வறுமையின் பிடியிலிருந்து விடுபடும் இந்திய தேசம்! உலக வறுமைக் குறியீடு இந்தியாவைப் பற்றிக் கூறுவது என்ன..?!

செய்தி சுருக்கம்:
மார்ச் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட 135 மில்லியன் மக்கள் – அதாவது, இந்திய மக்கள் தொகையில் சுமார் 10% பேர் – தங்களைச் சூழ்ந்திருந்த வறுமையிலிருந்து வெளியேறி உள்ளனர் என்று அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
பல பரிணாம வறுமைக் குறியீடு (எம்பிஐ) Multidimensional Poverty Indices (MBI) எனப்படும் ஐக்கிய நாடுகளின் வறுமை குறித்த அளவீட்டின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
பல பரிணாம வறுமைக் குறியீடு (எம்பிஐ) என்றால் என்ன?
இந்த எம்பிஐ குறியீடு மற்ற உள்ளூர் கணக்கீட்டாளர்கள் போல ஒருவரது வறுமையை அவரது அன்றாட அல்லது மாத வருமானத்தைக் கொண்டு கணக்கிடுவதில்லை.
ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு தொகையை ஈட்டினாலே அவர் வறுமைக்கு மேம்பட்டவர் என்று கருதுவது எவ்வளவு மடத்தனமானது! அவரவர் வாழ்க்கைத் தரமே அவர் வறியவரா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது என்பதே உண்மை.
இந்த எம்பிஐ குறியீடு உடல்நலம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகிய வாழ்வின் பகுதிகளில் பத்து அளவுகளைக் கண்காணிக்கிறது.
உடல்நலத்தைப் பொறுத்தவரை குழந்தைகள் இறப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதையும் ஊட்டச்சத்தான உணவு குழந்தைகளுக்கு எந்த அளவில் கிடைக்கின்றன என்பதையும் கணக்கில் எடுக்கிறது.
கல்வி என்று வரும்போது, எத்தனை வருடங்கள் ஒருவர் படிப்பிற்காக செலவிடுகிறார் என்பதோடு ஆறு வருடங்களுக்கு குறைவாக மட்டுமே கல்வி பயின்றவரென்றால் அவர் வறுமையில் தான் உள்ளார் என்றும் கருதுகிறது.
வாழ்க்கைத் தரத்தில் ஆறு முக்கிய காரணிகளியக் கணக்கில் கொள்கிறது. எந்த மாதிரியான சமையல் எரிபொருளைப் பயன்படுத்துகின்றீர்கள்?, பொதுவான கழிப்பறையா அல்லது தனிப்பட்டதா, குடிதண்ணீர் எப்படிக் கிடைக்கிறது ? வீட்டிலேயே கிடைக்கிறதா அல்லது நீங்கள் குடிதண்ணீருக்காக 30 நிமிடங்களுக்கு மேல் நடக்க நேர்கிறதா?, வீட்டில் மின்சாரம் உள்ளதா?, உங்கள் வீடு எந்த பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது? – கூரை நிரந்தரமானதா ?, உங்கள் சொத்துக்கள் என்னென்ன? – டிவி, கணினி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், குளிர்சாதனப்பெட்டி இதில் எது உள்ளது அல்லது இல்லை..?
இவ்வாறு முழுமையான அளவில் இந்த எம்பிஐ குறியீடு ஒருவரது வாழ்வை கண்கானித்து அளவிடுகிறது.
இந்த எம்பிஐ குறியீடு இந்தியாவைப் பற்றி கூறுவதென்ன?
2019-21 ஆம் ஆண்டு தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் படி, 2015/16 ஆம் ஆண்டில் 25% ஆக இருந்த வறுமையில் வாழும் மக்கள் தொகை 2019-21 இல் 15% ஆகக் குறைந்துள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) அறிக்கை, 2005 இல் 55% ஆக இருந்த பல பரிமாண வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 2021 இல் 16.4% ஆகக் குறைந்துள்ளது.
UNDP மதிப்பீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு நாளைக்கு $2.15 மட்டுமே வருவாய் ஈட்டும் அளவில் இருக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 10% ஆகக் குறைந்துள்ளது.
இந்த முன்னேற்றத்திற்குக் காரணங்கள் என்ன?
இந்தியாவின் மத்திய அரசு சுமார் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குகிறது, நாட்டின் 1.4 பில்லியன் மக்கள் தொகையில் சுமார் 57%, கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் பிற சேவைகளுக்கு மாநில அரசாங்கங்கள் பில்லியன் டாலர்களை மானியமாக செலவிடுகின்றன.
34.3 கோடி மக்களுடன் உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வறுமையிலிருந்து வெளியேறி வருகின்றனர். அதைத் தொடர்ந்து பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.