Nutmeg in Tamil

உடல்நலம் சரியில்லை என்றால் மக்கள் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அங்கு மருத்துவர் ஒருவர் அவர்களைப் பரிசோதித்து வேண்டிய மருந்துகளை எழுதித்தருகிறார். பின்னர் அவர்கள் மருந்துக்கடைக்குச் சென்று அந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு நலம் பெறுகிறார்கள்.
இதனால், நம் ஊரில் பெரும் எண்ணிக்கையில் மருந்துக்கடைகள் உள்ளன. சிறிய ஓர் அறைக் கடைகளில் தொடங்கிப் பிரமாண்டமாக எல்லாவிதமான மருந்துகளும் கிடைக்கும் கடைகள்வரை நாம் காண்கிறோம். இத்துடன், பல இணையத் தளங்கள், மொபைல் செயலிகளும் மருந்துகளை வீட்டுக்குக் கொண்டுவந்து தருகிறார்கள். அரசாங்க ஆதரவுடன் மருந்துகளைக் குறைந்த விலையில் விற்கும் பல கடைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த மருந்துகள் பெரும்பாலும் நோய் வந்தபிறகு சாப்பிடுகிறவை. அதற்குமுன்னால் சாப்பிட்டு நாம் நம்மை நலமாக வைத்துக்கொள்ள உதவுகிற, அதாவது, நோய் வருமுன் தடுக்கிற மருந்துகளும் உள்ளன. இதற்கு நாம் நாட்டுமருந்துக்கடைகளுக்குச் செல்லவேண்டும்.
நாட்டுமருந்துஎன்றால்என்ன?
நாட்டுமருந்து என்பது உள்நாட்டுமருந்தைக் குறிக்கிறது. அதாவது, செடிகள், இலைகள், கொடிகள், வேர்கள், பட்டைகள், கொட்டைகள், காய்கள், பழங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நம் உடலுக்கு நலம் தருகிற அல்லது நோய் வந்தால் அதைக் குணப்படுத்துகிற மருத்துவமுறையைத்தான் நாட்டுமருத்துவம் என்கிறார்கள். இவ்வகைக் கடைகள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், இந்தக் கடைகளில் பலவிதமான நாட்டுமருந்துகள் கிடைக்கின்றன. இவற்றுள் முக்கியமானவற்றைத் தெரிந்துவைத்துக்கொள்வதும், சிலவற்றை வீட்டில் எப்போதும் வைத்திருப்பது நல்லது.
முன்பெல்லாம் எல்லா வீடுகளிலும் நாட்டுமருந்துகள் கைவசம் இருக்கும். ‘இந்தப் பிரச்சனை வந்தால் இதை எடுத்துச் சாப்பிடு, சரியாகிவிடும்’ என்று மூத்தவர்கள் சொல்வார்கள். ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியால் இந்தப் பழக்கம் குறைந்துகொண்டிருக்கிறது.
நட்மெக்
இவ்வாறு நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கும் பல்வேறு பொருட்களில் ஒன்று, நட்மெக். இது ஒரு பேரிச்சம்பழத்தைப்போல் இருக்கும். ஆனால், கடினமாக இருக்கும். சிலர் இதை வாசனைப்பொருளாகச் சமையலில் பயன்படுத்துகிறார்கள், சிலர் இதை மருத்துவத்துக்கும் பயன்படுத்துகிறார்கள்.
உண்மையில் நட்மெக்குக்கு நிரூபிக்கப்பட்ட மருத்துவப் பண்பு ஏதும் இல்லை என்று அறிவியல் உலகம் சொல்கிறது. என்றாலும், நாட்டுமருத்துவத்தில் இது பல்வேறு நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், சரியான வல்லுனர்களிடம் அறிவுரை பெற்று இதைப் பயன்படுத்துவது நல்லது.
தமிழில்நட்மெக்
நட்மெக் என்ற பெயரைக் கேட்டதும் அது தமிழ் இல்லை என்பது தெரியும். ஆனால், இதைக் குறிப்பிடுவதற்கு ஒரு நல்ல தமிழ்ச்சொல் இருக்கிறது: சாதிக்காய்.
சொல்லப்போனால், நாட்டுமருந்துக்கடைகளில் நட்மெக் என்ற பெயரைவிடச் சாதிக்காய் என்ற பெயர்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இணையத்தில் அல்லது பெரிய நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் இதை வாங்கினால் நட்மெக் என்ற பெயரைப் பயன்படுத்திக் கேட்பது நல்லது. அவர்களுக்குச் சாதிக்காய் என்ற பெயர் தெரியாமல் இருக்கலாம், அல்லது, அதுதான் நட்மெக் என்று அவர்கள் உணராமல் இருக்கலாம்.
இங்குதான் உள்ளூர்ப் பிராண்டுகள் முதன்மையாகின்றன. நம் ஊரில் இத்தனை ஆண்டுகளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற, அதற்கென்று ஒரு நல்ல தமிழ்ப்பெயர் இருக்கிற ஒரு பொருளின் பெயரை நாம் நட்மெக் என்று அழைப்பதால் அந்தப் பெயர்தான் புகழ் பெறும். சாதிக்காய் என்ற எளிமையான பெயரை எல்லாரும் பயன்படுத்தவேண்டும், அதை அறியாதவர்களுக்கும் எடுத்துச்சொல்லி விளக்கவேண்டும், அப்போதுதான் கடைகளும் வணிக நிறுவனங்களும் இந்தத் தமிழ்ப்பெயரைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள், தமிழ்மட்டும் அறிந்த மக்களும் இவற்றை வாங்கிப் பயன்படுத்துகிற சூழ்நிலை ஏற்படும்.