ட்விட்டரை சாய்க்கத் தயாராகும் மெட்டா! கயிறை (த்ரெட்ஸ்) இழுக்கத் தயாராகுங்கள்!!

செய்தி சுருக்கம்:
ட்விட்டர் தனது பயனாளர்களுக்கு ஏக கெடுபிடிகளை விதித்து வரும் இந்த நேரத்தில் பலவிதமான மாற்று தளங்கள் ட்விட்டருக்கு எதிராகக் கிளம்பி வருகின்றன. ஏற்கனவே சமூக வலைதளத்தில் கோலோச்சி வரும் மெட்டா இந்த வாய்ப்பை சும்மா விட்டு விடுமா என்ன?
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ட்விட்டருக்கு எதிரான மாற்று தளம் குறித்த அறிவிப்புகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மெட்டா வெளியிட்டு வருகிறது. இந்த புதிய தளத்திற்கு தொடக்கத்தில் ‘பார்சிலோனா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்பொழுது அதற்கு ‘திரட்ஸ்’ என்று அதிகாரப்பூர்வமாக பெயிரிடப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த த்ரெட்ஸ் தளமானது கூகுள் பிளே ஸ்டோரில் மிக குறுகிய நேரத்திற்கு காணக் கிடைத்தது. பின்னர் இது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. முழுமையாக பயன்படுத்தக்கூடிய அளவில் இந்த குறுகிய நேரத்தில் காணப்பட்ட ஆப் இருந்ததாகத் தெரிகிறது. இது ஒரு வகையில் பயனாளர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கான உத்தியாக தெரிகிறது.
திரட்ஸ் கிடைக்கப்பெற்ற குறுகிய காலத்திற்குள் அதன் தோற்றத்தை பதிவு செய்து கொண்டு அதன் ஸ்க்ரீன்ஷாட்களை சிலர் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். எதிர்பார்த்து படி திரட்ஸ் ட்விட்டரை போலவே இருக்கிறது. திரட்ஸில் ஒவ்வொரு இடுகையின் கீழும் லைக், கமெண்ட், ரீட்வீட் (அல்லது ரீ த்ரெட்ஸ் ஆக இருக்குமோ..?) மற்றும் ஷேர் பட்டன்கள் இருக்கின்றன. இன்ஸ்டாகிராம் லோகோவும் ஆங்காங்கே தென்படுகிறதாம்.
பின்னணி:
பார்சிலோனா என்று அழைக்கப்பட்ட திரட்ஸ் ஆனது ஒரு முழுமையான பரவலாக்கப்பட்ட சமூக ஊடகமாக வெளிவரும் என்று மெட்டா உறுதிப்படுத்தி உள்ளது. ட்விட்டரை நேரடியாக மோதா விட்டாலும் திரட்ஸ் தனக்கென்று ஒரு பயனுள்ளர் கூட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
எனினும் அரசாங்கங்கள் முதல் அனைத்து துறைகளின் பிரபலங்கள் வரை அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ட்விட்டருக்கு மாற்றாக வேறொரு ஊடகம் உருவாவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.
தனது தளத்தை பயன்படுத்துவதில் ட்விட்டர் சில கட்டுப்பாடுகளையும் வரம்புகளையும் தற்போது விதித்து வருகிறது. இதனால் ட்விட்டரின் பயனாளர்கள் அதிருப்தியில் உள்ள இந்த நேரத்தில் மெட்டா மற்றும் ப்ளூ ஸ்கை போன்ற போட்டி நிறுவனங்கள் துளிர் விடுவது இத்துறையில் இயல்பான ஒன்றே.
இத்தகைய போட்டிகளை டிவிட்டரின் சிஇஓ ஆன எலான்மஸ்க் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எவ்வாறாகினும் புதிய வசதிகளோடு வரும் திரட்ஸ் தளத்தை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்க்கவே செய்கின்றனர்.