புத்தாடைக்குள் ஒளிந்திருக்கும் அபாயம்

பண்டிகைகள், திருவிழாக்கள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது புத்தாடைகள்தான். அதோடு நம் எல்லோருக்கும் புது உற்சாகமும் அவற்றை எப்போது அணியலாம் என்ற ஆவலும் பிறந்துவிடும். எந்தக் கடைக்குச் செல்ல வேண்டும், எந்த மாதிரியான ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும், எந்த பிராண்ட் ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முடிவுசெய்வதில் எழும் குஷி அலாதியானது. அதுமட்டுமா? புத்தாடைகளை வாங்கி வந்த பின்னர் அவற்றில் இருந்து வரும் வாசனையை முகர்ந்து பார்க்காதவர்கள் யார்? அந்த வாசனையைப் பிடிக்காது என்று சொல்பவர்கள்தான் யார்? ஆனால் அப்படிப்பட்ட புத்தாடைகளுக்குப் பின் மிகப்பெரும் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாகவே புதிய துணிகள் தயாரிக்கப்பட்டதிலிருந்து விற்கப்படும் வரை பல ரசாயனச் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தத் துணிகள் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதற்காக அவை பல விதமான செயல்முறைகளுக்கு உட்படுகின்றன. அதாவது சாயம் பூசப்பட்டு, சலவை செய்யப்பட்டு, நிறத்தைப் பாதுகாப்பதற்காக பல விதமான ரசாயனங்கள் இத்துணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஆடைகள், விற்பனை செய்யப்படும் கடைகளில் அதிக நாட்கள் இருந்தால் பூஞ்சைகள் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் துணிகளை தயாரிக்கப்படும் இடத்திலிருந்து விற்கப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லும் போக்குவரத்தின் போதும் பூஞ்சைகள் உருவாகலாம். ஆகையினால் இதைத் தடுக்க யூரியா ஃபார்மால்டிஹைடு என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இவை பூஞ்சைகள் வருவதைத் தடுப்பது மட்டுமல்லாமல் ஆடைகளில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த யூரியா ஃபார்மால்டிஹைடு தோலில் தடிப்புக்களை ஏற்படுத்தும் தன்மையுடையது. புதிய ஆடைகளை வாங்கி அணியும்போது இது நமது உடலின் கழுத்து, முதுகு, அக்குள், முழங்கை, தொடை ஆகிய பகுதிகளில் சருமப் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் துணிகளில் உள்ள சாயங்களில் அசோ அனிலின் மற்றும் பைரிடின் ஆகிய ரசாயனங்கள் உள்ளன. தற்போதைய பேஷன் துறை அசோ அனிலின் சாயங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. இவை துணிகளின் நிறம் மற்றும் இழைகளைக் கடினப்படுத்துவதோடு அவற்றின் சொந்த நறுமணத்தையும் வெளிப்படுத்துகின்றன. டிரைக்ளோசன்கள் மற்றும் நானில்பீனால் எதொக்ஸியோலேட்ஸ் என்னும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்தச் சாயங்கள் நம் உடலுடன் தொடர்பு கொள்ளும்போது பைப்ரோசிஸ் ஏற்படலாம்.
நம் உடலில் வியர்வை வெளியேறும்போது அசோ அனிலின் சாயமும் வெளியேறும். இது தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். புதுத் துணிகளின் வாசனை பலருக்கும் பிடிக்கும். வாங்கியவுடன் முகர்ந்து பார்க்கத் தூண்டும். காரணம் என்ன தெரியுமா? துணிகளில் உள்ள இந்த மணத்திற்கு சவர்க்காரம் மற்றும் துணி மென்மைப்படுத்திகளை அதிக அளவில் பயன்படுத்துவதுதான். இந்த சவர்க்காரங்களில் சல்ஃபேட், ஆப்டிகல் பிரைட்னர்ஸ், என்சைம்கள் போன்ற கடுமையான ரசாயனங்கள் உள்ளன. இவை சரும எரிச்சல், அரிப்பு, வறட்சி, தோல் சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும். துணிகள் கடைகளில் காட்சிப்படுத்தப்படும்போது ஏர் பிரெஷ்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தோலுக்கு அலர்ஜியை உண்டாக்கும்.
அடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? புதிய ஆடைகளை எடுக்கும்போது எத்தனை பேர் உங்களுக்கு முன் அவற்றை அணிந்து பார்த்திருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா என்பதுதான். உங்களுக்கு முன் அணிந்தவர்களுடைய வியர்வை, இறந்த செல்கள், பேன், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் உடல் அழுக்கு ஆகியவை உங்களுடன் ஒட்டிக் கொள்ளலாம். இவை தோல் ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு, சொறி, சிரங்கு, தோல் வறட்சி, தோல் வெடிப்பு, வெண்புள்ளி, கரும்புள்ளி ஆகியவற்றை ஏற்படுத்தும் என்றும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தோல் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
ஆக, புத்தாடைகள் என்று நாம் நினைக்கும் துணிகளில் இத்தனை ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். சட்டைகள், கால் சட்டைகள், டீ-சர்டுகள், புடவைகள் என்று எதுவாக இருந்தாலும் புதிய ஆடைகளை அணிவதற்கு முன் துவைப்பது நல்லது. அதற்கு முன் லேபிளில் உள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படிக்கவேண்டும். அடுத்ததாக ஆர்கானிக் ஆடைகளைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் அவற்றில் ரசாயனங்கள் குறைவு. வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தால் அதிகப்படியான ரசாயனங்கள் உள்ள சவர்க்காரம், கூடுதல் நிறம், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவை தண்ணீரில் கரைந்து வெளியேறும். புதுத் துணிகளை துவைத்த பின் வெயிலில் உலர்த்த வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளி ஒரு இயற்கையான கிருமி நாசினி. ஆகவே அந்தத் துணிகளில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் சூரிய ஒளியால் நீக்கப்படும். உடல்நலம் பேணவும், தொற்று அபாயத்தைத் தடுக்கவும் இந்த வழிமுறைகள் நிச்சயம் உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆக, புதுத்துணிதானே என்ற அலட்சியம் ஒருபோதும் வேண்டாம்.