fbpx
LOADING

Type to search

உலகம் சிறப்புக் கட்டுரைகள்

பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளருக்கு கத்திக்குத்து – அமெரிக்க சிறையில் சக கைதியால் தாக்கப்பட்டார்.

செய்தி சுருக்கம்:

கடந்த திங்களன்று The Associated Press வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்காவை சேர்ந்த Larry Nassar என்பவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக பணியாற்றும் போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு Florida வில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைக்குள் சக கைதிகளுடன் நடந்த வாக்குவாதத்தில் Larry கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்து உள்ளார். இவரை 2018 ஆம் ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பின் முடிவில், இந்த தீர்ப்பானது “நான் Larry க்கு எழுதிய மரண சாசனம் ஆகும்” என்று கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தி நிறுவனத்திற்கு வந்த இரண்டு அனாமதேய தகவல்கள் சிறைச்சாலையில் நிகழ்ந்த இந்த விஷயத்தை வெளிக்கொணர்ந்து உள்ளது, United States Penitentiary Coleman என்ற Florida மாகாண சிறைச்சாலையில் கடந்த ஞாயிறன்று கைதிகளிடையே ஏற்பட்ட மோதலின் போது சக கைதியால் Nassar மார்பிலும் பின்பக்கத்திலும் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார், அந்த அனாமதேய தகவலின்படி திங்களன்று Larry இன் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக தெரிகிறது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

1980 களில் அமெரிக்க தேசிய ஜிம்னாஸ்டிக் அணிகளுக்கு தேர்வாகும் வீரர்களின் கோச் ஆக Nassar என்பவன் பணிபுரிந்துள்ளான். மேலும், 1990 முதல் 2014 வரையிலான ஜிம்னாஸ்டிக் அணிகளுக்கு உடன்செல்லும் மருத்துவராக பணியில் இருந்துள்ளான். இந்த கால கட்டத்தில் Nassar ஆல் குறைந்தது 265 இளம்பெண்களும் சிறு குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தகவல் தெரிவிக்கிறது, இந்த பட்டியலில் ஒலிம்பிக் அணிக்கு தேர்வான வீராங்கனைகளும் அடங்கியுள்ளனர். 6 வயதே ஆன குழந்தைகளையும் விடவில்லை இந்த மனிதப் போர்வை போர்த்திக்கொண்டு உலா வந்த மிருகம்.

இதுபோக இவன் பல கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக இருந்துள்ளான். இவன்பேரில் மொத்தமாக சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்களின் எண்ணிக்கை 565 ஆகும். இவனால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் 500 மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக பகிர்ந்தளிக்க Michigan State University ஒப்புக்கொண்டுள்ளது.

ஓராண்டு தள்ளிப்போன தண்டனை:

முதலாவதாக 2016 இல் தனது கணிப்பொறியில் 37000 த்திற்கும் அதிகமான சிறு குழந்தைகளின் நிர்வாணப் படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக FBI யால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டான். பின்னர் 2017 இல் Nassar மீதான பாலியல் புகார் விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டு 60 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்க பட்டது. அந்த தீர்ப்பின் போது, ஒரு வருடத்திற்கு முன்னரே Nassar செய்த குற்றங்களுக்கான போதிய ஆதாரங்கள் கிடைத்த போதிலும் அவன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தண்டனையும் தராமல் விடுதலை செய்த FBI அமைப்பின் மீது கேள்வி எழுப்பி குற்றம் சாட்டியது நீதிமன்றம். இதன் பின்னர் 2018 இல் நடந்த இறுதிகட்ட விசாரணையின் போது Michigan State நீதிபதியால் 40 முதல் 175 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டான். அவன் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு தன் வாழ்நாள் காலம் முழுவதையும் சிறைக்கம்பிகளுக்கு பின்னிருந்து கழிக்கும் வகையில் தீர்ப்பு இருந்தது.

அந்நேரத்தில் நீதிபதியாக இருந்த Rosemarie Aquilina என்பவர் Nassar க்கு அளித்த தீர்ப்பை வாசிக்கும் போது “நான் உன்னுடைய மரண சாசனத்தில் இப்பொழுது கையெழுத்து இடுகிறேன்” என்று கூறியுள்ளார். அவர் Nassar ஐ ஒரு கேவலமான மிருகம் என்றும், அவனுக்கு இவ்வுலகில் சுதந்திரமாக நடமாட தகுதியில்லை என்றும், அவனுடைய வாழ்நாள் முடியும் வரை சிறைச்சாலைக்கு வெளியில் செல்ல முடியாது என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Nassar பல தசாப்தங்களாக செய்து வந்த இந்த பெண்கள் மீதான பாலியல் அச்சுறுத்தல் வழக்குகளின் மீதான முழுமையான விசாரணை சட்டரீதியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் அவனால் பாதிக்கப்பட்ட 90 பெண்கள் அமெரிக்க அரசாங்கத்தின் மீது 1 பில்லியன் டாலர்கள் மறுவாழ்வு நிதியாக தரக்கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர், அதில், FBI இன் கவனக்குறைவு காரணமாக, Nassar ஐ ஒரு வருடம் முன்னதாகவே குற்றவாளி என கண்டறிந்து தண்டனை தராமல் அலட்சியமாக விட்டதால் அவன் 2017 வரை சுதந்திரமாக உலவியுள்ளான் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த இடைப்பட்ட ஒருவருட காலத்தில் மட்டும் இவன் மேலும் 70 பெண்களை சீரழித்துள்ளான் என்று Justice Department இன் 2021 இல் வெளிவந்த ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

தங்களது இளம் வீராங்கனைகளை Nassar ரிடம் இருந்து காப்பாற்றத் தவறிய குற்றத்திற்கு மன்னிப்பு கோரும் வகையில் அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் அமைப்பு மற்றும் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி மற்றும் Paralymbic கமிட்டி ஆகியவை இணைந்து 380 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

பின்னணி:

உலகம் எங்கும் இதுபோன்ற அவலங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வதில் அனைத்து நாடுகளுமே இடம் பிடிக்கின்றன. இந்தியாவிலும் இதேபோன்ற ஒன்று தற்போது நிகழ்ந்து வருகிறது, இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைகள் அமைச்சர் ஒருவர் மீது பாலியல் புகார்கள் சுமத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதிரியான ஒழுக்கக் கேடான செயல்களில் படித்தவர்களும், பதவியில் இருப்பவர்களும் ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயம் ஆகும். அனைத்து துறைகளிலும் நிகழும் இவ்வாறான குற்றங்களால் பெண்கள் சுதந்திரமும், அவர்கள் முன்னேற்றமும் பேச்சளவில் மட்டுமே வாழும் என்பதே நிதர்சனம்.

அரசாங்கத்தை மட்டுமே நம்பி செல்லும் விளையாட்டு வீராங்கனைகள் இதுபோன்ற ஆட்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவது அரசாங்கத்தின் மீது தான் அவப்பெயரை உருவாக்கும், பாதுகாப்பாக இருக்க வேண்டிய கோச்சுகளும், அதிகாரிகளுமே இதுபோன்ற அத்து மீறல்களில் ஈடுபட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்டனை அளிக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர். அம்மாதிரியான ஆட்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் மற்றொரு நபர் இந்த தவறை செய்ய கனவிலும் நினைக்க முடியாதவாறு கடுமையாக இருக்க வேண்டும். இந்த Nassar சிறையில் சக குற்றவாளிகளால் தாக்கப்பட்டது சரிதான் என்று பல தரப்பு மக்களும் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள் :

பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பம் சாத்தியமா?
செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்கிறார் ஐபிஎம் சிஇஓ அரவி...
உக்ரைனுக்கு நேடோ உறுப்பினர் பதவி மற்றும் ரஷ்யாவிற்கு நெருக்கடி - லிதுவேனியா மாநாட்டில் என்னென்ன எதிர...
தனிமை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்
உலக மக்கள் தொகையில் பாதி பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்! 21 வருடங்களாக செய்யப்பட்ட ஆராய்ச்சி சொ...
அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் புத்திசாலிகளாக இருப்பதில்லையா? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
நொடிப்பொழுதில் கட்டுரை எழுதி தரக்கூடிய ChatGPT செயலியின் நுண்ணறிவு திருடப்பட்டு கட்டமைக்கப்பட்டதா? -...
டிஜிட்டல் யுகத்தில் பிரைவசி எனும் ஹம்பக்
தமிழகத்தில் மூடப்படும் 500 மதுபானக் கடைகள் - விளைவுகளும் நிரந்தரத் தீர்வும்.
இந்தியா-ஜெர்மனி இடையே 5.2 பில்லியன் டாலர் மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்க ஒப்பந்தம்.
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *