ஆர்க்டிக் பெருங்கடலில் அதிகரிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கழிவுகள்

செய்தி சுருக்கம்:
உலகின் வடதுருவத்தில் அமைந்துள்ள ஆர்க்டிக் பெருங்கடலிலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆர்க்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் மட்டும் ஏறக்குறைய 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு பிளாஸ்டிக் கழிவு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 45 ஆயிரம் கோடி கிலோகிராம் (1 டிரில்லியன் பவுண்ட்) பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படும் நிலையில், உலகத்தில் பிளாஸ்டிக் கழிவின் அளவு 2060ம் ஆண்டுவாக்கில் மூன்று மடங்காக உயரும் என்று கருதப்படுகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகமெல்லாம் பரவி வரும் நுண்நெகிழி என்னும் மைக்ரோபிளாஸ்டிக் மாசு, வட துருவத்தில் இருக்கும் ஆர்க்டிக் பெருங்கடலையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு 23 ஆண்டு கால இடைவெளியிலும் இப்பெருங்கடலில் மைக்ரோபிளாஸ்டிக் கழிவின் அளவு இருமடங்கு கூடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 5 மி.மீ. அளவுக்குக் குறைந்த வேதியியல் துகள்கள் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்று குறிப்பிடப்படுகின்றன.
உலகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி ஆண்டுதோறும் 8.4 மடங்கு அதிகரிப்பதாலும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திறம்பட செய்யப்படாததாலும் ஆர்க்டிக் பெருங்கடலில் மைக்ரோபிளாஸ்டிக் கழிவின் அளவு ஆண்டுதோறும் 3 சதவீதம் உயருவதாக தலைமை ஆய்வாளர் ஷியாங் கியூ கிம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கழிவின் அளவு பெருக்கமானால் நாளடைவில் மனிதர்களின் உடல்களிலும் இந்த கழிவின் தாக்கம் தெரியும் என்று ஆய்வாளர் ஸ்டீவ் ஆலன் கருத்து தெரிவித்துள்ளார்.
பின்னணி:
ஆர்க்டிக் பெருங்கடலானது உலகத்தில் இருக்கும் பெருங்கடல்களுள் சிறியதாகும். அதாவது இந்தியப் பெருங்கடலின் அளவில் ஆறில் ஒரு பங்கே ஆர்க்டிக் பெருங்கடல். அதன் பரப்பு ஏறத்தாழ 1 கோடியே 40 லட்சத்தும் 90 ஆயிரம் சதுர கி.மீ ஆகும். இந்தப் பெருங்கடலின் சராசரி ஆழம் 987 மீட்டர் என கூறப்படுகிறது.
ஆர்க்டிக் பெருங்கடலின் மேற்கு கரையில் 13 சதவீத பரப்பில் கடல் நீர், பனிக்கட்டி மற்றும் படிவு தளங்களில் காணப்படும் மைக்ரோபிளாஸ்டிக்கின் அளவை ஆய்வாளர்கள் குழு கணக்கிட்டுள்ளது. பிளாஸ்டிக் துண்டுகள், இழைகள் மற்றும் விரிப்புகள் என்று மூன்று வடிவில் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
உடைந்த பாட்டில் துண்டுகள், பைகள் மற்றும் சிந்தடிக் ஆடைகளிலுள்ள நுண்இழைகள் ஆகியவையும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவுகளாக கடலில் சேர்கின்றன.
நுண்நெகிழி கழிவானது வெவ்வேறு சூழ்நிலை வழியாக வந்து சேகரமாகிறது. துணி துவைக்கும்போது பல நூறாயிரம் சிந்தடிக் இழைகள் நீரில் கலந்து, கழிவு நீர் மேலாண்மை செய்யும் இடங்களின் வழியாக பெருங்கடலில் கலக்கிறது. நீரோட்டங்கள் கழிவுகளை ஆர்க்டிக் பெருங்கடலுக்குள் கொண்டு சேர்க்கின்றன. இவை பெருங்கடல் படிவு தளத்தில் அப்படியே தங்குகின்றன. நீர் மறுசுழற்சி செய்யும் ஓர் ஆலையிலிருந்து ஆண்டுக்கு ஏறக்குறைய 13 லட்சத்து 60 ஆயிரம் கிலோ கிராம் நுண்நெகிழி வெளியேறுவதாகவும் ஆய்வு கூறுகிறது.
காற்றின் மூலமாகவும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆர்க்டிக் கடலுக்கு வருகின்றன. வட அமெரிக்காவின் மெக்கென்ஸி மற்றும் யூகோன், ஓப், உலகின் ஐந்தாவது பெரிய நதியான யென்னிஸே மற்றும் லேனா ஆகிய பெரிய ஆறுகள் ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகள் மூலமாகவும் பிளாஸ்டிக் மாசு, ஆர்க்டிக் கடலை அடைகிறது.
ஆர்க்டிக் பெருங்கடலிலுள்ள பனிக்கட்டிகளில் ஒரு கனமீட்டருக்கு 45 லட்சம் மைக்ரோபிளாஸ்டிக்குகள் காணப்படுகின்றன. பனிக்கட்டி உருகும்போது இந்த நுண்நெகிழிகள் கடலின் அடிமட்டத்திற்குள் செல்கின்றன. மீண்டும் பனியாக உறையும்போது, நுண்நெகிழி பனிக்கட்டிக்குள் சேகரமாகிறது.
கோடைகாலத்தில் கடலில் பனிக்கட்டியை சுற்றி மைக்ரோபிளாஸ்டிக் அதிகமாக காணப்படுகிறது. ஆர்க்டிக் கடலிலுள்ள பனிக்கட்டிகளின் கீழ்ப்பக்கம் மெலோசிரா ஆர்க்டிகா என்ற பாசி வளர்கிறது. இந்தப் பாசி ஸூபிளாங்டன் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகிறது. பனிக்கட்டி உருகும்போது இந்தப் பாசிகள் சிந்தடிக் மாசுகளை தங்களோடு எடுத்துக்கொண்டு கடலின் தரைப்பகுதிக்கு ஆழ்ந்து செல்கின்றன. ஆர்க்டிக் கடலில் ஒரு கனமீட்டர் பரப்பில் 31,000 மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக ஜெர்மனியை சேர்ந்த மெலானி பெர்க்மான் என்னும் கடல்சார் உயிரியலாளர் கூறியுள்ளார். ஆர்க்டிக் பெருங்கடலிலுள்ள பனிக்கட்டியில் ஒரு கனமீட்டருக்கு 45 லட்சம் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாகவும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
ஆர்க்டிக் பெருங்கடலிலுள்ள மைக்ரோபிளாஸ்டிக் அங்குள்ள உணவு சங்கிலியையும் பாதிக்கிறது. மெலோசிரா ஆர்க்டிகா பாசியை உண்ணும் ஸூபிளாங்டன், பிளாஸ்டிக்கை சாப்பிடுகிறது. மைக்ரோபிளாஸ்டிக் கடலுக்குள் ஆழ்ந்துசெல்லும்போது, கடலின் ஆழத்தில் இருக்கும் உயிரினங்களும் அவற்றை உண்கின்றன. இந்த உயிரினங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளின் இடத்தை பிளாஸ்டிக் நிரப்புவதால், கடல் அட்டை, நட்சத்திர மீன், புழுக்கள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் இவ்வாறு பாதிக்கப்படுவதால் சூழலியல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் ஐக்கிய நாடுகள் பிளாஸ்டிக் ஒப்பந்தம் வேண்டும் என்று குரல் கொடுத்தனர். தற்போது, பிளாஸ்டிக் உற்பத்திக்கு இடைவெளி விடுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் உற்பத்திக்கு இடைவெளி விடப்படுமாயின் அது குறுகிய காலத்திலேயே நல்ல பலனை தரும்.
கப்பல்கள் மூலம் ஏற்படும் பிளாஸ்டிக் மாசு குறித்து 1988ம் ஆண்டு ஓர் சர்வதேச ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் காரணமாக 1990 முதல் 2005ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மைக்ரோபிளாஸ்டிக் அளவில் சமச்சீரற்ற மாற்றம் காணப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக பெருங்கடல் மைக்ரோபிளாஸ்டிக் வெகுவிரைவாக அதிகரித்து வருகிறது.
பெருங்கடலுக்குள் பிளாஸ்டிக் வந்து சேரும் அளவை அவசரமாக குறைக்கவேண்டியதின் அவசியத்தை இந்த ஆய்வு காட்டுவதாக ஷியாங் கியூ கிம் கூறியுள்ளார்.