கள் என விளக்கம் கொடுக்கிறார் டாக்டர் பாரெட்.
சங்கடமான சூழ்நிலையில் நின்று விடுவோமோ என்கிற கேள்வி, அவமானபட்டுவிடுவோமோ என்கிற தயக்கம், இயற்கை சீற்றங்கள் மீதிருக்கும் பயம்,மற்றவருடன் ஒப்பிட்டு பார்த்து வரும் போதாமைகள், ஏதேனும் கெட்டது நடந்துவிடுமோ என்கிற பதற்றம் போன்ற உணர்வுகளே இத்தொடர் கனவுகளுக்கு காரணம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள் டெய்ட்ரே பாரெட் மற்றும் அலெக்ஸ் டிமிட்ரியு .
சிலருக்கு பல ஆண்டுகளாக பள்ளி எல்லாம் முடித்த பின்பும் டெஸ்டில் ஃபெயில் ஆவது போல கனவுகள் தோன்றும் இது தோல்வி குறித்த பொதுவான பயம். மேலும் அதிகாரத்தில் இருக்கும் நபர்களால் மதிப்பிடப்பட்டு அதில் தோல்வி அடைவது பற்றிய பயத்தை பிரதிபலிக்கும்.
சிலருக்கு பல் இல்லாமல் போவது, உடைவது பற்றிய கனவுகள் நம்பிக்கையின்மை அல்லது பாதுகாப்பற்றதாக உணர்வதை, உடல்நலத்தை பற்றிய கவலைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
தொடர் கனவுகள் வருகிறதென்றால் இந்த கனவில் உள்ள நபர்களுடன் உங்களுக்கு என்ன தொடர்பு? கனவில் வரும் விஷயங்களைப் பற்றிய உங்கள் அச்சங்கள் மற்றும் நம்பிக்கை என்ன? உங்கள் வாழ்க்கையில் அதைத் தூண்டும் அல்லது அதனுடன் தொடர்புடைய முதல் ஐந்து விஷயங்கள் எவை? நீங்கள் உண்மையில் எதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள்? இந்த கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார் அலெக்ஸ் டிமிட்ரியு.
“கனவுகளை நண்பர்களிடம், உறவினரிடம் சொல்லி ஆராய்வதில் தவரேதும் இல்லை என்றே நினைக்கிறேன். நம்மை பற்றி நாமே காணாத விசயத்தை நம்மை தெரிந்த மனிதர்கள் பகுதாய்ந்து சொல்வதில் விடை கிடைக்கலாம்” என்று கனவுகளை பற்றி பேச தூண்டுகிறார் பாரெட்.
ஓர் நிகழ்விற்கு பின் அதனால் வரும் அதிர்ச்சியால் மன அழுத்தத்திற்கும் செல்லும் நோயின் பெயர் PTSD (போஸ்ட் ட்ரூமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர்) இந்த பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் நோய் கொண்டவர்களுக்கு தொடர் கனவுகள் நிறைய வரும்.
“மூளை நடந்த அதிர்ச்சி சம்பவத்தை அதை சார்ந்த எண்ணங்களை திரும்ப திரும்ப கனவுகளாய் ஓட விட்டு சரிசெய்ய பார்க்கும் யுக்தி அது. அப்படியான கனவுகளை எதிர்கொள்ள முடியாமல் திடுகென தூக்கத்தில் இருந்து எழுந்தால் திரும்பவும் அந்த கனவு தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். கொடுங்கனவுகள் வராமல் தடுக்க அதை எதிர்கொள்வதே சரியான மருத்துவம் ” என பாரெட் மனதைரியத்தை வளர்த்துக்கொள்ள சொல்கிறார்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதை ‘sleep apnea’ என்பார்கள். இந்நோய் உள்ளவர்கள் நீரில் மூழ்குவது, ராட்சத அலைகளில் சிக்கி மூச்சு திணறுவது, காற்றுக்காக மூச்சுத் திணறல், நீருக்கடியில் மூச்சுத் திணறல் போன்ற கனவுகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள். இவ்வகையான கனவுகள் உண்மையில் அவர்களுக்கு அந்த மூச்சுத்திணறல் இருப்பதால் வருகிறது.
மேலும் சிலருக்கு கனவுகள் சுற்றுச்சூழல் தூண்டுதல்களாலும் வரலாம். தூக்கத்தில் கேட்கும் கார் அலாரம் சத்தம் , குழாயில் சொட்டும் நீர் போன்ற சத்தங்கள் கூட கணுவுகளை தூண்டும்.
“உங்கள் கவலைகள் என்ன என்பதை நீங்கள் நன்கு உணர்ந்தவுடன், படுக்கைக்கு முன் அவற்றைப் பற்றி எழுதுவது எதிர்மறையான தொடர்ச்சியான கனவுகள் மற்றும் பொதுவாக மன அழுத்தத்தைப் போக்க உதவியாக இருக்கும்.எனது நோயாளிகளுக்கும் எனக்கும், டைரி எழுதுவதும், தியானமும் மிகவும் சக்திவாய்ந்த கருவியாக உதவியாக இருக்கிறது” என்கிறார் அலெக்ஸ் டிமிட்ரியு.
“ஆரோக்கியமான கனவு வாழ்க்கையின் அடிப்படையும் அடித்தளமும் ஆரோக்கியமான தூக்கத்தில் தொடங்குகிறது. இரவில் காபி அருந்துவது, பின் இரவுகளில் மது அருந்துவது, இரவு தூங்காமல் மொபைல் கண்ணுக்கு அருகில் வைத்துக்கொண்டு பார்ப்பது போன்றது மனம் உடல் இரண்டையும் பாதிக்கும். தூக்கமின்மை கவனசிதறலை உண்டாக்கும். அதனால் நல்ல தூக்கம் ரொம்பவும் அவசியம்” என்று காரணத்துடன் விளக்குகிறார் டிமிட்ரியு.