fbpx
LOADING

Type to search

அறிவியல் இந்தியா உடல் நலம்

கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன – இந்தியா மற்றும் துருக்கியில் அதிகளவில் விற்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) பகீர் எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்பு (WHO) – தலைமையகம்

செய்தி சுருக்கம்:

கடந்த திங்கள் கிழமை (04-09-2023) உலக சுகாதார அமைப்பு WHO – World Health Organization உலகமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி கல்லீரல் பாதிப்பை கொண்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் DEFITELIO என்ற மருந்தில் போலிகள் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் இந்தியா மற்றும் துருக்கியில் அதிகமான அளவில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த DEFITELIO மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் WHO எச்சரிக்கையில் சொல்லப்பட்டுள்ள மருந்து போலியானதுதான் என்று உறுதி செய்துள்ளது.

இத்தகைய போலியான DEFITELIO மருந்தினை எடுத்துக்கொள்ளும் கல்லீரல் நோயாளிகளுக்கு நோயின் தீவிரம் குறையாமல் அப்படியே தொடரும் எனவும், மேலும் இந்த போலி மருந்தினை நரம்பில் செலுத்தும் போது அது சில பக்கவிளைவுகளை உண்டாக்கி உடல்நலத்தில் மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் WHO அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

உலக சுகாதார அமைப்பு WHO வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் “இந்த வகையான மருந்துகளின் மீதான ஆய்வுகளை மேற்கொண்டதில் கல்லீரல் நோய்க்கு நிவாரணியாக தரப்படுகின்ற DEFITELIO (Defibrotide Sodium) என்கிற மருந்தில் போலிகள் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது, இந்த போலியான மருந்துகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவிலும் கடந்த ஜூன் மாதத்தில் துருக்கியிலும் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இவ்வகையான போலி மருந்துகள் அங்கீகாரம் செய்யப்படாத சட்டபூர்வ மருந்து விற்பனை உரிமம் பெறாத நிறுவனங்களால் பார்மசிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது” என்று அறிவித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்தானது தீவிரமான கல்லீரல் நோயான Veno-Occlusive Disease (VOD) பாதிப்பில் உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாகும். மேலும், இந்த மருந்தானது Sinusoidal Obstructive Syndrome (SOS) எனப்படுகின்ற கல்லீரலில் இரத்தக்கசிவு உள்ள நோயாளிகளுக்கு செய்யப்படுகின்ற Stem cell மாற்று அறுவை சிகிச்சையின் போதும் (Hematopoietic Stem-Cell Transplantation – HSCT) பயன்படுத்த படுகிறது. இந்த நோயின் தாக்கம் பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் முதல் ஒரு மாதத்தை தாண்டிய குழந்தைகள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள VOD என்பது கல்லீரலில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் ஒழுங்கான செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோயினை குறிக்கிறது. இதற்கான சிகிச்சையில் தரப்படுகின்ற DEFITELIO மருந்தை உற்பத்தி செய்கின்ற நிறுவனமும் WHO எச்சரிக்கை செய்துள்ளது போல போலிகள் கலந்துள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறது.

இந்த மருந்தை உபயோகிக்கும் நோயாளிகளுக்கும், இதை பரிந்துரை செய்கின்ற மருத்துவர்களுக்கும் மற்றும் மருந்து ஸ்டாக்கிஸ்ட்களுக்கும் DEFITELIO மருந்தை உற்பத்தி செய்கின்ற நிறுவனம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தரமான DEFITELIO மருந்துகள் Lot 20G20A என்கிற சீரியல் எண் அடையாளத்துடன் ஜெர்மனி அல்லது ஆஸ்திரிய நாட்டில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்றும், தற்போது இந்தியா மற்றும் துருக்கியில் கண்டறியப்பட்ட போலி மருந்துகள் இந்த 20G20A என்கிற சீரியல் எண்ணுடன் ஒத்துப்போகாமல் இருப்பதாகவும், மேலும் இந்த போலி மருந்துகள் அனைத்தும் லண்டன் மற்றும் அயர்லாந்து நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாகவும் தெரிய வந்துள்ளது. போலி மருந்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவாதியாகும் தேதிகளும் மாற்றப்பட்ட ஒன்றாக இருக்கிறது, அது இந்த வகை மருந்தின் பதிவு செய்யப்பட்ட காலாவதி தேதியை விட அதிக கால அவகாசம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த போலி மருந்தினை இந்தியா மற்றும் துருக்கியில் சந்தைப்படுத்தும் நிறுவனம் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறிப்பிட்ட மருந்தின் மீதான WHO அமைப்பின் எச்சரிக்கை இப்போது புதிதாக சொல்லப்படுகின்ற ஒன்றல்ல, இதே மருந்தில் போலிகளின் விற்பனை கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, லாடிவா, மலேசியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் நடந்துள்ளது என்று WHO தெரிவித்துள்ளது. தற்போது இது இந்தியா மற்றும் துருக்கியிலும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த போலி மருந்தினால் நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என்றும், இந்த மருந்தானது நரம்பு வழியாக உட்செலுத்தப்படுவதால் இதன் மூலம் ஏற்படுகின்ற பக்கவிளைவுகள் தீவிரமான உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தி விடக்கூடும் என்றும், சில சமயங்களில் உயிரிழப்பு அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது. இந்த DEFITELIO போலி மருந்தை உபயோகித்து பாதிக்கப்பட்டதாக இதுவரையிலும் தகவல்கள் எதுவும் WHO அமைப்பிற்கு வரவில்லை, ஆனாலும் இந்த போலி மருந்தின் மீதான நம்பகத்தன்மை, அதனால் உருவாகும் பாதிப்புகள் மற்றும் அதன் தரத்தினை பற்றிய எந்தவொரு தகவலையும் WHO அமைப்பு அதன் எச்சரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கவில்லை.

இந்த போலி மருந்து பற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் இதுவரையிலும் எந்த பதிலையும் தரவில்லை, ஆயினும் இந்த போலி மருந்து புழக்கத்தில் உள்ளதை பற்றி அதிகமான மக்கள் தெரிந்து விழிப்புணர்வு அடைந்துள்ள நிலையில் இந்த விஷயத்தின் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், எனவே அதைப்பற்றிய விவரங்களை முழுதாக தெரிவிக்க இன்னும் சற்று அவகாசம் வேண்டியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் வழங்கியுள்ள ஆலோசனைப்படி பொதுமக்களும் மருத்துவர்களும் இந்த மருந்தை பயன்படுத்துவதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

WHO அமைப்பு அளித்துள்ள ஆலோசனை குறிப்புகளில் “நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களோ இந்த DEFITELIO மருந்தை உபயோகித்து கொண்டிருந்தாலோ அல்லது இந்த மருந்தை இதற்கு முன்னர் பயன்படுத்தியதால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது இதனை உபயோகித்தால் எதிர்பாராத பக்கவிளைவுகள் வந்திருந்தாலோ உடனடியாக தகுந்த மருத்துவரிடம் சென்று தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும். மேலும், உடல்நலம் காக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையில் உள்ளவர்கள் யாரேனும் இந்த போலி மருந்தினை அடையாளம் கண்டால் உடனே தேசிய ஒழுங்குமுறை ஆணையம் அல்லது தேசிய மருந்துப்பொருள் கண்காணிப்பு ஆணையத்திற்கு புகார் அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட புகார்கள் வரும் பட்சத்தில் அந்த தகவலை தேசிய ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக WHO அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டும்” என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

பின்னணி:

பொதுமக்கள் எப்பொழுதும் மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கும் போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்றுள்ள சப்ளையர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். இந்த போலி மருந்தினை தயாரிப்பது மற்றும் சந்தையில் சப்ளை செய்வது யார் என்பன போன்ற விவரங்கள் தெரிய வந்தால் உடனடியாக WHO அமைப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம். இதைப்பற்றிய புகார்களை தெரிவிக்க WHO அமைப்பினால் பகிரப்பட்டுள்ள அதன் மின்னஞ்சல் முகவரி “rapidalert@who.int.lso” ஆகும்.

உயிர்காக்க உதவுகின்ற மருந்துகளில் போலிகளை வெளியிட்டு மக்களையும் மருத்துவர்களையும் முட்டாள்கள் ஆக்குகின்ற இந்த மாதிரியான சமூக விரோத செயல்பாடுகளை கண்டறிய மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவ வேண்டும். இம்மாதிரியான சம்பவங்களால் மருத்துவத்துறையின் மீதான நம்பிக்கை வெகுவாக குறைந்துவிடும் அபாயம் உள்ளது, எனவே உலக சுகாதார அமைப்பு (WHO) இதனை தடுப்பதற்கு தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 

தொடர்புடைய பதிவுகள் :

வேரின் ஆழமே மரத்தின் உறுதி.. உணவில் உள்ள நாரின் அளவே உடலின் உறுதி.! உணவில் நார்ச்சத்தின் அவசியத்தை அ...
குறைவான உடலுறவுக்கும் டிமென்ஷியாவிற்கும் தொடர்பு உள்ளதா? புதிய ஆய்வில் தகவல்.
செவ்வாய் கிரகம் கடலால் சூழப்பட்டிருந்ததா..? செவ்வாயில் உயிர்கள் உள்ளனவா..? இக்கிரகத்திலுள்ள நிலச்சரி...
அதிபழமையான டைனோசர் எச்சங்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன தெரியுமா?
நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்கியது - பிரயாணக்களைப்பு தீர 18 நாட்கள் ஓய்வெடுக்க போகும் சந்திராய...
செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து காண்பித்து புது சாதனையை படைத்த நாசா.
மது அருந்துதல் 60க்கும் மேற்பட்ட நோய்களிற்கு காரணம்: ஆய்வு
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம் - வேதாந்தம் பற்றிய சில உண்மைகள்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திருப்பதி பாலாஜி கோயில்கள்! பான்-இந்தியா கடவுளாகும் வெங்கடாஜலபதி!!
சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மூன்று விதிகள்
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *