இந்தோனேசியா மற்றும் இலங்கையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களை திருப்பி தர முடிவு செய்திருக்கும் நெதர்லாந்து!

செய்தி சுருக்கம்:
காலனித்துவ காலத்தில் இந்தோனேஷியா மற்றும் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மதிப்பு மிக்க கலைப் பொருட்கள், விலைமதிப்பற்ற கற்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உட்பட்ட கலைப் பொருட்களை நெதர்லாந்து திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
நெதர்லாந்து அரசின் ஒரு ஆலோசனைக் குழு 2020 ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் கொள்ளையடிக்கப்பட்ட கலாச்சார பொருட்களை எந்த நிபந்தனையும் இன்றி முந்தைய காலனி நாடுகளுக்கு திருப்பி அளிக்க வலியுறுத்தியது. இந்த அறிக்கையில் 484 பொருட்களை அக்குழு குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜாவானிய இந்து சாம்ராஜ்யமான சிங்கசாரியின் நான்கு கல் சிலைகள், க்லுங்குங் இராச்சியத்தின் கெரிஸ் குத்து மற்றும் பாலியில் இருந்து பிடா மஹா சேகரிப்பு என்று அழைக்கப்படும் 132 நவீன கலைப் பொருட்கள் முறைப்படி இந்தோனேசிய அரசாங்கத்தின் தேசிய அருங்காட்சியகத்திற்கு திருப்பி அளிக்கப்படும்.
இருந்த போதும் இந்தோனேசியா அரசாங்கம் 2022 இல் திரும்பி அளிக்கக் கோரிய ஜாவா மனிதனின் புகழ்பெற்ற மனித எச்சங்கள் இந்த பட்டியலில் இல்லை.
பின்னணி:
1891 மற்றும் 92 ஆம் ஆண்டுகளில் டச்சு ஆந்திரபாலஜிஸ்ட் யூஜின் டுபோயிஸ் இந்தோனேசியாவிலிருந்து அகழ்வாராய்ச்சி செய்தபோது, மண்டை ஓடு உட்பட மனித எச்சங்கள் பலவற்றை கண்டறிந்தார். இது இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழமையான மனித புதை படிவம் ஆகும். காலனி ஆதிக்கத்தின் போது டுபோயிஸ் இந்தோனேசியாவில் இருந்து புதை படிவங்களை எடுத்ததாக இந்தோனேஷியா வாதிடுகிறது. இந்த அகழ்வாய்விற்கு டுபோயிஸ் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தியதாகவும் அப்போது அவர்களில் சிலர் இறந்து போனதாகவும் இந்தோனேசியா தெரிவிக்கிறது.
ஆனால் டச்சு அருங்காட்சியகம் டுபோயிஸின் முயற்சி இல்லாமல் ஜாவா மனிதன் கண்டுபிடிக்கப்பட்டிருக்க மாட்டான் என்றும் வரலாற்றுக்கு முந்தைய படிமப் பொருட்கள் தேசிய பாரம்பரியமாக கருதப்படவில்லை என்றும் கூறுகிறது.
டச்சு அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ஜாவா மனித எச்சங்களை திரும்ப ஒப்படைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சில விஷயங்கள் மற்றவற்றை விட அதிக காலம் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் ஆறு பொருட்களானது கண்டி பீரங்கி என அழைக்கப்படும் நன்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய அளவிலான வெண்கல வார்ப்புத் துப்பாக்கி ஆகும். இது தற்போது ஆம்ஸ்ட்ரடாமின் ரிஜெக்ஸ் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்கம் மற்றும் வெள்ளிகளான வாட்களும் சிங்கள கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகளும் உள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அருங்காட்சியகங்களில் உள்ள சேகரிப்பு பொருட்களை ஆய்வு செய்து அதை உரிய காலனி நாட்டிற்கு மாற்றும் நடவடிக்கையை எடுத்துள்ளன.
இருப்பினும் உலகத்தின் பெரும்பகுதியை காலனியாக வைத்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் தனது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய பொருட்களை வைத்திருக்கிறது. இருப்பினும் இதுகுறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைச் சேர்ந்த மயிலாசனம் மற்றும் கோஹினூர் வைரங்கள் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வசம் உள்ளது. டச்சு அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளைப் பார்த்தாவது பிரிட்டிஷ் அரசாங்கம் தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.