fbpx
LOADING

Type to search

அறிவியல் இந்தியா உடல் நலம் உலகம் தொழில்நுட்பம்

மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவும் பில் ட்ராக்கர்: இந்திய வம்சாவளி மாணவி சாதனை

லாரலில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் இந்த ஆண்டு நடந்த ஐஇஇஇ(IEEE) ஒருங்கிணைந்த ஸ்டெம் கல்வி மாநாட்டில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த உயர்நிலைப் பள்ளி உயிரியல் மருத்துவப் பொறியியல் மாணவியான அர்ச்சிஷ்மா மர்ராப்பு மருந்துகளை நோயாளிகள் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவும் பில் ட்ராக்கர் என்னும் கண்டுபிடிப்பு பற்றிய விளக்கப் படத்தை வழங்கினார். இதற்காக இந்த மாநாட்டில் அவர் டெக்னிக்கல் எக்சலென்ஸ் விருதைப் பெற்றார். 

மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே தனது தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற அர்ச்சிஷ்மாவின் விருப்பமே இந்தப் புதிய கண்டுபிடிப்பான பில் ட்ராக்கரை நமக்கு அளித்துள்ளது. நோயாளிகள் தங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ள நினைவூட்டும் இந்தத் தானியங்கி மாத்திரை கண்காணிப்பு சாதனம்  உட்பட குறைந்த விலை புதுமைகளை அவர் உருவாக்க வழி வகுத்துள்ளது. அவரது உருவாக்கமான இந்தப் பில் ட்ராக்கர் அமெரிக்காவின் மிகப்பெரும் மருந்து நிறுவனமான சிவிஎஸ் உட்பட பல மருந்து நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவரது பில் ட்ராக்கரில் அல்ட்ராசோனிக் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளைக் கண்காணிக்கும். தவிர்க்கப்பட வேண்டிய அளவுகள் மற்றும் தவறானப் பயன்பாட்டைக் கண்டறிவதற்கான ஏ.ஐ வடிவப் பகுப்பாய்வு, பக்க விளைவுகளைத் தடுக்கும் வழிகளைப் பயனர்களுக்கு வழங்க சாட் ஜிபிடி உட்பட பல்வேறு அம்சங்களுடன் கூடிய மொபைல் பயன்பாடு இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ராக்கர் மூலம் மருந்தகங்கள் மருந்துகளைச் சரியாகப் பரிந்துரைக்க முடியும். இதனால் தீவிரமான பாதிப்புகளை தடுக்க முடியும் என்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது. 


தானியங்கி மாத்திரை ட்ராக்கர் கருவியை உருவாக்கும் முன் அர்ச்சிஷ்மா நடத்திய ஆய்வில் இதே போன்ற சாதனங்கள் மிகவும் விலை உயர்ந்தவை எனக் கண்டறிந்துள்ளார். மேலும் இதற்காகச் சிலர் 100 டாலருக்கும் அதிகமாக மாதச் சந்தா செலுத்துவதும் பலருக்கு இது அணுகவே முடியாததுமாக இருந்ததை அவர் கண்டுபிடித்துள்ளார். இதுவே அவரது இந்த கண்டுபிடிப்புக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளது. பல செய்முறைகளுக்குப் பிறகு இந்தக் கண்டுபிடிப்பின் வடிவமைப்பில் அவர் இறங்கியுள்ளார். இந்தத் தானியங்கி டிராக்கரானது நோயாளிகள் மாத்திரை சாப்பிடும் நேரம் வரும் போது ஒளிரக்கூடிய  எல்இடி பல்புகள் மற்றும் பஸ்ஸர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மருந்து பாட்டிலில் உள்ள பார் குறியீட்டை ஸ்கேன் செய்யவும் இது பயனர்களை அனுமதிக்கிறது. அதன்பின் எத்தனை மாத்திரைகள் எடுக்க வேண்டும் மற்றும் எப்பொழுது அவற்றை எடுக்க வேண்டும் என்ற தகவல்களைத் தருகிறது. அத்துடன் மருந்துச் சீட்டில் உள்ள தகவலைத் தானாக நிரப்பிக் கொள்ளும். 

இந்தப் பில் ட்ராக்கர் நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்ளும் நேரம் வரும்போது எல்இடியை ஒளிர விடுவதோடு அவர்களுக்குத் தொலைபேசியில் அறிவிப்பும் செய்கிறது. மாத்திரைகளை எடுக்கப் பயனர் பாட்டில் மூடியில் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள் கீழே ஒரு திறப்பிலிருந்து வெளியே வருகின்றன. பின்னர் எடுக்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கை மற்றும் மருந்து நேரம் ஆகிய தகவல்கள் பயன்பாட்டுச் சீட்டில் பதிவு செய்யப்படுகின்றன. பல நினைவூட்டல்களுக்குப் பிறகும் மருந்து எடுக்கப்படாவிட்டால் தானாகவே இந்த ட்ராக்கர் சம்பந்தப்பட்ட  மருத்துவர் அல்லது பராமரிப்பாளரிடம் அது குறித்துத் தெரியப்படுத்துகிறது.

 இதில் இன்னும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மருந்தைப் பொருத்து நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில உணவுப் பொருள்களையும் இது பட்டியலிடுகிறது. மேலும் பக்க விளைவுகள் மற்றும் நிதிச் சிக்கல்களால் மருந்துகளை உட்கொள்ள முடியாத நிலை பயனர்களுக்கு ஏற்பட்டிருந்தால் அவற்றையும் இதில் பதிவு செய்யலாம். அவற்றுக்கான மாற்று வழிகளை இச்சாதனம் பரிந்துரை செய்வதோடு அவற்றை சம்பந்தப்பட்ட மருத்துவர் அல்லது பராமரிப்பாளரிடமும் தெரிவித்து விடுகின்றது. இந்தத் தானியங்கிக் கண்டுபிடிப்பை முதலில் சிவிஎஸ் நிர்வாகிகளிடம் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கினார் அர்ச்சிஷ்மா மர்ராப்பு. உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்ள மறந்து அல்லது தவறாகப் பயன்படுத்தி உயிரிழக்கிறார்கள் எனத் தெரியவருகிறது. இந்நிலையில் அர்ச்சிஷ்மாவின் இந்தப் புதிய சாதனை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த அர்ச்சிஷ்மா மர்ராப்பு இச்சாதனை குறித்துக் கூறுவது என்ன தெரியுமா? “நான் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கி, மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியை இணைப்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சில சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுகாதாரப் பராமரிப்பில் பல சவால்கள் உள்ளன, அவற்றை எளிய, மலிவான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீர்க்க முடியும். நாம் ஏன் பயோமெடிக்கல் சாதனங்களை மலிவான விலையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியாது என்று நினைத்த நான் சமூகப் பொருளாதாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றை உருவாக்க புறப்பட்டேன், அதில் இன்று வெற்றியும் கண்டுள்ளேன், இன்னும் இதுபோல பல மருத்துவச் சாதனங்களை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவேன்” என்று கூறியிருக்கிறார். 

தொடர்புடைய பதிவுகள் :

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து காண்பித்து புது சாதனையை படைத்த நாசா.
பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பம் சாத்தியமா?
உலக மக்கள் தொகையில் பாதி பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்! 21 வருடங்களாக செய்யப்பட்ட ஆராய்ச்சி சொ...
26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...
எலிசெபத் ராணியின் மரணத்திற்குப் பிறகு, முடியாட்சி உறவுகள் குறித்த வாக்கெடுப்பு. என்ன விரும்புகிறார்க...
அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்: அதிர்ச்சி ரிப்போர்ட்
அதிபர் பைடனின் மனத்திறன் குறைவதை அமெரிக்க ஊடகங்கள் மறைக்கின்றனவா?
வறுமையின் பிடியிலிருந்து விடுபடும் இந்திய தேசம்! உலக வறுமைக் குறியீடு இந்தியாவைப் பற்றிக் கூறுவது என...
வெண்பா: தமிழ்க் கலாச்சாரத்தோடு கூடிய சமையல் வீடியோ விளையாட்டு
கல்லீரல்சுத்தம்செய்வதுஎப்படி?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *