fbpx
LOADING

Type to search

உடல் நலம் தெரிவு பல்பொருள்

உடல் பருமன் என்பது ஆரோக்கியக் குறைவே – ஆய்வு முடிவு..!!

செய்தி சுருக்கம்:

எனக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது. இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. என்ன, உடல் சற்று பருமனாக அதிக எடையுடன் இருக்கிறேன். அவ்வளவுதானே? என்று சற்றே அலட்சியமாக இருக்கும் நம்மில் பெரும்பாலானோருக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது ஒரு ஆய்வு முடிவு.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இவ்வாய்வுக் குழு அடித்து சொல்வது இதுதான் : ஒருவர் தனது உடலில் சர்க்கரையின் அளவு சரியாக இருந்தாலும், இரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் , மற்ற அனைத்து அளவுகளும் தன்மைகளும் சரியாக இருந்தாலும்,  தனது உடல் எடை கூடுதலாக இருந்தால் அவர் ஆரோக்கியமற்றவர் என்றே தன்னைக் கருத வேண்டும். அவர் எப்பாடு பட்டாவது தனது உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்த பின்னரே அவர் ஆரோக்கியமானவர் என்று எண்ணவேண்டும்.

பின்னணி:

உடன் பருமனாக இருப்பதுதான் ஆரோக்கியம், அப்படி இருப்பவர்கள் வஞ்சனை அற்ற மனசுக்காரர்கள் போன்ற போன தலைமுறை நம்பிக்கைகள் இப்போது நம்மிடையே இல்லை. எனினும், இந்த தலைமுறையினருக்கு சர்க்கரை அளவும் இரத்த அழுத்தமும் சரியாக இருந்தாலே தாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற மாயையில் வாழ்ந்து வருகின்றனர். 

உடலின் உயரத்திற்கேற்ற சரியான எடையில் நாம் இருக்க வேண்டும் என்பதிலும் சற்றே மெத்தனப் போக்கு நம்மிடையே இருந்து வருகிறது. எனது உயரம் 175 சென்டி மீட்டர். நான் 75 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் 83 இருக்கிறேன். அதனால் என்ன? கொஞ்சம்தானே எடை கூடுதல். சர்க்கரையோ பிபியோ எனக்கு இல்லையே என்பதுதான் சாமானிய மனநிலை. 

இதை முற்றிலும் தவறு என்று நிறுவுகிறது ஒரு புதிய ஆய்வு முடிவு. லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, 10 ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களிடமிருந்து தரவுகளைப் பெற்று ஆய்வு செய்தது. 

 ஆரோக்கியமான இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகள் இருந்தாலும் கூட, அதிக எடை அல்லது பருமனாக இருப்பது கரோனரி இதய நோய் (CHD) அபாயத்தை 28 சதவீதம் அதிகரிக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பருமனாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் (ஃபாட் பட் ஃபிட்) என்பது ஒரு மாயை என்று இக்குழுவினர் விளக்குகின்றனர். 

அதிக உடல் எடை அப்படி என்னதான் செய்துவிடும்?

உடலில் அதிகப்படியான கொழுப்பை சேமித்து வைப்பது, இரத்த அழுத்த அதிகரிப்பு, உயர் இரத்த சர்க்கரை மற்றும் மாற்றப்பட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் உட்பட பல வளர்சிதை மாற்றங்களை திடீரென உருவாக்க வல்லது, இது இதய நோய் மற்றும் வேறுவகையான ஆரோக்கியக் கேட்டிற்கு வழிவகுக்கும்.

அதிக உடல் எடை என்பது கரோனரி இதய நோய் (CHD) என்பதோடு தொடர்பு கொண்டது. அதிக எடையானது, அடைபட்ட தமனிகள் காரணமாக இதயத்திற்கு போதுமான இரத்தம் வராமல், மாரடைப்புக்கு வழிவகுக்கும். 

இந்த ஆய்வின் அடிப்படைதான் என்ன?

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை 12 ஆண்டுகளுக்கும் மேலாக அவதானித்ததில் 7,637 நபர்கள் கரோனரி இதய நோய் காரணமாக மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளனர். 

உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 30க்கு மேல் உள்ளவர்கள் பருமனானவர்கள் என்றும், பிஎம்ஐ 25–30 உள்ளவர்கள் அதிக எடை என்றும், 18.5–25 சாதாரண எடை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோர் அதிக ரத்தச் சர்க்கரை, அதிக இரத்த அழுத்தம், அதிக டிரைகிளிசரைடு அளவுகள், ஆண்களின் இடுப்பு அளவு  37” (94 cm) பெண்களின் இடுப்ப அளவு 31” (80 cm) ஆகியவை இருந்தால் அவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர். 

ஆய்வின் முடிவில் ‘ஆரோக்கியமானவர்கள் ஆனால் அதிக எடையுடன் இருப்பவர்கள்’ என்று வகைப்படுத்தப்பட்டவர்கள் 26% அதிக இதய நோய்க்கு ஆளாகும் நிலையிலும், ஆரோக்கியமானவர்கள் ஆனால் மிகப் பருமனானவர்கள் 28% அதிக இதய நோய்க்கு ஆளாவதாகவும் தெரிகிறது. 

ஆய்வு முடிவு தெரிவிப்பது என்ன?

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அதிக உடல் எடை என்பது இதய நோய் அபாயத்தை நேரடியாக அதிகரிக்காமல் இருக்கலாம், மாறாக மறைமுகமாக இரத்த அழுத்தம் மற்றும் குளுக்கோஸ் போன்றவற்றை அதிகரிக்க வல்லது. 

ஆரோக்கியமான – பருமனான உடல் என்ற கருத்து இனி ஒழிக்கப்பட வேண்டும். அதிகமான உடல் எடையானது முழு கவனத்தையும் செலுத்தி குறைக்கப்பட வேண்டியது என்ற கருத்து மக்களிடையே வலுப்பெற வேண்டும் என்பதே இம்மாபெரும் ஆய்வின் இறுதிக் கருத்தாகும்.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *