மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்க்கு ஓர் விடிவுகாலம்

பெண்கள் கர்ப்ப காலத்தில் வெளியிடப்படும் ஹார்மோன் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (எம்.எஸ்) நோயால் மூளையின் புறணிப் பகுதியில் ஏற்படும் பாதிப்பை மாற்றியமைக்க உதவும் என்பதை சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
இதுவரை மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும், செயல்பாடுகளை மேம்படுத்தும் பல்வேறு சிகிச்சை முறைகள் ஆய்வில்தான் உள்ளது.
ஆலன் மெக்கென்சி-கிரஹாம், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நரம்பியல் இணைப் பேராசிரியர். இவர் தலைமையிலான ஆராய்ச்சி கட்டுரை மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயை குணமாக்க புதிய பாதையை கண்டறிந்துள்ளது.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்பது தண்டு வட மரப்பு நோய். இது உடலில் மத்திய நரம்புகளை பாதிக்கும் ஓர் ஆட்டோ இம்யூன் கோளாறு என்றும் சொல்லலாம்.இந்த நோயினால் உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான செல்களை தாக்குகிறது. அதிலும் இந்த நோயெதிர்ப்பு அமைப்பு மூளை மற்றும் முதுகுத்தண்டில் உள்ள நரம்புகளை சுற்றியுள்ள பாதுகாப்பு உறையான மெய்லினில் உள்ள செல்களை தாக்குகிறது.மெய்லின் என்பது ஒரு தடிமனான லிப்போபுரோட்டீன் அடுக்கு.இது சில நியூரான்களின் அச்சுகளைச் சுற்றி ரோல் வடிவ உறைகளை உருவாக்குகிறது. இந்த மெய்லின் உறைக்கு ஏற்படும் சேதம் மூளையிலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.மெய்லின் இல்லாமல் நம் மூளை அதன் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்த முடியாது.நரம்பு செல்கள் இடையே விரைவாகவும் திறமையாகவும் நரம்பு தூண்டுதல்களை பரப்ப அனுமதிக்க மெயிலின் உதவுகிறது. ஆகையால் மெயிலின் சேதமடைவதால் மூளை, முதுகெலும்பு மற்றும் கண்களை பாதிக்க தொடங்கி தசைப்பிடிப்பு, தசை பலவீனம்,குடல் அல்லது சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழப்பது என்று நோய்கள் தொடர்ந்து உயிரை இழக்கும் வரை ஏற்படுத்துகிறது.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் ஏற்படும் விதங்கள் நன்றாக தெரிந்திருந்தாலும் அதை ஏற்படுத்தும் காரணிகள் இதுவரை தெளிவாகவில்லை. சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சி,புகைபிடிப்பதைத் தவிர்த்தல்,போதுமான வைட்டமின் டி யால் எம்.எஸ் நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் சில சுற்றுப்புற சூழல் மற்றும் மரபணு மாற்றங்கள் தான் இந்நோய் ஏற்பட காரணிகள் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ் பரம்பரை நோயல்ல,எனினும் பல மரபணு மாற்றங்கள் எம்.எஸ் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளனர்.
மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்சின் அறிகுறி பல நோய்களை ஒத்திருப்பதால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதும் கடினமாக இருக்கிறது. மல்டிபிள் ஸ்களீரோசிஸுக்கு நிரந்தர சிகிச்சை இல்லை, ஆனால் முறையான சிகிச்சையின் மூலம் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் பிரச்சனைகளை நிர்வகிக்கலாம் என்பதே தற்போதைய நிலை.
ஆலன் மெக்கென்சி-கிரஹாம் உடன் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் “எஸ்ட்ரியால்” என்ற கர்ப்பகாலத்தில் பெண்கள் உடலில் அதிகமாக சுரக்கும் ஹார்மோனை மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய் கண்ட எலிகளுக்கு வழங்கி அதன் விளைவுகளை கவனித்துள்ளனர். எஸ்ட்ரியால் ஹார்மோன் மல்டிபிள் ஸ்களீரோசிஸால் மூளையில் ஏற்படும் சேதத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் அதே நேரத்தில் புதிய மெய்லினை உருவாக்கியிருக்கிறது.
எஸ்ட்ரியால் கர்ப்ப காலத்தில் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் என்பதால் கருப்பையில் மூளை வளர்ச்சியின் செயல்முறையையே இங்கேயும் உருவகப்படுத்தியிருக்கலாம் என்கிறார் ஆலன் மெக்கென்சி.
மூளை வீக்கத்தை குறைப்பதிலும் அதனால் ஏற்படும் பிற மூளை சம்பந்தப்பட்ட நோய்களின் தக்காத்தை குறைப்பதிலும் எஸ்ட்ரியால் பயன்படுவதை காண மகிழ்ச்சியாக இருந்தாலும் அடுத்தகட்ட ஆய்வில் மனிதர்களின் மீதான சோதனையில் இன்னமும் என்னென்ன பக்க விளைவுகள் வருமோ தெரியது என்றும் பயமுறுத்துகிறார் ஆலன் மெக்கென்சி. கூடுதலாக,வல்லுநர்கள் மூளையை சரிசெய்யத் தூண்டக்கூடிய தனித்துவமான ஈஸ்ட்ரோஜன்களை எம்.எஸ் மற்றும் அல்சைமர் நோய் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களில் மூளையை பாதுகாப்பதிலும் சரிசெய்வதிலும் ஈஸ்ட்ரோஜன்களின் பங்களிப்பையும் நன்மைகளையும் நரம்பியல் ஆராயச்சியாளர்கள் கவனம் செலுத்தி தீவிரமாக ஆராய வேண்டும் என்கிறார்.
இதில் முக்கியமாக எஸ்ட்ரியால் எந்தளவிற்கு மனித உடலில் பயபடுத்தலாம் என்கிற கேள்வியும் இருக்கிறதே! அதற்கான ஆய்வுகளும் நடந்தேறி கொண்டிருக்கிறது என்கிறார்கள் மற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே 2009ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முப்பதாம் தேதி உலக மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் நாள் கொண்டாடப்படுகிறது. உடலுக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பு முறிவதால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடியாது. நோயின் தீவிரம் நபருக்கு நபர் மாறுபடும் என்றாலும், நிச்சயமாக இயல்பு வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடும்.காரணம், அறிகுறி, சிகிச்சை எல்லாமே ஆய்வில் இருக்கும் இந்நோய் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையே அசைத்து பார்க்கும் நிலையில் உள்ளது.
தோராயமாக இலட்சத்தில் 150 பேருக்கு வரும் இந்நோயிக்கு சிகிச்சை முறைகளும், காரணிகளும் தெரியவருமாயின் ஒழிக்க முடியும் என்று நம்புவோமாக .