மாரடைப்பைத் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனடி மரணம் நிச்சயம்! எச்சரிக்கும் சமீபத்திய ஆய்வு!

மாரடைப்பு ஏற்படும் ஒருவருக்குத் தொடரும் அடுத்த ஆண்டில் மிதமான அல்லது தீவிரமான வலி ஏற்பட்டால் அந்த வலி ஏற்படாதவரைக் காட்டிலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அதிகம் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் மாரடைப்புக்குப் பின் வரும் அடுத்த ஆண்டில் கடுமையான வலியை அனுபவிப்பவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இறப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்றும் அந்த வலி அவர்களின் இதய நிலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மாரடைப்புக்குப் பின் வரும் வலியை எதிர்கால இறப்புக்கான முக்கியமான மற்றும் ஆபத்தான காரணியாகக் கருத வேண்டும் என்று இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் மற்றும் ஸ்வீடனின் டலர்னா பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் துறையின் இணைப்பேராசிரியர் லிண்டா விக்னர் தெரிவித்துள்ளார். மேலும் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களுக்கு வரும் இந்த வலியானது புகைப்பிடித்தல், உடல் பருமன், குறைந்த அளவிலான உடல் செயல்பாடு, மோசமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சமூகப் பொருளாதார காரணிகள் ஆகியவற்றால் நேரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2004 – 2013 க்கு இடையில் நடைபெற்ற இந்த ஆய்வில் ஸ்வீடனைச் சேர்ந்த 18000 க்கும் மேற்பட்ட மற்றும் மாரடைப்பு ஏற்பட்ட பெரியவர்களின் சுகாதாரத் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 62 மற்றும் கால் பகுதியினர் பெண்கள். மாரடைப்பு ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களுடைய வலி அளவிடப்பட்டது. பின்னர் ஒரு வருடத்திற்குப் பின் கேள்வித்தாள் மூலம் அவர்கள் தங்களது வலியைப் பற்றிச் சொல்லக் கோரப்பட்ட போது கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் தாங்கள் மாரடைப்புக்குப் பின் வந்த அடுத்த ஆண்டில் மிதமான மற்றும் தீவிர வலியை அனுபவித்ததாகக் கூறியிருக்கிறார்கள். மொத்தத்தில் 65 சதவீதம் பேர் வலியை அனுபவித்ததாகக் கூறியிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் மிதமான வலியை அனுபவித்தவர்கள் பின்வரும் 8.5 ஆண்டுகளில் இறப்பதற்கு 35 சதவீதம் அதிக வாய்ப்புள்ளது எனவும் வலி இல்லை என்று கூறியவர்களை விட தீவிரமான வலி ஏற்பட்டது என்று கூறியவர்கள் இறப்பதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலக அளவில் ஆண்டுதோறும் இதய நோய் பாதிப்புகளால் சுமார் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. மேலும் இதில் ஐந்தில் ஒரு பங்கு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது என்பது மிகவும் வேதனையான விஷயம்.
இதய நோய்களில் மாரடைப்பு என்பது மிகவும் மோசமான நிலை மற்றும் திடீர் மரணத்தைத் தரக்கூடியது என்பது நாம் அறிந்ததே. உயிரைக் கொல்லக்கூடிய மாரடைப்பு வருவதற்கு முன்னர் முக்கியமான சில அறிகுறிகள் ஒருவரின் உடலில் தோன்றிவிடும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அவை என்ன தெரியுமா? உடலில் ஏற்படும் அசாதாரண சோர்வு, அடிவயிற்று வலி, மூச்சுத்திணறல், தூக்கமின்மை, முடி உதிர்தல், அதிகமான வியர்வை, சீரான இதயத் துடிப்பின்மை மற்றும் நெஞ்சுவலி ஆகியவையே மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியமான அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது.
மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஒருவர் நிச்சயமாக அதிக சோர்வுடன் காணப்படுவார் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதேவேளை உடல் உழைப்பு மற்றும் மனக் குழப்பத்தால் ஏற்படும் சோர்வுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள். இத்தகைய சோர்வு ஏற்படும்போது குட்டித்தூக்கம் மற்றும் குளியல் ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது எனவும் இப்படிச் சோர்வைப் போக்கும் போது மாரடைப்பை நிச்சயம் தடுக்கலாம் எனவும் கூறுகிறார்கள் அவர்கள். வயிற்றுப் பகுதியில் திடீர் வீக்கம் மற்றும் வலி, குமட்டல் போன்றவையும் மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இந்த வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சாலச் சிறந்தது.
மூச்சுக் காற்றைச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. இந்த அறிகுறியானது சுமார் ஆறு மாதத்துக்கு முன்பே ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் கூறி விடுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தலைசுற்றுவது, சுவாசிக்கப் போதுமான காற்று இல்லாதது ஆகியவை மாரடைப்புக்கு வழிவகுக்கும் அறிகுறிகள். மேலும் தூக்கமின்மை மாரடைப்பின் மிக முக்கியமான அறிகுறி என்றும் இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் மனக் கவலைகளில் இருந்து விலக வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான வெளிப்படையான அறிகுறிகள் என்று கேட்டால் முடி உதிர்வதுதான். ஹார்மோன் கோளாறினால் ஏற்படும் வழுக்கை கூட மாரடைப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. இதேபோல்தான் பயம் மற்றும் பதட்டத்தால் ஏற்படக்கூடிய அதிகமான வியர்வையும். இது மாரடைப்பிற்கான இன்னுமொரு வெளிப்படையான அறிகுறி. இதயத்துடிப்பின் வேகம் சீராக இல்லை என்று உணர்ந்தால் அதுவும் மாரடைப்பிற்கான அறிகுறிதான். இந்த நிலை ஏற்பட்டால் பாதிக்கப்படுபவர் மருத்துவரை அணுகுவதே நலம். மேலும் இடது கை, கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் வலி பரவலாகவும் மார்புப் பகுதியில் வலி மிகுந்து இருப்பதையும் உணர்ந்து விட்டால் நொடியும் தாமதிக்காமல் இதய மருத்துவரை அணுகுவதே சரியான தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்கள் மர்ய்த்துவ ஆராய்ச்சியாளர்கள். இந்நிலையில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, தொடரும் அடுத்த ஆண்டில் மிதமான மற்றும் தீவிரமான வலியில் அவர் அவதிப்படுவாரேயாயின் அடுத்த சில ஆண்டுகளில் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறும் சமீபத்திய ஆய்வு மிகப்பெரும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.