ஒர்க்னி இங்கிலாந்தை விட்டு வெளியேறி நார்வேயுடன் இணையப் போகிறதா? காரணம் என்ன?

ஒர்க்னி தீவுகள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து பிரிந்து நார்வேயின் சுயராஜ்யப் பிரதேசமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்காட்லாந்தின் வடக்குக் கடற்கரையிலிருந்து பத்து மைல் தொலைவில் அமைந்துள்ள எழுபதுக்கும் மேற்பட்ட பசுமையான தீவுகளின் பிரதேசம்தான் ஒர்க்னி தீவுகள் என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய மக்கள்தொகை வெறும் இருபத்து இரண்டு ஆயிரம் மட்டுமே. இந்தத் தீவுப் பிரதேசம் 1472 ஆம் ஆண்டு வரை சுமார் ஐந்நூறு ஆண்டுகள் நார்வே மற்றும் டேனிஷ் எனப்படும் நெதர்லாந்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றது. அக்காலத்தில் நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் மன்னராக இருந்த கிறிஸ்டியனின் மகளான மார்கரெட்டுக்கும் ஸ்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் ஜேம்சுக்கும் 1472 ஆம் ஆண்டில் நடந்த திருமணத்தின்போது வரதட்சணைக்கு மாற்றாக ஸ்காட்லாந்தின் மன்னருக்கு இந்தப் பிரதேசம் வழங்கப்பட்டிருக்கின்றது.
சரி, தற்போது ஏன் இந்த ஒர்க்னி மீண்டும் நார்வேயுடன் இணைய விரும்புகிறது? காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்கு அத்தீவுகளின் கவுன்சில் தலைவரான ஜேம்ஸ் ஸ்டாக்கன் கூறுவதைப் பார்ப்போம்.
ஒர்க்னி தீவுகளில் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் மாற்று நிர்வாக முறைகளை ஆராய்ந்தபோது எடின்பர்க் மற்றும் லண்டன் அரசுகள் ஆகியவற்றால் ஒர்க்னி மோசமாக நடத்தப் படுவதாகவும் மேற்குத் தீவுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த தனிநபர் நிதியைப் பெறுவதாகவும் தெரிய வந்தது. அதாவது இரு அரசுகளாலும் நிதி ரீதியாகப் புறக்கணிக்கப்படுகிறது ஒர்க்னி தீவுகள் என்று கூறுகின்றார் அவர்.
மேலும் 1970களின் பிற்பகுதியிலிருந்து பிரிட்டனின் வடகடல் எண்ணெய் ஒர்க்னியில்தான் பதப்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கேற்ற பலன்கள் ஒர்க்னிக்குக் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல கடலோரக் காற்றாலைகள் மூலம் புதிய வர்த்தக மற்றும் வேலை வாய்ப்புகள் இருப்பதால் ஒர்க்னிக்கு அதிக வருமானம் கிடைக்க வேண்டும். ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறுகின்றார்.
ஸ்டாக்கன் மேலும் தெரிவிப்பது என்னவென்றால், ‘நாங்கள், அதாவது ஒர்க்னி தீவைச் சார்ந்தவர்கள், ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததை விட நீண்ட காலம் நார்வே ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவே இருந்தோம். ஒர்க்னி மக்கள் என்னிடம் வந்து, நாம் எப்போது இந்த வரதட்சணையைத் திருப்பித் தரப் போகிறோம், எப்போது நார்வே செல்லப்போகிறோம், அங்கேதான் நம்முடைய மிகப்பெரும் மற்றும் ஆழமான கலாச்சார உறவு இருக்கின்றது. அவர்களுடன் இணைவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கானச் சரியான தருணம் இதுதான் என்கின்றார்கள் என அவர் தெரிவிக்கிறார். “இருப்பினும் வடகடல் வழியாக 250 மைல் தொலைவில் உள்ள நார்வேக்கு ஒர்க்னி திரும்புவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அதே நேரத்தில் மற்ற அரசுகளிடமிருந்து எந்த ஆதரவையும் நாங்கள் பெறவில்லை. மேலும் எங்களுக்கு வேறு என்னென்ன மாற்று வழிகள் உள்ளன என்பதைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கூறுகின்றார் அவர்.
நார்டிக் பிராந்தியத்துடனான ஒர்க்னியின் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை ஆராயவேண்டும் என்ற ஒரு அறிக்கையை முன்மொழிந்திருக்கிறார் ஸ்டாக்கன். சபையின் முன் சமர்ப்பிக்கப்பட இருக்கும் இந்த அறிக்கையானது வட அட்லாண்டிக்கில் உள்ள டென்மார்க்கின் சுய ராஜ்யப் பிரதேசமான பாரா தீவுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இந்த முன்மொழிவை ஆதரிப்பதா வேண்டாமா எனக் கவுன்சில் அதிகாரிகள் முழுமையான விசாரணையைத் தொடங்குவார்கள் என்று கூறப்படும் வேளையில் லிபரல் மொக்ராட் எம் எஸ் பியான(Member of Scottish Parliament) லியாம் மேக் ஆர்தர், இந்த இயக்கத்திற்குத் தடைகளை உருவாக்கும் சாத்தியமான அபாயங்களை ஒப்புக்கொண்ட போதிலும், தீவுச் சமூகங்களை மேம்படுத்துவதற்கானத் தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதே வேளையில் 2014ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து தான் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த இங்கிலாந்து தொழிற்சங்கத்தைப் பொது வாக்கெடுப்பில் நிராகரித்தது ஒர்க்னியின் இந்த சுயாட்சி விருப்பத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது.
எப்படியாயினும் ஒர்க்னி இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டுமாயின் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்டிஷ் அரசுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.