பச்சை நிறமாக மாறிவரும் பெருங்கடல்கள்! நிலமல்லவா பசுமையாக இருக்க வேண்டும்…!! என்ன நடக்கிறது?

செய்தி சுருக்கம்:
இந்த உலகத்தில் ஒவ்வொன்றிற்கும் சாசுவதமான நிறம் ஒன்று உள்ளது. நிலம் என்றால் அது பசுமையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். வானமும் கடலும் நீலமாக இருந்தால்தான் எல்லாம் சரியாக இருக்கின்றன என்று அர்த்தம்.
கடந்த 20 ஆண்டுகளில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட கடல்கள் பச்சை நிறமாக மாறி உள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக இவ்வாறு நிகழ்கிறதா என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இது ஒரு வித்தியாசமான நிகழ்வு. இதற்கு முன்பு இதுபோல நிகழ்ந்ததில்லை என்பதால் நம்மிடம் போதுமான தரவுகள் இல்லை. எனவே கடல் நிறத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அறிகுறிகளைக் கண்டறிய இன்னும் பல வருட தரவுகள் தேவை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“நாங்கள் இதற்கு முன்பு பார்த்திராத வகையில் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கிறோம்” என்று இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள தேசிய கடல்சார் மையத்தின் கடல் மற்றும் காலநிலை விஞ்ஞானி பிபி கேல் கூறுகிறார்.
கடல் எப்போது நிறம் மாறும்?
வழக்கமாக அவ்வப்போது கடல் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும். அதன் ஆழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகி மேலெழும்பும்போது குளோரோஃபில் என்ற பச்சை நிறமி கடலை பச்சை நிறமாக மாற்றுகிறது.
கடலிலிருந்து பிரதிபலிக்கப்படும் சூரிய ஒளியின் அலைவரிசையை வைத்து ஆய்வாளர்கள் கடலில் எவ்வளவு குளோரோஃபில் நிறைந்துள்ளது என்று கண்டறிகின்றனர். மேலும் கடல் வாழ் நுண்ணுயிர்களான பைட்டோபிளாக்டான் மற்றும் ஆல்கே போன்றவை எந்த அளவுக்கு உள்ளன என்பதையும் கண்டறிவர்.
ஆகவே கடல் நீர் சூடாகும்போது கடல்வாழ் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாகி, கடல் நீரின் நிறம் மாறும் என்பது நாம் இதுவரை கண்டறிந்த ஒன்று.
ஆனால் இந்த குளோரோஃபில் பச்சை நிறமி கடல் நீரின் மேல் மட்டத்தில் காணப்படும் அளவு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகிறது. எனவே காலநிலை மாற்றம் காரணமாக குளோரோபிளால் ஏற்படும் கடல் நீர் நிறமாற்றம் குறித்த தரவுகள் போதுமானதாக இல்லை. இதற்கு இன்னும் 40 ஆண்டு கால தரவுகள் தேவை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கைக்கோள் தரவுகள் கூறுவது என்ன?
செயற்கைக்கோள்கள் கடல் நீரின் நிறமாற்றத்தை பற்றி நிறைய தரவுகளை வழங்கி வருகின்றன. இருப்பினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இருப்பதால் அவற்றை கொண்டு ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.
இருப்பினும் 2002ல் ஏவப்பட்ட நாசாவின் கடல் சார் செயற்கைக்கோளில் உள்ள மோடிஸ் (MODIS) என்ற சென்சார் வழங்கும் தரவுகளை ஆய்வாளர்கள் முக்கியமானதாக கருதுகின்றனர்.
மோடிஸ் வழங்கும் தரவின்படி கடல் நீரிலிருந்து வெளிவரும் சூரிய ஒளியின் அலைவரிசை ஏழு விதமாக இருக்கிறது. குளோரோஃபில் பச்சை நிறமி குறித்து அளவிட ஒரே ஒரு அலைவரிசையை நம்பி இருப்பதை விட இது அதிக தரவுகளை தருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக மோடிஸ் வழங்கிய தரவுகளை தொகுத்து ஆராய்ந்ததில் உலகத்தில் உள்ள மொத்த பெருங்கடலில் 56% கடல்களில் நிறமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் 40º S மற்றும் 40º N அட்சரேகைகளுக்கு இடையே உள்ள கடல்களில் இந்த மாற்றம் காணப்படுகிறது.
தீவிர பருவ நிலை மாற்றங்கள் இல்லாததால் சாதாரணமாக இந்த பகுதிகளில் அதிக நிறமாற்றம் இருப்பதில்லை. ஆனால் நிலைமை இப்பொழுது அப்படி இல்லை.
பருவநிலை மாற்றம் காரணமா?
ஆகவே கடல் பச்சை நிறமாக மாறுவது கடலின் மேல் பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் நேரடி விளைவு அல்ல என்று தெரிய வருகிறது. ஏனெனில் பச்சை நிறமாக மாறியுள்ள கடல் பகுதிகள் வெப்ப நிலையில் பெரிதாக மாற்றம் அடையவில்லை.
உண்மையில் கடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு கடலில் பரவுகின்றன என்பது இந்த நிறமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இது வெறும் யூகம் மட்டுமே. உண்மையாக என்ன நடந்தது என்பதை ஆய்வாளர்கள் இன்னும் வரையறுத்துச் சொல்லவில்லை. கடல் நீர் நிறமாற்றத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் கடல் நீரின் நிறமாற்றம் என்பது கடலுக்குள் என நடந்து கொண்டிருக்கிறது என்பதை நமக்குச் சொல்வதாகும்.
கடலுக்குள் எது நடந்தாலும் அது நிலத்தை பாதிக்கும். ஏனெனில் நான் சுவாசிக்கும் பிராணவாயுவின் பெரும்பகுதி கடலால் உற்பத்தி செய்யப்பட்டு நமக்கு வழங்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.