டிஜிட்டல் யுகத்தில் பிரைவசி எனும் ஹம்பக்

டிஜிட்டல் யுகம் உலகின் மிகப்பெரிய வளர்ச்சி என்பது மறுக்க முடியாத உண்மை. கைபேசியும் இணையதளமும் அவைகளின் பிரயோகங்களும் மனிதனை அடிமையாக்கியிருக்கிறது என்று சொல்வதும் மிகையாகாது. வளர்ச்சியின் பலன்களில் நிறைய அனுபவித்தாலும் அதன் விளைவுகளையும் நாம் சந்தித்தே ஆகவேண்டுமல்லவா? ‘பிரைவசி’ என்பதை விட்டொழித்து வாழ்வதே இந்த டிஜிட்டல் யுகத்தின் விளைவு.
உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது இந்த நிமிடம் உங்கள் நிலை என்ன, எண்ணம் என்ன? தேவை என்ன? உணர்வுகள் என்ன என்பது எங்கேயோ ஓர் இடத்தில் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. எந்த ஊருக்கு செல்கிறோம், எங்கே சாப்பிடுகிறோம் என்பதை நாம் சமூக வலைதளத்தில் சொல்லாமலும் கூட நம் கால்தடத்தை நாம் எங்கேயோ பதிவு செய்துகொண்டே இருக்கிறோம். காரில் உபயோகிக்கும் மேப், செல் போன் டவர்,நாம் உபயோகிக்கும் டெபிட் கார்ட், ஜீ.பே, போன் பே போன்றவை சுலபமாக எந்த நிமிடம் எங்கிருந்தோம் என்பதை துல்லியமாக சொல்லிவிடும். தனியுரிமை இழப்பு என்பது தொழில்நுட்பத்தில் அதன் முன்னேற்றத்துடன் இந்த மனிதகுலம் எதிர்கொள்ளும் தவிர்க்க முடியாத ஆபத்துகளில் ஒன்றாகும்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் தகவல்களே மாபெரும் சொத்து. ஒவ்வொரு நாளும் மகத்தான அளவுக்கு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு செயலாக்கப்படுகிறது.இணையத்தில் நாம் வழங்கும் ஒவ்வொரு தகவலும் தானாகவே இந்த டிஜிட்டல் உலகின் சொத்தாக மாற்றப்படுகிறது. தொழில்நுட்பம் ஒரு நபருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இந்த அச்சுறுத்தல்கள் நமக்கு காத்திருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்டர்நெட்டில் கிடைக்கும் தகவல்களை நன்மைகளுக்காக பயன்படுத்தவும் முடியும் , தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சொத்துக்களை ஹேக் செய்யவும் முடியும். தனிநபர்கள், சிறுநிறுவனங்கள் மட்டுமல்ல, இப்போது பல கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் தங்களுக்கான வர்த்தகத்தை சமூகதளங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். தரவுகள் ஓர் நிறுவனத்தில் தலைமை, கொள்முதல், உற்பத்தி, இணக்கம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட வணிகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேவைப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்குவதற்கும் பரந்த அளவிலான தரவுகளை நம்பியுள்ளன.
ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்புத் தரவுகளில் உள்ள மோசடிகள் பற்றி நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.
வங்கிகளில் நம் அடையாளத்தை உறுதிசெய்துக்கொள்ள பயன்படுத்தும் பிறந்த நாள் போன்றகளை பேணப்பட வேண்டிய தகவல்களையும் பொதுவில் வைத்து விடுகின்றோம். முகப்புத்தகத்தில் ஹேக்கர்கள் நண்பர்களுக்கு பணம் கேட்டு மெசேஜ் செய்வது, போனில் அழைத்து பேங்க் விவரங்கள் பெற்று அதில் திருடுவது, போட்டோ மற்ற விவரங்கள் வைத்து புது ப்ரொபைல் திறந்து நண்பர்களை ஏமாற்றுவது, போனில் பேசுவதை ஒட்டு கேட்பது என தினப்படி வாழ்வில் சாதாரண மனிதர்கள் நாம் நிறைய சவால்களை சந்திக்கிறோம். இவை அனைத்தும் எதோ ஓர் இடத்தில் நாமே நம்மை பற்றிய தகவல்களை அதிகமாக வெளியிடுவதால்தான் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறோம்.
