கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்

செய்தி சுருக்கம்:
கர்ப்பந்தரித்தல் பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணம். அநேகர் மிகவும் எதிர்பார்த்திருக்கிற ஆனந்தமான நேரம் இதுவாகும். தாயாகப் போகிறேன் என்ற செய்தி, குறிப்பிட்ட பெண்ணுக்கு மட்டுமல்ல, கணவருக்கும் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே மகிழ்ச்சியானதாகும். கர்ப்ப காலத்தின்போது பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். கர்ப்பமுற்றிருப்பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். சில அறிகுறிகள் பொதுவாக காணப்படுபவையாக இருப்பினும் மருத்துவரை அணுகி, கர்ப்பத்தை மருத்துவரீதியில் உறுதிப்படுத்திக்கொள்ள இந்த அறிகுறிகள் உதவும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
பெண் கர்ப்பம் தரித்தது முதல் உரிய மருத்துவ கவனிப்பு பெற வேண்டும். சிலர் பொதுவான அறிகுறிகளையோ, வேறு உடல்நல குறைவுகளுக்கான அறிகுறிகளையோ கர்ப்பந்தரித்திருப்பதாக தவறாக நினைத்துவிடக்கூடும். ஆகவே, கர்ப்பமுற்றிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் குறித்து தெளிவாக அறிந்துகொள்வது முக்கியமாகும். இந்த அறிகுறிகள் பெண்ணுக்கு பெண் மாறுபடலாம். ஆகவே, இந்த விஷயத்தில் ஒருவரது அனுபவத்தை இன்னொருவர் தன்னுடைய அனுபவங்களோடு ஒப்பிட்டு குழப்பமடையக்கூடாது. மாதவிடாய் தவறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் வலி, அசதி, குமட்டல் உள்ளிட்டவை கர்ப்பமுற்றிருப்பதற்கான அறிகுறிகளாகும்.
பின்னணி:
கருத்தரித்தல் நடந்ததும் பெண்ணின் கருமுட்டையானது கருப்பையின் சுவரில் ஒட்டிக்கொள்ளும். இதனால் சிறிய அளவில் இரத்தப்போக்கு ஏற்படலாம். உள்ளாடையில் ஆங்காங்கே இரத்தப்பொட்டுகள் காணப்படும். கருவுறுதலுக்கான இரத்தப்போக்கு என்று இதைக் கூறுவர். சினை முட்டை, கருத்தரித்ததிலிருந்து ஆறு முதல் பன்னிரண்டு நாள்களுக்கு பின்பு இரத்தப் பொட்டுகள் தெரியும். இதுபோன்று இன்னும் பல்வேறு அறிகுறிகள் தென்படும்.
மாதவிடாய் தவறுதல்
கர்ப்பமுற்றிருப்பதற்கான ஆரம்பகால அறிகுறி மாதவிடாய் தவறுவதாகும். கருத்தரித்தல் நிகழ்ந்ததும் உடல், சினைமுட்டை உருவாவதை தடுக்கும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. கருத்தரித்ததும் நிற்கும் மாதவிடாய், குழந்தை பிறக்கும் வரைக்கும் மீண்டும் வருவதில்லை. வயது, திருமண உறவு காரணமாக கருத்தரிக்கும் சூழ்நிலையில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் தவறுதல், மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்துகொள்வதற்கான முக்கிய அறிகுறியாகும். சிலருக்கு மனஅழுத்தம், அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது உழைப்பு, உணவு பழக்கம், ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட காரணங்களாலும் மாதவிடாய் தவறக்கூடும். இவற்றை மருத்துவரே உறுதி செய்ய முடியும்.
வெள்ளைப்படுதல்
பெண்ணுறுப்பிலிருந்து வெள்ளையான பால்போன்ற திரவம் கசியக்கூடும். கருவுற்றதும் பெண்ணுறுப்பின் சுவர்கள் தடிமனாவதை தொடர்ந்து இது நிகழும். பெண்ணுறுப்பின் சுவர்களில் உள்ள செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த திரவ கசிவு ஏற்படுகிறது. கர்ப்பகாலம் முழுவதும் வெள்ளைப்படுதல் தொடரக்கூடும். பொதுவாக இது ஆபத்து அல்ல; சிகிச்சையும் தேவையில்லை. ஆனால், வெள்ளைப்படும்போது துர்நாற்றம் வீசினால் அல்லது எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் வேறு பாதிப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிவது அவசியம்.
