முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல: சிட்னி பல்கலைக்கழக ஆய்வு முடிவு

சிட்னி பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட உலகின் முதல் சோதனையின்படி கடுமையான முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல என்றும் அவை மிகவும் ஆபத்தானது என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தச் சோதனையானது 157 முதன்மை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுத் தளங்களிலிருந்த 350 பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இவர்களில் திடீர் கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர மற்றும் தொடர் கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓபியாய்டுகள் அல்லது மருந்துப்போலிகளை பயன்படுத்தியவர்கள். தொடர்ந்து 52 வாரங்கள் இவர்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டனர். இந்தச் சோதனையில் மற்ற மருந்துகளை விட ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓபியாய்டுகளை எடுத்தவர்கள் தங்களது கழுத்து வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துப்போலி குழுவில் இருந்தவர்களின் வாழ்க்கைத் தரமும் நீண்டகால வலியின் பின்னடைவும் சிறப்பாக இருந்தன என்றும் ஓபியாய்டுகளைக் குறுகியகால நிவாரணியாகப் பயன்படுத்திய நோயாளிகள் 12 மாதங்களுக்குப் பிறகும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் ஆபத்தில் இருந்தனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது கெய்ட்லின் எம்.பி. ஜோன்ஸ், ரிச்சர்ட் ஓ டே, பார்ட் டபிள்யூ கோஸ், ஜேன் லாடிமர், கிறிஸ் ஜி மஹெர், ஆண்ட்ரூ ஜே மெக்லாக்லான் ஆகியோரால் சிட்னி பல்கலைக்கழகம், தி ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த், யுஎன்எஸ்டபிள்யூ, செயின்ட் வின்சென்ட் ஹாஸ்பிடல் சிட்னி, சிட்னி லோக்கல் ஹெல்த் டிஸ்ட்ரிக்ட் மற்றும் நெதர்லாந்தில் உள்ள ஈராஸ்மஸ் யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்குத் தேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சேஃப்வொர்க்எஸ்ஏ மற்றும் சிட்னி பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் சுகாதார பீடம் ஆகியவை நிதியளித்திருந்தன.
முதுகு மற்றும் கழுத்து வலி வழிகாட்டுதல்களின்படி மற்ற அனைத்து மருந்தியல் விருப்பங்களும் தோல்வியுற்றால், ஓபியாய்டுகளைக் கடைசி முயற்சியாகக் கருதலாம் என்று இந்தச் சோதனையில் ஈடுபட்ட ஆராய்ச்சிக் குழு கூறுகிறது. இருப்பினும், ஓபியாய்டுகளை இயன்றவரை பரிந்துரைக்கவே கூடாது என்பதே இந்த ஆய்வின் முடிவாகும்.
இது குறித்து சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் கிறிஸ்டின் லின் கூறுகையில் “கடுமையான முதுகு அல்லது கழுத்து வலி உள்ளவர்களுக்கு வலியைப் போக்க ஓபியாய்டைப் பரிந்துரைப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை நாங்கள் தெளிவாகக் காட்டியுள்ளோம். உண்மையில், இது ஒரு குறுகிய கால சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கூட நீண்ட காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். எனவே கடுமையான முதுகு மற்றும் கழுத்து வலிக்கு மற்ற மருந்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படாவிட்டாலும் அல்லது நோயாளிக்குப் பயனுள்ளதாக இல்லாத போதும் கூட ஓபியாய்டுகள் பரிந்துரைக்கப்படக் கூடாது ” என்கிறார்.
தீங்கு விளைவிக்கும் அபாயத்தை அதிகரிக்கும் ஓபியாய்டுகளின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைப்பது உலகளாவிய சுகாதார முன்னுரிமையாகும். உலகெங்கிலும் உள்ள மருத்துவ அதிகாரிகள் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணமாக அவற்றைத் தவிர்க்க வேண்டும். அவற்றால் ஏற்படும் நன்மைகள் தீங்குகளை விட அதிகமாக இருக்கும் என்பதற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக அளவில் 577 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சைக்காகப் பெரும்பாலான மக்கள் ஓபியாய்டுகளையே பயன்படுத்துகின்றனர். ஓபியாய்டுகள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக உலகளாவிய உந்துதல் இருந்தபோதும் ஆஸ்திரேலியாவில் கழுத்து மற்றும் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் சுமார் 40 முதல் 70 சதவீதம் பேருக்கு ஓபியாய்டுகளே பரிந்துரைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் சிகிச்சைக்கானப் பொருட்கள் நிர்வாகத்தின் கூற்றுப்படி, அங்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 150 மருத்துவமனைகள் மற்றும் 14 அவசர சிகிச்சைப் பிரிவு சேர்க்கைகள் ஓபியாய்டு பயன்பாடு தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கியது என்றும் மேலும் பரிந்துரைக்கப்பட்ட ஓபியாய்டு பயன்பாட்டினால் மூன்று பேர் இறக்கின்றனர் என்றும் தெரிய வருகிறது.
இது குறித்து சிட்னி பார்மசி பள்ளியின் டீன் மற்றும் இணை ஆய்வாளரான பேராசிரியர் ஆண்ட்ரூ மெக்லாக்லன் கூறுகையில், இந்த ஆய்வு மிக முக்கியமானது என்றும், ஆஸ்திரேலியாவில் ஓபியாய்டு பயன்பாடு அதிகரித்து வருவதால், இந்த மருந்துகளைப் பரிந்துரைப்பதிலும் விநியோகிப்பதிலும் கவனம் தேவை என்றும் தெரிவித்தார். பேராசிரியர் கிறிஸ் மஹெர் இது பற்றிக் கூறுகையில், சமீப வருடங்களில் உடல் மற்றும் உளவியல் சிகிச்சைகள், முதுகுவலி ஆகியவற்றுக்கு ஓபியாய்டு அல்லாத சிகிச்சைகளில் கவனம் செலுத்தப்படுகிறது . இருப்பினும் கடுமையான முதுகுவலி மற்றும் கழுத்து வலி ஆகியவற்றுக்கு ஓப்பியாய்டுகள் தீர்வு அல்ல என்பதற்கு இந்த ஆய்வு மேலும் ஒரு சான்றாகும். தேவைப்பட்டால் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் போன்ற எளிய வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்” என்றார். “ஓபியாய்டுகளின் விளைவுகள் தீங்கு விளைவிப்பவை என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றுதான். அவை மலச்சிக்கல் மற்றும் தூக்கம் போன்ற சிறிய பாதிப்புகளிலிருந்து தொடங்கி சார்பு, அடிமையாதல், திடீர் மரணம் போன்ற பெரிய பாதிப்புகள் வரை தொடரும்”, என்கிறார் பேராசிரியர் மெக்லாக்லன். மொத்தத்தில், இந்தச் சோதனையின் கண்டுபிடிப்புகள் ஓபியாய்டு வலி-நிவாரண மருந்துகளின் பயன்பாட்டை மறுமதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.