இன்சூரன்ஸ் பணத்தை திருடுதல்,பேங்க் அக்கௌண்டில் இருந்து பணம் திருடுதல், கிப்ட் வவுச்சர்களை திருடுதல், மற்றவர் புகைப்படத்தை உபயோகித்து ஆன்லைன் காதல் திருமணம் என ஏமாற்றுதல், அந்தரங்க விஷயங்களை தெரிந்துகொண்டு பயமுறுத்தி பணம் பறித்தல் என உலகம் முழுதும் இம்மாதிரியான ஏமாற்று வேலைகள் பல நடந்துகொண்டிருக்கின்றன.
வர்த்தக உலகம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் விளம்பரங்களை வழங்க மூன்றாம் தரப்பு குக்கீகளை வைத்து நுகர்வோர் பற்றிய ரகசியத் தரவைப் பெற, பல இணைய உலாவிகளை பயன்படுத்தி மிக விரிவான தகவல்களின் அடிப்படையில் விளம்பரங்களை விளம்பரப்படுத்தி வந்தது.
இப்போது இந்த தந்திரங்களை பயன்படுத்துவது தனியுரிமை மற்றும் பொது அவநம்பிக்கை தொடர்பான சர்ச்சைகளை ஏற்படுத்துவதால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்திகள் திசை மாறி வருகின்றன.
இந்தியாவின் தரவு தனியுரிமை சட்டங்கள் வேகமாக மாறி வருகின்றன என்பதை நினைத்து ஆறுதல் அடைந்தாலும் தகவல்களை சேகரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களை தடைசெய்யவில்லை. தகவல்கள் திருடுவது குறையாது தகவல் திருட்டில் எது சரி எது தவறென பகுத்து கூறுகிறது சட்டங்கள். இதன் விளைவாக, தனிப்பட்ட தரவுகளின் மதிப்பு உயர்ந்து, கடுமையான தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
ள்ளி விவரங்கள் தெரிவிப்பது என்னவென்றால் உலகளவில்
- 85 சதவீதம் பேர் தங்கள் ஆன்லைன் தனியுரிமையைப் பாதுகாக்க இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறார்கள், அவர்களில் 71 சதவீதம் பேர் மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- 61 சதவீத மக்கள் வசதிக்காக தரவு தனியுரிமையை தியாகம் செய்ய தயாராக உள்ளனர்.
- 68 சதவீத மக்கள் தங்கள் அடையாளம் திருடப்பட்டதா என்பதை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்று தெரியவில்லை என கூறுகின்றனர்
- 94 சதவீத நிறுவனங்கள், தரவு சரியாகப் பாதுகாக்கப்படாவிட்டால், வாடிக்கையாளர்கள் தங்களிடம் வணிகம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.
டாக்சிங்
Doxxing என்பது இணைய விழிப்புணர்வு மற்றும் ஹேக்டிவிசத்துடன் தொடர்புடைய ஒரு சொல்.டாக்ஸிங்கின் அர்த்தம், யாரோ அல்லது எதையாவது பற்றிய சில தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து அதை வேறொரு தரப்பினருக்கு விற்பது அல்லது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மிரட்டி பணம் பறிப்பது. உலகளவில் தீங்கிழைக்கும் நோக்கத்திற்காக தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது மற்றும் வெளியிடுவது ஆகிய இரண்டையும் தடைசெய்யும் சமூக வழிகாட்டுதல்களில் டாக்ஸிங்கை தெளிவாக வரையறுக்கின்றனர். டாக்சிங் புகாரளித்தால் தண்டனை உண்டு. 2021 ஆம் ஆண்டில், ஹாங்காங் அதிகாரிகள் தரவு தனியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து , ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், HK$1 மில்லியன் ($129,000 US) வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியாவை மையமாகக் கொண்டு UN Women இன் 2020 அறிக்கை, பெண்கள் ஒரே நேரத்தில் ட்ரோலிங், டாக்ஸிங் மற்றும் சமூக ஊடக ஹேக்குகள் போன்ற பல வகையான ஆன்லைன் வன்முறைகளை அனுபவிப்பதாகக் கண்டறிந்துள்ளது.
