ஓசெம்பிக், உடல் பருமனை குறைப்பதற்கான மருந்தா? உண்மை எது?

செய்தி சுருக்கம்:
உடல் பருமனை, அதிக உடல் எடையை எப்படியாவது குறைக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள், பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். உடல் பருமனை விரைவாக குறைக்கவேண்டும் என்ற நோக்கில் மருந்துகளையும் பலர் உட்கொள்ளுகின்றனர். அவ்வாறு ஓசெம்பிக் என்னும் மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்கின்றனர். இந்த ஓசெம்பிக் மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று அநேகர் கூறுகின்றனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
பொதுவாக கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவு பொருள்களை நிறைய உண்பவர்கள், உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பின் மூலம் போதுமான ஆற்றலை செலவழிக்காமல் இருந்தால், மீதி விடப்படும் ஆற்றலானது உடலில் கொழுப்பாக சேகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது. ஒருவரின் உயரத்திற்கும் உடல் எடைக்கும் உள்ள விகிதம் உடல் நிறை குறியீடு அதாவது பாடி மாஸ் இன்டெக்ஸ் என்று கூறப்படுகிறது. இந்த அளவு 25 அல்லது அதற்கு மேலாக இருந்தால் அவர் அதிக உடல் எடை கொண்டவர் என்றும் 30க்கு மேலாக இருப்பவர்கள் பருமனான உடல் கொண்டவர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
பின்னணி:
அழகியல் நோக்கில் அனைவரும் உடல் பருமனை குறைக்க விரும்புகின்றனர். அதற்கு பல வழிகளை, குறுக்கு வழிகளாக இருந்தாலும் கையாள துடிக்கின்றனர். அவ்வாறு குறுக்கு வழியை நாடுவோர் ஓசெம்பிக் என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்கிறார்கள்.
நீரிழிவு
டைப் 2 வகை, அதாவது பொதுவாக வயதாகும் ஏற்படும் நீரிழிவு இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது. உடல் செல்களுக்குள் சர்க்கரை செல்லும் அளவை ஒழுங்குபடுத்து ஹார்மோனின் பெயர் இன்சுலின். இந்த இன்சுலின் நம் உடலில் பான்கிரியாஸ் என்னும் கணையத்தில் உற்பத்தியாகிறது. போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியாக நிலை அல்லது உடல் செல்கள் இன்சுலின் செயல்பாட்டுக்கு ஆற்றும் எதிர்வினையின் அளவு குறைந்து, அவை குறைவான அளவு சர்க்கரையை ஏற்றுக்கொள்ளும்போது ஏற்படும் நீரிழிவு டைப் 2 நீரிழிவாகும்.
ஓசெம்பிக்
டைப்-2 வகை நீரிழிவுக்கு சிகிச்சையளிக்க ஓசெம்பிக் அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இது வர்த்தரீதியான பெயர். இதிலுள்ள முக்கிய மருந்துபொருள் செமக்லுடைட் ஆகும். இரத்தத்திலுள்ள குளூக்கோஸான ஹீமோகுளோபின் ஏ1சியை இது குறைப்பதாக கூறப்படுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு இரத்தநாளம் தொடர்பான இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வரும் அபாயத்தை இது தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜிஎல்பி – 1 என்று அறியப்படும் குளூககோன் போன்ற பெப்டைட் 1 ஹார்மோனானது கணையத்தின் பீட்டா செல்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள ஜிஎல்பி-1 ஏற்பிகளோடு நேரடியாக பிணைக்கப்பட்டு, குளூக்கோஸால் தூண்டப்படும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.
நாம் சாப்பிடும் உணவுக்கேற்ப இன்சுலினை சுரக்கும்படி ஜிஎல்பி-1 கணையத்தை தூண்டுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுகிறது. இரத்தத்தில் குளூக்கோஸின் அளவை அதிகரிக்கும் குளூககோன் என்னும் ஹார்மோன் சுரப்பை இது குறைக்கிறது.