அடிக்கடி சிறுநீர் பிரிதல்
கர்ப்பிணிகள் மாதவிடாய் தவறுவதை உணரும் முன்னரே அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய அவசியம் நேரக்கூடும். கருவுற்றதும் இரத்தத்தின் அளவு உயர்வதால் சிறுநீர் அதிகமாக பிரியும். கர்ப்ப காலத்தில் உடலில் இரத்தம் அதிக அளவு உற்பத்தியாகும். ஆகவே, சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து பிரிக்கும் கழிவுகளின் அளவும் அதிகரிக்கும். எந்த அளவுக்கு இரத்த உற்பத்தி அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு பிரியும் சிறுநீரின் அளவும் அதிகரிக்கும்.
மார்பகங்களில் வலி
கருவுற்றதும் பெண்களின் உடலில் ஹார்மோன் அளவு வேகமாக மாறுபடுகிறது. ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மார்பகங்களில் வீக்கம், ஊசி குத்துவதுபோன்ற உணர்வு ஏற்படலாம். மார்பக காம்புகள் ஒட்டிய பகுதி கறுப்பாகும். நாளடைவில் மார்பகங்களில் வலி குறையும்.
குறிப்பிட்ட உணவின்மீது நாட்டம்
கர்ப்ப கால ஆரம்பத்தில் உணவு சாப்பிடுவது சற்று சிக்கலாகும். சிலருக்கு குறிப்பிட்ட உணவின் மீது அடங்காத ஆசை ஏற்படும். வேறு சிலருக்கு எப்போதும் பசியாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். சில உணவு பொருள்கள், சுவைகள் மீது அதிக பிரியம் ஏற்படும். சில சுவைகள்மீது திடீர் வெறுப்பு ஏற்படும். முன்பு விரும்பி சாப்பிட்ட உணவு பொருள்கள் மீது கர்ப்ப காலத்தில் வெறுப்பு தோன்றக்கூடும்.
குமட்டல்
பொதுவாக கருவுற்ற பெண்களால் மார்னிங் சிக்னஸ் என்று அழைக்கப்படுவது குமட்டல் ஆகும். வாந்தி வருவதுபோன்ற உணர்வு பலருக்கு ஏற்படும். சிலர் வாந்தியெடுப்பர். இதற்கான திட்டமான காரணம் எதுவும் விளங்கவில்லை. ஹார்மோன்களின் விளைவினால் குமட்டல் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இது காலையில் மட்டுமல்ல, மதியம், இரவு என்று ஒருநாளில் எந்நேரமும் உண்டாகலாம். கர்ப்பகாலத்தில் வாந்தியெடுப்பது இயற்கைதான் என்றாலும் கருவுற்ற தாயின் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அசதி
கர்ப்பிணிகள் அசதியாக உணருவது இயற்கை. கருவுற்ற முதல் வாரத்திலேயே இது தெரியும். கருவுற்றதும் புரோஜெஸ்டீரான் ஹார்மோன் அதிக அளவு சுரக்கும். இரத்தத்தில் சர்க்கரை, இரத்த அழுத்தம் இவை குறையும். உடலில் இரத்தம் அதிக அளவு சுரக்கும். இவை அனைத்துமே உடல் அசதியடைவதற்கான காரணங்களாகும். கருவுற்ற பெண்கள் போதிய அளவு ஓய்வெடுக்கவேண்டும். புரத சத்து, இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கருவுற்று மூன்று மாதங்களானதும் சிலருக்கு அசதி குறையும். ஆனால் பலருக்கு ஆறாவது மாதம் கடந்ததும் மீண்டும் அசதி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மலச்சிக்கல்
கர்ப்பிணிகளின் உடலில் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன் அதிகரிக்கும். புரோஜெஸ்டீரான் அதிகரிப்பதால் சாப்பிட்ட உணவு சிறுகுடலில் மெதுவாக நகரும். உணவு மெதுவாக செரிப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிக அளவு நீர் பருகவேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவு பொருள்களை சாப்பிடவேண்டும்; உடற்பயிற்சி செய்யலாம்.
கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனையும் தொடர் மருத்துவ கண்காணிப்பும் அவசியம்.