ஹெல்த்கேர் துறையில் மோசடி
ஹெல்த்கேர் துறையானது டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி மாபெரும் பாய்ச்சலை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனை சங்கிலிகள், ஆய்வகங்கள் மற்றும் தனியார் கிளினிக்குகள் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் நோயாளிகளின் தரவுகள் டன் கணக்கில் உருவாக்கப்படுகின்றன.
“டிஜிட்டல் ஹெல்த் அல்லது எலக்ட்ரானிக் ஹெல்த் ரெக்கார்ட்ஸ் (EHR) நோயாளியின் பெயர், வயது, தொடர்புத் தகவல், முக்கிய அறிகுறிகள், விசாரணை அறிக்கைகள், தற்போதைய மற்றும் கடந்தகால வரலாறு, ஒவ்வாமை மற்றும் தற்போதைய மற்றும் கடந்தகால சிகிச்சை விவரங்களின் தரவை பராமரிக்கிறது. ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்கள் அனைத்தையும் தடுப்பது சவாலான பணியாகும்,” என்கிறார் ஜூபிடர் மருத்துவமனையின் சிஐஓ சந்திரசேகர் ரெட்டி.
ஜெர்மன் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான Greenbone Networks சமீபத்தில் இந்திய நோயாளிகளின் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மருத்துவ கோப்புகள் மற்றும் 107 மில்லியன் மருத்துவ படங்கள் இணையத்தில் இலவசமாக அணுகக்கூடியதாக இருப்பதை வெளிப்படுத்தியது. இது நோயாளியின் பெயர், பிறந்த தேதி மற்றும் ஐடி, மருத்துவ நிறுவனத்தின் பெயர், நோய், மருத்துவர் பெயர்கள் மற்றும் பிற முக்கிய விவரங்கள் போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது. கசிந்த தரவுகளில், மும்பையின் புகழ்பெற்ற இரண்டு சுகாதார வசதிகளுக்குச் சொந்தமான மருத்துவப் பதிவுகள் உள்ளன – ப்ரீச் கேண்டி மருத்துவமனை மற்றும் மருத்துவ இமேஜிங் வழங்குநரான உட்கர்ஷ் ஸ்கேன்ஸ், நிறுவனம் விசாரணையின் போது கண்டறிந்தது. படங்களைச் சேமிக்கும் சர்வர்களைப் பாதுகாப்பதில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சுகாதாரப் பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் சுமார் 10 சதவீத கிளவுட் சேவைகள் அதிக ஆபத்துள்ள வகையிலும், 70 சதவீதம் நடுத்தர ஆபத்து வகையிலும் அடங்கும் என்று தரவு தெரிவிக்கிறது.
டாக்டர் நரேஷ் யல்லபிரகடா, CIO, KIMS மருத்துவமனை “ தரநிலைகளை செயல்படுத்துவதில் பங்குதாரர்களுக்கு ஊக்கத்தொகை, தரவு பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அனைத்து பங்குதாரர்களுக்கும் விழிப்புணர்வு, அனைத்து தொழில்நுட்ப வழங்குநர்களுக்கும் அவர்களின் தீர்வுகளை விற்கும் முன் சான்றிதழ்கள் மற்றும் அவ்வப்போது தரநிலைகள் செயல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை சரிபார்க்க உள் மற்றும் வெளிப்புற தணிக்கைகள் வேண்டும் இது பாதுகாப்பை பலப்படுத்தும்” என்கிறார்.
தேசிய டிஜிட்டல் ஹெல்த் புளூபிரிண்ட் (NDHB) மூலம் அரசாங்கத்தால் அனைத்து முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில், எதிர்காலத்தில் இந்தியாவில் ஹெல்த்கேர் வழங்கப்படக்கூடிய ஒரு கட்டமைப்பை வகுப்பதில் அதற்கு ஆதரவளிக்கும் தனியார் நிறுவனங்களும், தேவையான அனைத்து பங்குதாரர்களும் அவசியம் அமெரிக்காவின் HIPAA, ஐரோப்பாவின் GDPR போன்ற விதிமுறைகள் கட்டாயமாக்குவதில் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். இதனால் சுகாதார சேவையை மிகவும் திறமையான, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வழியில் வழங்க முடியும்.
