மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் குட்டித்தூக்கம் – ஆய்வு முடிவு!

செய்திச் சுருக்கம்
தூக்கத்தைப்போல உடலுக்கு ஓய்வு தரும் வேறு உண்டா இவ்வுலகில்? அமைதியான சூழலில் ஒரு 20 நிமிடங்கள் உறங்கி எழுவது நமது ஆற்றலைப் புதுப்பிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில், 20 நிமிட குட்டித் தூக்கம் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கண்டறிந்துள்ளனர்.
ஸ்லீப் ஹெல்த் ஜர்னலில் சமீபத்தில் வெளியிட்ட, UCL மற்றும் உருகுவேயில் உள்ள குடியரசு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் குட்டித் தூக்கம் போடும் பழக்கத்திற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தனர். மூத்த எழுத்தாளர் டாக்டர் விக்டோரியா கார்ஃபீல்ட் “குட்டித் தூக்கத்தின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வது பகல்நேரத் தூக்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் தவறான ந்ம்பிக்கைகளைக் களைய உதவும்.” என்று கூறியதை வலியுறுத்துவதாக இந்த ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, டாக்டர் கார்பீல்டு மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு மெண்டலியன் ரேண்டமைசேஷன் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி, மனிதர்களின் மரபணு சார்ந்த சிந்தனை ஓட்டத்தையும், அவர்களின் தூங்கும் பழக்கத்தையும் ஆராய்ந்தனர். 40-69 வயதுடைய 370,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து இந்தத் தரவை பகுப்பாய்வு செய்ததன் மூலம், இந்த மரபணு மாறுபாடு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது மரபணு ரீதியாக அதிக தூக்கம் வருபவர்களின் மூளை ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றலை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர்.
மரபியல் காரணமாக அதிகமாக தூங்குபவர்களது மொத்த மூளையின் அளவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகம் தூங்குபவர்களுக்கும் அதிகம் தூங்காதவர்களுக்கும் இடையிலான மூளையின் அளவு வித்தியாசம் 2.6 – 6.5 ஆண்டு வயது முதிர்வுக்கு சமம் என்றும் ஆய்வுக் குழு மதிப்பிட்டுள்ளது.
அடிக்கடி குட்டித் தூக்கம் போடுபவர்கள் மற்ற நடவடிக்கைகளை எப்படிச் செய்கின்றனர் மற்றும் அவர்களது மூளை ஆரோக்கியம் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும். இந்த ஆய்வு, “குறுகிய பகல்நேர குட்டித் தூக்கம் இன்னும் முழுவதுமாக கண்டறியப்படாத புதையல்தான், இது நாம் வயதாகும்போது மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவக்கூடும். ” என்றார் டாக்டர் கார்பீல்ட்.
ஆனால், மூளையின் அளவு அதிகமாக இருப்பது என்றால் என்ன? உண்மையில் மூளையின் அளவு அதிகமாக இருப்பது நல்ல மூளை ஆரோக்கியத்தின் அறிகுறியாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது டிமென்ஷியா போன்ற சில நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பைக் குறைக்கவும் செய்கிறது. தூக்கமின்மை போன்ற தூக்கப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது தொடர்ந்து மோசமாக தூங்குபவர்களின் மூளையின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பகல் நேர குட்டித் தூக்கம் உண்மையில் பல நன்மைகளைக் கொண்டுள்ளது, உங்களின் நினைவாற்றல் மற்றும் சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்துவது போன்ற நன்மைகளை வழங்கக்கூடியது. தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் சேர்த்துத் தூங்குவது உங்கள் ஒட்டுமொத்த தூக்கத்திற்கும் உதவும். குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால், உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதுடன், உங்களது தூங்கும் பழக்கம் மேம்படும். இது உங்கள் இரவுநேர தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்காது. மேலும் நீங்கள் தூங்குவதையும் விழிப்பதையும் இப்பழக்கம் எளிதாக்குகிறது.
குட்டித் தூக்கம் போடுவது என்னவோ மிகவும் நல்லதாகத்தான் தெரிகிறது! இருப்பினும் குட்டித்தூக்கத்திற்கான விதிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சரியான நேரத்தில் முறையான சூழலில் குட்டித்தூக்கத்தை அமைக்க வேண்டும். நீங்கள் குட்டித் தூக்கம் போட விரும்புகிறீர்கள் என்றால், எதிர்காலத்தில் சிறப்பான மூளை ஆரோக்கியத்திற்காக உங்களை நீங்களே தயார் செய்துகொள்கின்றீர்கள் என்று சந்தோசப்படுங்கள்!
பகல் நேர குட்டித் தூக்கத்திற்கான விதிமுரைகள்:
ஒன்று : மதியம் 3 மணிக்கு மேல் உறங்காதீர்கள்! “பகலில் மிகவும் தாமதமாகத் தூங்குவது, இரவில் உங்களின் இயற்கையான உறக்க பழக்கத்தை பாதிக்கக்கூடும், அதனால் முடிந்தவரை இதைத் தவிர்ப்பது நல்லது” என்று தூக்க நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் காலை அல்லது மதியம் அதிகாலையில் உறங்குவதைப் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் இரவு 7 மணிக்கு ஒரு குட்டித்தூக்கத்தைத் தேர்வுசெய்தால், அது உங்கள் தூக்க-விழிப்புச் சுழற்சியைக் குழப்பி, நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
இரண்டு : குட்டித் தூக்கத்தை 20 நிமிடங்களைத் தாண்டக் கூடாது! நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க விரும்பினால், 20 நிமிடங்களே உகந்த நேரமாகும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்களுக்கு நேரமில்லை அல்லது இரவு நல்ல உறக்கதை பெற்றிருக்கின்றீர்கள் என்றால் ஆற்றலை அதிகரிக்க 10 நிமிட பவர் தூக்கம் போதுமானதாக இருக்கும். மாறாக, நீங்கள் உண்மையில் இரவு சரியான தூக்கமில்லாமல் இருந்தால், ஒரு ஒன்றரை மணிநேர தூக்கத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது. “90-நிமிட தூக்கம் உற்பத்தித்திறன் மற்றும் விழிப்புணர்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று: சரியான சூழலை அமைத்துக் கொள்ளுங்கள். குட்டித் தூக்கத்தின் தரத்தை தூங்கும் இடம் மற்றும் சூழல் மேம்படுத்துகிறது. நீங்கள் மற்றவர்கள் தொந்தரவு செய்யாத வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, காதுகுழாய்கள் மற்றும் கண் மாஸ்க் மூலம் ஒலிகள் மற்றும் ஒளியைத் தடுப்பது சாலச் சிறந்தது.