உலக மக்கள் தொகையில் பாதி பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்! 21 வருடங்களாக செய்யப்பட்ட ஆராய்ச்சி சொல்லும் உண்மை என்ன?!

பெருகிவரும் வாழ்க்கைச் சிக்கல்கள் மனிதர்தம் வாழ்வை கடினமாக்கி வருகின்றன. எல்லோருமே ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்படுவதை மனதளவில் ஏற்றுக்கொள்ளப்பழகிவிட்டனர். “எல்லாரும்தான் சிகரெட் குடிக்கறாங்க… தண்ணியடிக்காத ஆள் யாராவது உண்டா இப்பல்லாம்?”, ‘எனக்கு ஸ்ட்ரெஸ் அதிகம்.. அதனால இந்த பழக்கத்துக்கு அடிக்ட் ஆயிட்டேன்’ – இப்படிக் கூறுபவர்கள் நமது வட்டத்தில் அதிகரித்திருக்கின்றனர்.
மனதளவில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரிக்கையில் அவர்களை அடிமைப்படுத்தும், தற்காலிகமாக விடுவிக்கும் ஏதோ ஒன்றை அந்த பாதிக்கப்பட்டவர்கள் சென்றடைகின்றனர். மதுக்கடைகளும், செல்போன்திரைகளும் அதிகம் பயன்படுத்தப்பட இத்தகைய மன பாதிப்பே காரணம்.
புதிதாக செய்யப்பட்ட ஒரு ஆய்வு இந்த மன பாதிப்பு கடந்த இருபது வருடங்களில் பெருகி, உலகத்தில் இருக்கும் இருவரில் ஒருவர் தன் வாழ்நாளில் மன பாதிப்புக்கு உள்ளாகிறார் என்று நிறுவி உள்ளது.
மாபெரும் உளவியல் ஆய்வு!
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய உலகளாவிய ஆய்வில், இருவரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் மனநலக் கோளாறை உருவாக்குவதைக் கண்டறிந்துள்ளனர்.
UQ இன் குயின்ஸ்லாந்து மூளை நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்ராத் , ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ரொனால்ட் கெஸ்லர் மற்றும் 27 நாடுகளைச் சேர்ந்த அவர்களது சகாக்கள் ஆகியோர் இணைந்து 2001 மற்றும் 2022 க்கு இடையில் 29 நாடுகளில் உள்ள 150,000 க்கும் மேற்பட்ட வயது வந்தோரது தரவுகளைப் பகுப்பாய்வு செய்தனர். இந்த ஆய்வு அனைத்து பங்கேற்பார்களையும் தொடர்ச்சியான நேர்காணல்கள் செய்வதன் மூலம் செய்யப்பட்டது.
மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக செய்யப்பட்ட உளவியல் ஆய்வு இந்த ஆய்வின் முடிவுகள் உலகளாவிய அளவில் மனிதர்களிடம் மனநலக் கோளாறுகள் அதிகமாக இருப்பதை நிரூபிக்கின்றன, மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 75 வயதிற்குள் குறைந்தது ஒரு கோளாறையாவது உருவாக்குகிறார்கள் என்று அறிவிக்கிறது.
பெண்களிடையே காணப்படும் பொதுவான 3 மனநல கோளாறுகள்:
- மனச்சோர்வு
- குறிப்பிட்ட பயம் (அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பெரும் பய உணர்வு)
- ஏதேனும் அதிர்ச்சிக்கு பிறகான மனஉளைச்சல் (Post-traumatic stress – PTSD)
ஆண்களிடையே காணப்படும் பொதுவான 3 மனநல கோளாறுகள்:
- மதுவுக்கு அடிமையாதல்
- மனச்சோர்வு
- குறிப்பிட்ட பயம்
மனநல பாதிப்பு எப்போது ஏற்படுகிறது?
மனநலக் கோளாறுகள் பொதுவாக குழந்தைப் பருவம், வளர் இளமைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் தோன்றும் என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
ஏதேனும் ஒரு மனநல பாதிப்பு ஏற்படும் சராசரி வயது ஆண்களுக்கு 19 மற்றும் பெண்களுக்கு 20 என்று இந்த ஆய்வு அறுதியிட்டுச் சொல்கிறது!
இந்த கோளாறுகள் ஏன் உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அடிப்படை நரம்பியல் அறிவியலில் பற்றி நமக்கு புரிதல் தேவை என்கிற்னர் இந்த ஆய்வாளர்கள்.
ஆய்வு முடிவாகச் சொல்வதென்ன?
பெரும் மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மனநிலைக் கோளாறுகள் மிகவும் பொதுவானவை. சில மனநலக் கோளாறுகள் பாலினத்தால் வேறுபடும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.
இந்த மனக்கோளாறுகள் பொதுவாக உருவாகும் வயதைப் புரிந்துகொள்வதன் மூலம், பொது விழிப்பணர்வு பிரசாரங்கள் மூலம், ஆபத்தில் உள்ள நபர்களுக்கு சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கச் செய்யலாம்.
நம் ஊரைப் பொருத்தவரை -இத்தகைய மனக்கோளாறுகள் உருவாகும் – வளர் இளம் மற்றும் இளைய பருவத்தினர் அதிகமும் பாதிக்கப்படுவது அவர்கள் பார்க்கும் திரைப்படக் கதாநாயகர்களால்தான். பெற்றோர்கள் இந்த 13 முதல் 19 வயதில் இருக்கும் வளர் இளம் பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள், அவர்கள் அதிகம் நேரம் செலவழிக்கும் விசயங்களை கண்காணிக்க வேண்டியது அவசியம்.
போதை மருந்து மாபியாக்களை ஆதர்ச ஹீரோக்களாக கொண்டு வெளிவரும் திரைப்படங்கள் இந்த இளம் பிள்ளைகள் மனதில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சென்ற தலைமுறையைச் சேர்ந்த ஹீரோ ஒருவர் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு ஸ்டைல் காட்டியே அன்றைய இளம் தலைமுறையை சீரழித்தது வரலாறு. கவனிக்கப்படாத எந்த விசயமும் கெட்டழியும் என்பதே இதுநாள்வரை நாம் கற்ற பாடம். வளர் இளம் பிள்ளைகளை முதலில் கவனிப்போம், இத்தகைய மனநலப் பிரச்சனைகள் அவர்களை அண்டாமல் பாதுகாப்போம்.