ஓசெம்பிக் – இன்சுலின்
ஓசெம்பிக் என்பது இன்சுலினா என்று சிலர் கேட்கலாம். இது இன்சுலின் அல்ல! இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது அதிக இன்சுலினை சுரக்கும்படி இது கணையத்திற்கு உதவுகிறது. இன்சுலினை பயன்படுத்தும்போது சர்க்கரையின் அளவு போதுமான அளவை விட குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், ஓசெம்பிக் பயன்படுத்தும்போது தேவைக்கு அதிகமாக குறையும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறுகிறார்கள்.
ஓசெம்பிக்கும் உடல் எடையும்
ஓசெம்பிக் எடையை குறைப்பதற்கான மருந்து என்று குறிப்பிடப்படவில்லை.
ஓசெம்பிக், பசியுடன் தொடர்புடைய மூளை பகுதி, குறிப்பாக ஹைபோதலாமஸில் உள்ள பசி உணர்வு பகுதியின்மேல் வினையாற்றி, பசியை குறைக்கிறது.
செரிமான செயல்பாட்டின் வேகத்தைக் குறைத்து, வயிற்றில் உணவு அதிக நேரம் தங்கும்படி செய்து, வயிறு திருப்தியாக இருக்கும் உணர்வை அளிக்கிறது. அதனால் உடல் எடை குறைகிறது.
மருத்துவம் சார்ந்த பரிசோதனை ஒன்றில் கூடுதல் உடல் எடை கொண்டிருந்த, நீரிழிவு குறைபாடு இல்லாத 1,961 பேருக்கு வாரம் ஒருநாள் வீதம் 68 வாரங்களுக்கு ஓசெம்பிக்கின் மூலப்பொருளான செமக்லுடைட் 2.4 மில்லி கிராம் அளவு கொடுக்கப்பட்டது. அவர்களது உடல் எடை 14.9 சதவீதம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக ஓசெம்பிக்கில் இருக்கும் அளவை விட அதிகமாக இப்பரிசோதனையில் மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், அதுவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்தினால் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.
பக்க விளைவுகள்
பெரும்பாலும் எந்த மருந்தாக இருந்தாலும் அதற்கு பக்கவிளைவுகள் இருப்பது கண்கூடு.
அலர்ஜி (ஒவ்வாமை), அழற்சி, சுவாசிப்பதில் சிரமம், தோலில் அரிப்பு, மயக்கமாகவும் தலைசுற்றுவதாகவும் உணரச் செய்யும் ஹைபோகிளைசீமியா என்னும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், அடிவயிற்றில் வலி. வயிற்றிலிருந்து முதுகுக்கு வலி பரவுதல், குமட்டல், வாந்தி ஆகியவற்றை உண்டு பண்ணும் கணைய அழற்சி என்னும் பான்கிரியாடிட்டிஸ், ரெட்டினோபதி என்னும் கண் பாதிப்பு, கைகள், பாதங்கள், கால்களில் காரணம் தெரியாத வீக்கம். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை. சிறுநீரக பாதிப்பு, பித்தப்பையில் கல் உருவாதல் உள்ளிட்ட பித்தப்பை நோய்கள் ஆகியவை ஓசெம்பிக் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என கூறப்படுகிறது.
நிறைவு கருத்து:
ஓசெம்பிக், டைப்-2 வகை நீரிழிவுக்கான மருந்தாகவே கருதப்படுகிறது. அழகுநோக்கில் உடல் பருமனை குறைப்பதற்கு அதை குறுகிய காலம் உட்கொண்டால் அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் குறைந்த உடல் எடையானது மறுபடியும் பழைய நிலைக்கு உயர்ந்துவிடும் என அமெரிக்காவின் வட கரோலினாவை சேர்ந்த மருத்துவர் கிறிஸ்டோபர் மெக்கோவன் விளக்கியுள்ளார்.