கருத்தடைக்கான தடையை உடைத்தது அமெரிக்கா! வரலாற்றில் முதன்முறையாக கருத்தடை மாத்திரைக்கு அமெரிக்காவில் FDA அனுமதி!!

செய்தி சுருக்கம்:
1960 முதல் லட்சக்கணக்கான பெண்கள் ஹார்மோன் அடிப்படையிலான கருத்தடை மாத்திரைகளை பலகாலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை இது மிகவும் சகஜமான கருத்தடை வடிவமாகும். ஆனால் இந்த கருத்தடை மாத்திரைகளை யார் வேண்டுமானாலும் வாங்கி விட முடியாது. அதற்கு மருத்துவரிடமிருந்து பெற்ற மருந்து சீட்டு அவசியமாகும்.
இப்பொழுது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அமைப்பு மருந்துச்சீட்டு இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு முறை ஓபில் என்று அழைக்கப்படும் இந்த கருத்தடை மருந்தை விற்பனை செய்ய அனுமதித்துள்ளது.
முக்கியமாக, இந்த மருந்தை வாங்குவதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. இப்பொழுது நாம் சாதாரணமாக வாங்கும் தலைவலி, கண் சொட்டு மருந்துகள் போல இனி மருந்து கடைகளில் இந்தக் கருத்தடை மருந்தை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஓபில் கருத்தடை மருந்து பெரிகோ என்ற அயர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மாத்திரை விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மருத்துவ சங்கங்கள் மற்றும் பெண்களுக்கான அமைப்புகள் பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் வைத்த கோரிக்கைகளின் விளைவு தான் இது. அமெரிக்காவில் நிகழும் ஆறு மில்லியன் வருடாந்த கர்ப்பங்களில் 45 சதவீதம் திட்டமிடப்படாதவை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பதின் வயது பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் உடையவர்கள் மருந்து சீட்டுகளைப் பெறுவதற்கும் மருந்துகளை வாங்குவதற்கும் தற்போது சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
இந்த ஓபில் மாத்திரை எப்படி செயல்படுகிறது?
பொதுவாகக் கருத்தடை மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டின் ஆகிய இரண்டு ஹார்மோன்களைக் கொண்டிருக்கும். இத்தகைய பழைய மாத்திரைகள் கர்ப்பப்பையில் ரத்தக் கட்டிகளை உருவாக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.
ஆனால் ஓபிலில் புரோஜாஸ்டின் மட்டுமே உள்ளது. இது விந்தணுவானது கருப்பையை அடைவதைத் தடுப்பதன் மூலம் கர்ப்பத்தை தடுக்கிறது.
ஓபிலின் பலனை முழுவதுமாகப் பெற தினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும் .
ஓபில் கருத்தடை மருந்துக்கு உள்ள தடைகள் என்ன?
எத்தனை பெண்கள் இந்த புதிய வரவான கருத்தடை மறந்தால் பயனடைவார்கள் என்பது இம்மருந்தின் விலையைப் பொருத்தது. இதுவரை இந்த மருந்திருக்கான விலையை பெரிகோ நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த ஆண்டு இறுதியில் இது அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கன் மகப்பேறு மருத்துவக் கல்லூரியின் டாக்டர் பிரதிமா குப்தா கூறுகையில் எங்களைப் போன்ற பலர் இத்தகைய கருத்தடை மாத்திரைகளை அமலாக்க வேண்டி அயராது உரைத்ததற்குக் காரணம், தேவைப்படும் பெண்களுக்கு கருத்தடை சாதனம் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயமாக இம்மாத்திரைகளின் விலை அத்தகைய பெண்களைத் தடை செய்வதாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு தேவையான பழைய கருத்தடை மாத்திரைகள் $15 முதல் $30 வரை விலை கொண்டவையாக இருக்கின்றன. இந்த மாத்திரைகளுக்குக் காப்பீடும் கிடையாது. உண்மையில் இந்த மாத்திரைகளை விட இவற்றிற்கான டாக்டர்களின் மருந்து சீட்டு தான் விலை அதிகம் கொண்டதாக உள்ளது.
இந்த ஓபில் கருத்தடை மருந்துக்கு எதிர்ப்புகள் உள்ளதா?
கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்கள் பொதுவாக கருத்தடை மருந்துகளை எதிர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன. அவை கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படுகின்றன, கருவைக் கொலைசெய்ய முனைவதில்லை என்று அந்த குழுக்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இத்தகைய பரவலாக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகள் பின்னாளில் கருக்கலைப்பு மாத்திரைகளையும் சகஜமாக்க வாய்ப்புள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இதில் உண்மை இல்லாமலும் இல்லை. கருத்தடை சாதனங்களின் தோல்வி மற்றும் மக்களின் தேவையை முன்னிட்டு இன்னும் சில காலங்களில் கருக்கலைப்பு சாதனங்களும் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி எளிதாக மக்களுக்கு கிடைக்கும் படி ஒரு நிலை உருவாக வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
ஓபில் மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானதா?
இந்த புதிய ஓபில் மாத்திரை குறித்து FDA விஞ்ஞானிகள் சில கவலைகளை தெரிவித்துள்ளனர். சில மருத்துவ பிரச்சனைகளை கொண்ட பெண்கள் இந்த வகுப்பில் மாத்திரையை தவிர்ப்பது நல்லது.
குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த மாதிரி எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இது கட்டி வளர்ச்சியை தூண்டக்கூடியது.
மேலும் வலிப்பு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் எச்ஐவி போன்றவற்றிற்கான மருந்துகளை உட்கொள்ளும் பெண்கள் இந்த ஓபில் மாத்திரையை தவிர்ப்பது நல்லது. இத்தகைய மருந்துகள் ஓபிலின் செயல் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மருந்து பரவலாக மருந்துக்கடைகளில் விற்பனைக்கு வரக்கூடும்.