பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிப்பு!

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால் பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்துள்ளது. போதுமான ஆழம் இல்லாததால் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் இரு பக்கங்களிலும் 135க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் முடங்கிக் கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.
பனாமா கால்வாய் பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கை கால்வாய். அமெரிக்கக் கண்டத்தின் நடுவில் இருக்கும் குறுகிய நிலப்பரப்பு வழியாக இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரிலிருந்து அதற்கு எதிர் முனையில் அமைந்திருக்கும் சில நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களைக் கடல் வழியாகக் கப்பல்கள் சென்றடைவதற்குப் பல ஆயிரம் கிலோமீட்டர் சுற்ற வேண்டியிருந்தது. இதனால், எரிபொருள் செலவு, விபத்துக்கள், நேர விரயம் உள்ளிட்ட பல பாதகமான விஷயங்கள் இருந்தன. இதையடுத்து, அமெரிக்கக் கண்டத்தின் நடுவில் உள்ள குறுகிய நிலப்பகுதி வழியாக, நீர் வழித்தடத்தை செயற்கையாக அமைக்கும் திட்டம் 16ம் நூற்றாண்டிலிருந்தே பரிசீலனை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால், அந்தக் குறுகிய நில அமைப்பு மிகுந்த தொழில்நுட்பச் சவால்களை கொண்டிருந்ததால், அந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த இயலாமல் போனது.
அதன்பின்னர் சூயஸ் கால்வாய் அமைப்பதில் தலைமைப் பொறியாளராக செயல்பட்ட பிரான்சைச் சார்ந்த ஃபெர்டினான்ட் டி லெஸ்ஸிப்ஸிடம் பனாமா கால்வாய் அமைக்கும் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தில் இருந்த சவால்கள், பணியாளர்களின் உயிரிழப்பு போன்றவையால், அவர் பின்வாங்கிவிட்டார். பின்னர் 1904ம் ஆண்டு அந்தத் திட்டத்தை அமெரிக்கா வாங்கியது. கால்வாய் வெட்டுவதில் நிபுணரான கோதல்ஸ் என்ற பொறியாளரிடம் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. கால்வாய் வெட்டும்போது பிரான்ஸ் சந்தித்த பிரச்னைகள், தொழில்நுட்பச் சவால்களை எவ்வாறு களைந்து கால்வாய் வெட்டலாம் என்று ஆராய்ந்து, அதற்கு ஏற்ப அமெரிக்க எஞ்சினியர் கோதல்ஸ் பணியைத் துவங்கினார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் அயராத உழைப்பில் பனாமா செயற்கை கால்வாய் அமைக்கப்பட்டது. இரண்டு நீர்த்தேக்கிகள் வழித்தடம் கொண்ட அமைப்புடன் அது கட்டப்பட்டது. 1914ம் ஆண்டில் இந்தக் கால்வாய் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. சுமார் நாற்பத்தி எட்டு மைல் நீளமுள்ள நீர் வழித்தடமான இக்கால்வாய் சர்வதேச கடல் வழி வர்த்தகத்திற்கான முக்கியமான வழியாகும்.
மழை நீரையே நம்பி இருக்கும் இந்தப் பனாமா கால்வாயில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும் மழையின் அளவு குறைந்துவிட்டதால் கால்வாயின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் போதுமான ஆழம் இல்லாததால் கப்பல்கள் கால்வாயைக் கடந்து செல்ல இயலவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக கப்பல்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகச் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியவில்லை. இதற்கிடையில் பெரிய மற்றும் கனமான கப்பல்களுக்குக் கூடுதல் வரியைப் பனாமா கால்வாய் ஆணையம் விடுத்துள்ளதாகவும் இதனால் விநியோகத் தடையும் விலை ஏற்றமும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கால்வாயின் மிகப்பெரிய பயனாளியாக இருப்பது அமெரிக்காதான். கால்வாயின் போக்குவரத்தில் சுமார் 73 சதவீதத்தை அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதிகள் ஆக்கிரமித்துள்ளன. ஆண்டொன்றுக்கு 270 பில்லியன் பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சரக்குகள் கால்வாயைக் கிடக்கின்றன. இங்கே தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியால் தினசரி கப்பல் போக்குவரத்து 36 லிருந்து 32 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற பொருள்களின் முக்கியப் போக்குவரத்து வழிகளில் ஒன்றாக இருக்கும் இந்தப் பனாமா கால்வாயில் ஏற்பட்டிருக்கும் வறட்சியால் சரக்குக் கப்பல்கள் நிறுத்தப்பட்டாலும் பாதிக்கப்பட்டாலும் அது உலகளாவிய விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்ல இது ஷிப்பிங் கம்பெனிகளுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை அளிக்கும். ஏனென்றால் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கு சுமார் 2 லட்சம் டாலர் வரையில் கொள்கலன் கப்பல்களுக்குச் செலவாகும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்தக் கால்வாயில் ஏற்பட்டிருக்கும் வறட்சியால் கப்பல்கள் இதைக் கடப்பதற்கு சுமார் 21 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியதாகக் கூறப்படுகிறது. கப்பல்கள் நீண்ட பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் எரிபொருள் செலவுகள் மற்றும் பசுமையில்லா வாயு வெளியேற்றம் ஆகிய இரண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்தத் தாமதம் சரியான நேரத்தில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதைச் சீர்குலைக்கிறது. இதனால் பொருள்களின் விலை அதிகரித்து, உலகளாவிய வணிகங்கள் மற்றும் நுகர்வோர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த வறட்சிக்கு எல்நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளே காரணங்களாகக் கூறப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய சவால்களை எதிர்த்துப் பனாமா கால்வாய் ஆணையம் நீர்ப் பாதுகாப்பு நடவடிக்கையைத் துவக்கியிருக்கிறது. கால்வாய்க்கு நீர்வரத்தை அதிகரிக்க புதிய நீர்த்தேக்கம் கட்டுவது போன்ற மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறது. நெரிசலைக் குறைக்கச் சில கப்பல்களின் வழித்தடத்தை மாற்றுவது மற்றும் அத்தியாவசியச் சரக்குப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
பனாமா கால்வாய்க்கு ஏற்பட்டிருக்கும் இந்த இடையூறு, உலகளாவிய கப்பல் போக்குவரத்துகளின் பின்னடைவையும், தகவமைப்புத் திறனையும் உடனடியாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகுக்கு அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இதுபோன்ற இடையூறுகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காகப் பன்முக அணுகுமுறைகள் தேவை என்பதையும் உணர்த்துகின்றது.