இன்ஸ்டாகிராம் எனும் கிடங்கு
சமீபத்தில் வெகுவாக மக்களை கவர்ந்த சமூக வலைதளத்தில் இன்ஸ்ட்ராகிராம் முக்கியமானது. இதில் 30 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி 7 கோடி புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இதைப் பயன்படுத்துபவர்களில் 53 சதவீதம் பேர் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய ஆய்வில் இன்ஸ்டாகிராமின் தானியங்கு கண்டறிதல் கருவியில் குறைபாடுள்ள அல்காரிதமால் சமூகத்திற்கு கேடான விஷயங்கள் சுலபமாக பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமின் அல்காரிதம்கள், குறைந்த வயதுடைய பாலியல் உள்ளடக்கத்தை விற்கும் கணக்குகளுடன் பெடோஃபைல்களை தீவிரமாக இணைத்து வழிகாட்டுகின்றன. இந்தக் கணக்குகள், குழந்தைகள் தங்களுக்குத் தீங்கு விளைவிப்பது மற்றும் விலங்குகளுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் உட்பட சட்டவிரோதமான விஷயங்களை வெளிப்படையாக விளம்பரப்படுத்துகின்றன மற்றும் வழங்குகின்றன. அத்தகைய உள்ளடக்கத்திற்கான எச்சரிக்கை பாப்-அப் இருந்தபோதிலும், இன்ஸ்டாகிராம் அதை முழுவதுமாக அகற்றவில்லை. இதில் அக்கணக்கை உபயோகிக்கும் ஆட்களை அடையாளப்படுத்தி பாதுகாப்புத்துறை அவர்களை கைது செய்ய, அரசு தண்டிக்க இந்த டிஜிட்டல் டேட்டா நிறுவனங்கள் தரவுகளை பகிரலாம் அல்லவா? அப்படி தரவுகள் பகிர்ந்த செய்திகள் எங்குமே நாம் பார்க்கவில்லை.
உண்மையில் டிஜிட்டல் தரவுகள் அனைத்தும் சேகரிக்கப்படுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, சந்தையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் அதிகமான பொருட்களை விற்பனை செய்யவே அல்லவா? இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கலாம். ஒருவர் அவர்களுக்கு தேவையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் தேவைகள் அலையாமல் சட்டென கைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், இதில் ‘சுயாட்சி’ பற்றிய கேள்வியை எழுகிறதே! இன்றைய மார்க்கெட்டிங்கில் மிகை-இலக்கு இயல்பு.ஒரு பொருள் வாங்குவதற்கு முன் சிலதை பார்த்து அலசி ஆராய்ந்து வாங்குவோம். இப்போது இந்த இடத்தில் நம்மை ஒருவர் ‘மானிபுலேட்’ செய்து நமக்கு தேவையில்லாததை தேவையென ஏமாற்றி விற்பது தவறல்லவா? இப்படி டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏமாற்றி விற்பனை செய்வதை ஊக்குவிக்கிறதல்லவா?
இங்கே நமக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்கிற கேள்வி எழுகிறதே.
தெளிவான பதில் இல்லை, ஆனால் டிஜிட்டல் யுகத்தில் தனியுரிமையை நாம் கருத்தில் கொள்ளும்போது தேர்வு சுதந்திரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது, கேள்வி என்னவென்றால், மக்கள் இணையத்தைப் பயன்படுத்தி அவர் சுதந்திரத்தில் அவர் “தனியாக இருக்க முடியுமா?” இக்கேள்வியிலும் ஓர் கேள்வி எழுகிறது. தன்னை பற்றி விவரங்களை வெளியிடாது இணையத்தை பயன்படுத்துவோர் மற்றவரை துன்புறுத்தும் வகையில் அவரை எவ்வாறு அடையாளபடுத்துவது?அவரை யார் என்னவென்று அறியாமல் எப்படி புகார் அளிப்பது?
டிஜிட்டல் யுகத்தில் பிரைவசியுடன் தனிமனித ஒழுக்கமும் திடமாக வலியுறுத்தப்படவேண்டும். உடல் தோற்றத்தில், ஆடை அலங்காரத்தில் ஒழுக்கத்தை சொல்லி கொடுக்கும் சமூகம் மனதளவில் ஒழுக்கத்தை கற்று தருவதில் பின்தங்கி நிற்கிறது. அடையாளம் தெரியவில்லை என்றாலும் அங்கேயும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென்பதை பள்ளிகளிலும், வீட்டிலும் குழந்தைகளுக்கு சொல்வதே இங்கே தீர்வாக இருக்க முடியும்.