Nice Meaning in Tamil

உணவகத்தில் நுழைகிறோம், பிடித்த உணவுப்பொருள் ஒன்றை ஆர்டர் செய்கிறோம். ஐந்து நிமிடத்தில் சர்வர் அந்தப் பொருளைக் கொண்டுவந்து வைக்கிறார், எடுத்துச் சாப்பிடுகிறோம். ‘எப்படி இருக்கு?’ என்று உடன் வந்தவர் கேட்கிறார். உடனடியாக நம் நாக்கில் தோன்றும் சொல் என்ன?
‘நைஸ்!’
இன்றைய நம் பேச்சில் மிக இயல்பாகக் கலந்துவிட்ட சொல் நைஸ். நல்ல உணவானாலும் சரி, அழகான ஓவியமானாலும் சரி, உருகவைக்கும் கவிதையானாலும் சரி, கைதட்டவைக்கும் சொற்பொழிவானாலும் சரி, ‘நைஸ்’ என்று சொல்லிவிடுகிறோம். இந்தச் சொல்லுக்கு உண்மையில் என்ன பொருள்? இதைத் தமிழில் சொல்வது எப்படி? இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
நைஸ்என்றால்என்ன?
ஆங்கிலத்தில் நைஸ் என்ற சொல்லுக்கு நல்லது, நயமானது, சிறப்பானது என்கிற பொருட்கள் உள்ளன. அதாவது, ஒரு விஷயம் எப்படிச் செய்யப்படவேண்டுமோ அப்படி நன்றாகச் செய்யப்பட்டிருந்தால் அதை நைஸ் என்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு மசால்வடை எப்படி இருக்கவேண்டும் என்றால், நன்கு பொரிந்திருக்கவேண்டும், வெளிப்பகுதி கடினமாகவும் உள்பகுதி சற்று மென்மையாகவும் இருக்கவேண்டும், காரச்சுவை நன்கு வெளிப்படவேண்டும், பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் இருக்கவேண்டும் என்றெல்லாம் பல விதிமுறைகள் உள்ளன. இவை அனைத்தும் சரியாக அமைகிற ஒரு மசால்வடைதான் ‘நைஸ்’ என்று பாராட்டப்படுகிறது.
இது உணவுக்குமட்டுமில்லை, எல்லாவிதமான பொருட்களுக்கும் சேவைகளுக்கும்கூட இதைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ‘நைஸ் மசால்வடை’ என்று சொல்வதுபோல், ‘நைஸ் சமையல்’ என்றும் சொல்லலாம்.
தமிழில்நைஸ்
தமிழில் ‘நைஸ்’ என்பதற்கு இணையாகப் பல சொற்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் புகழ்பெற்றதும் பொருத்தமானதும் ‘சிறப்பு’ என்பதுதான். அதாவது, ‘சிறப்பான மசால்வடை’ அல்லது ‘சிறப்பான சமையல்’.
பல ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப் பின்னொட்டுகளுடன் கலந்துகொள்வது இயல்பாக அமைகிறது. அதுபோல, ‘நைஸ்’ என்பது ‘நைஸ்ங்க’ என்றோ, ‘நைஸ்டா’ என்றோ சொல்லப்படலாம். இங்கும் ‘சிறப்பு’ என்ற சொல் நன்கு பொருந்துகிறது, ‘சிறப்புங்க’, ‘சிறப்புடா’ என்பதுபோல் இதைப் பயன்படுத்தலாம். ‘நன்கு சிறப்பாக ஆடினீர்கள்’, ‘அந்தக் கதை சிறப்பாக அமைந்திருந்தது’ என்பதுபோலவும் பயன்படுத்தலாம்.
நாம்நைஸ்என்றுபாராட்டுப்பெறுவதுஎப்படி?
மற்றவர்களை நைஸ் என்றோ சிறப்பு என்றோ பாராட்டினால் போதுமா? நம்முடைய படைப்புகளும் அப்படிப் பாராட்டப்படுவதுதான் உண்மையான விருது. அப்படிப் பல நைஸ்களை நாம் கேட்கவேண்டுமென்றால் என்ன செய்யலாம்?
எந்தவொரு பணியையும் ரசித்து, மனம் ஊன்றிச் செய்யும்போதுதான் அது நைஸ் ஆகிறது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தன்னுடைய சொந்த வீட்டை வடிவமைக்கிறார் அல்லது கட்டுகிறார் என்றால் ஒவ்வொரு செங்கல்லையும் எப்படிப் பார்த்துப் பார்த்து வாங்குவார், எப்படிக் கவனித்துக் கட்டுவார், சரிபார்ப்பார், பிழைகள் வந்தாலும் அவற்றை அக்கறையுடன் சரிசெய்வார் என்று யோசியுங்கள். அதுபோல நம்முடைய வேலைகள் அனைத்திலும் அக்கறையான உழைப்பைக் கொடுத்தால் ‘நைஸ்’ என்ற பாராட்டு குவியும்.
ஒருவேளை, அந்தப் பணி நன்றாக அமையாவிட்டாலும் பரவாயில்லை, அதில் என்ன குறை என்பதை நாம் உணர்ந்திருக்கவேண்டும், அப்போதுதான் அடுத்தமுறை அதை இன்னும் சிறப்பாகச் செய்யலாம். இப்படிப் படிப்படியாக நம்முடைய குறைகளைச் சரிசெய்துகொண்டு முன்னேறும்போது ஒவ்வொரு நாளும் நம்முடைய வளர்ச்சி வெளிப்படையாகத் தெரியும்.
மற்றவர்களுடைய பணிகளையும் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும், குறிப்பாக, ‘நைஸ்’ என்று நாம் பாராட்டும் விஷயங்களை மேலோட்டமாகப் பார்க்காமல் ஊன்றிப் பார்த்தால் அவை ஏன் சிறப்பாக உள்ளன என்று கற்றுக்கொள்ளலாம், அவற்றிலிருந்து பல உத்திகளைப் பழகிக்கொண்டு நம் பணிகளை மேம்படுத்தலாம்.