fbpx
LOADING

Type to search

அறிவியல் உலகம் பல்பொருள்

இமயமலை பனிப்பாறைகளின் உருகும் வேகம் அதிகரிப்பு! 

செய்திச் சுருக்கம்

இமயமலையில்  உள்ள பனிப்பாறைகள் முந்தைய தசாப்தத்தை விட 2010 மற்றும் 2019 க்கு இடையிலான காலகட்டத்தில் அதிவேகமாக உருகியுள்ளன.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

உலகில் வெப்பநிலை உயர்ந்து வருவதை எந்த ஆராய்ச்சியும் நமக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. அதை நாமே அன்றாடம் வேர்த்து வழிந்து உணர்ந்து வருகிறோம். நமக்கு முந்தைய தலைமுறையினரும் நாமும் அழித்த மரங்களுக்கும், கடலில் கொட்டிய கழிவுகளுக்கும் பதில் சொல்லும் நேரமிது. இருப்பினும், இந்த வெப்பநிலை உயர்வானது எதிர்பார்த்ததைவிட அதிவேகமாக நிகழ்ந்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

நேபாள விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சியானது, உயரும் வெப்பநிலையின் விளைவாகவும், வழக்கத்தை விட வேகமாகவும் உலகின் மிக உயரமான மலைத்தொடரான இமையமலையில் பனிப்பாறைகள் உருகி மறைந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. காத்மாண்டுவில் உள்ள ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் அறிக்கை, இந்து குஷ் மற்றும் இமயமலை மலைத்தொடர் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய பத்தாண்டுகளை விட 2010 முதல் 2019 காலகட்டத்தில் 65 சதவீதம் வேகமாக உருகியதாகக் கண்டறிந்துள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்கள் மலைப் பகுதிகளில் அல்லது நதிப் பள்ளத்தாக்குகளில் தங்களது தண்ணீர் தேவைகளுக்காக மலைகளில் உருகும் பனியை மட்டுமே நம்பியுள்ளனர். இருப்பினும் திடீரென்று பெரும் அளவில் உருகும் பனிப்பாறைகள் நிலப்பரப்பை சீர்குலைப்பதோடு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற ஆபத்துகள் ஏற்பட வழிவகுக்கின்றன. இந்த விரைவான மாற்றங்கள் அம்மலைப் பள்ளத்தாக்குகளில் வாழும் சிறிய தனித்துவமான வனவிலங்குகள் அழிவதற்கு காரணமாகின்றன. 

ஒருங்கிணைந்த மலை வளர்ச்சிக்கான சர்வதேச மையத்தின் ‘கிரையோஸ்பியர்’ ஆராய்ச்சியாளரும், திட்ட அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான மிரியம் ஜாக்சன், “இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து கடந்த பத்தாண்டுகள் வரை, மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிறைய பேருக்கு இது ஒரு ஆச்சரியம் என்று நான் நினைக்கிறேன், விஷயங்கள் மிக வேகமாக நடக்கின்றன” என்றார். 

டாக்டர் ஜாக்சனும் அவரது சகாக்களும் ஏறக்குறைய 1.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் மேற்கில் ஆப்கானிஸ்தானில் இருந்து கிழக்கே மியான்மர் வரை பரந்து விரிந்துள்ள இந்து குஷ் இமயமலை பகுதியை கண்காணித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அப்பிராந்தியங்களில் உள்ள அரசுகளால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்பெற்றது. இவ்வாய்வானது இத்தகைய காலநிலை மாற்றங்கள் அவர்களின் இயற்கை வளங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் அவ்வரசுகளின் குடிமக்களை இதற்கு எப்படி தயார்படுத்துவது என்பதையும் வெளிக்கொணரும். 

உலக வானிலை அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை ஆகியவற்றால் செவ்வாயன்று வெளியிடப்பட்ட இரண்டாவது அறிக்கை நிகழ்ந்த குறிப்பிடத்தக்க பனிப்பாறை இழப்பை பதிவு செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஆல்ப்ஸில் உள்ள பனிப்பாறைகள் ஒரே வருடத்தில் வரலாறு காணாத அளவிற்கு பனிக்கட்டிகளை இழந்ததாக  இவ்வாய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டில் இதே குழுவால் வெளியிடப்பட்ட ‘புதிய ஹிமாலயன் அறிக்கையில்’ உலகமெங்கும் இருக்கும் புவி வெப்பமடைதல் சராசரியானது 1.5 டிகிரி செல்சியஸாகவே இருந்தாலும், இந்து குஷ் இமயமலை தனது பனிப்பாறைகளில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கை இழக்கும் என்று கண்டறிந்துள்ளது. 

ஆனால் தற்போது கிடைக்கப்பெறும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவுகள், இந்த பகுதிகளில் பனிப்பாறைகள் ஏற்கனவே எவ்வளவு சுருங்கிவிட்டன என்பதை இன்னும் துல்லியமாக காட்டுகின்றன. மேலும் இப்பனிப்பாறைகள் 1.5 டிகிரி வெப்பமயமாதலுக்கு அப்பால் எவ்வளவு வேகமாக அழியக்கூடும் என்ற கணிப்புகளையும் முன்வைக்கின்றன. 

“தொழில்நுட்ப ரீதியாக, இது ஆச்சரியமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஆராய்ச்சியில் ஈடுபடாத கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கடல் புவியியலின் பேராசிரியரான மார்கோ டெடெஸ்கோ கூறினார். வேகமாக உருகும் பனிப்பாறைகளின் சமூக மற்றும் சூழலியல் தாக்கங்கள் குறித்து இப்புதிய அறிக்கையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிறப்பு கவனத்தையும் டாக்டர் டெடெஸ்கோ பாராட்டினார். பொதுமக்கள் இப்பனிப்பாறைகள் உருகுவது ஏதோ காலநிலை மாற்றம் என்று கருதி மெத்தனமாக இருப்பதிலிருந்து இது மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு காரணி என்று எண்ணத்தொடங்கி இருப்பது ஒரு நல்ல முன்னேற்றமாகும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த மலை பனிப்பாறைகள் சுருங்கும்போது, குறுகிய காலத்தில் உருகும் நீர் அதிகரிக்கும். இந்த நிலையானது ஏறக்குறைய 2050 இல் ஒரு புள்ளியை எட்டும், அதன் பிறகு, பனிப்பாறைகள் மிகவும் சுருங்கி அவற்றிலிருந்து உருகி வெளியேறும் தண்ணீரின் அளவு குறையத் தொடங்கும் என்று அறிக்கை கூறியது. ஆராய்ச்சியாளர்கள் இந்த திருப்புமுனையை “உச்ச நீர்” என்று அழைக்கிறார்கள்.

இப்பகுதியில் நீர் உருகும் நேரமும் இடங்களும் மாறக்கூடும்.

சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரும் அறிக்கையின் மற்றொரு ஆசிரியருமான சந்தோஷ் நேபால் கூறுகையில், “சில இடங்களில் தண்ணீர் மிக அதிகமாகவும், சில இடங்களில் தண்ணீர் மிகக்குறைவாகவும் இருக்கும்.

இப்போதைக்கு, ஆண்டு தொடக்கத்திலேயே உருகும் நீர் கிடைக்கத் தொடங்கிவிடும். காலநிலை மாற்றமானது உலகெங்கிலும் மழைப்பொழிவு முறைகளை மிகவும் ஒழுங்கற்றதாக ஆக்குவதால், இந்து குஷ் இமயமலையில் உள்ள மக்கள் மழைநீருக்குப் பதிலாக உருகும் நீரையே சார்ந்து இருப்பார்கள் என்று டாக்டர் சந்தோஷ் நேபால் எதிர்பார்க்கிறார். இவ்வாறு இந்த உருகும் நீரை 20 அல்லது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்ப முடியாது என்றும் அவர் தெரிவிக்கிறார்..

பனிப்பாறைகள் உருகுவதால், மக்களுக்கு வேறு ஆபத்துகளும் உள்ளன. ஏற்கனவே மலைகளில் வாழ்வது ஆபத்தான ஒன்று. இப்பனிப்பாறை அழிவு அதை இன்னும் மோசமாகிவிடும். பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது நிலச் சரிவுகள், பெருவெள்ளம் போன்றவை ஏற்பட்டு அழிவை பன்மடங்காக்கலாம். 

இந்த பிராந்தியங்களில் உள்ள பேரிடர் மீட்பு அமைப்புகள் “அந்த வகையான அதிரடியான பேரழிவுகளைச் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை” என்று டாக்டர் நேபால் கூறுகிறார்.

இந்து குஷ் இமயமலையின் சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களுக்குத் தயாராக இல்லை. பல அறிவியல் ஆய்வுகள் இப்பகுதியில் மட்டுமே காணப்படும் தனித்துவமான உயிரினங்கள், குறிப்பாக பட்டாம்பூச்சிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன என்று சுட்டிக்காட்டுகின்றன. தவளைகள் மற்றும் பிற சிற்றுயிர்களும் ஆபத்தில்தான் உள்ளன

ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரும் அறிக்கையின் மற்றொரு ஆசிரியருமான சுனிதா சவுத்ரி கூறும்போது, “இமயமலைகள் முழுவதிலும் இருந்து கிடைத்த தரவுகளைக் கொண்டு பார்க்கும்போது  2100 வாக்கில், இப்பகுதியில் மட்டுமே காணப்படும் தனித்துவமான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களில் கால் பகுதி அழிக்கப்படும்” என்று கூறினார். மேலும், “குறிப்பாக  இந்தியப் பகுதியில் உள்ள இமயமலைப்பகுதியானது கடுமையாக பாதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

சில உயிரினங்களை காப்பாற்றுவதற்கு இப்பொழுதே மிகவும் தாமதமாகிவிட்டது என்றாலும், பனிப்பாறை இழப்பால் தீவிரமாக பாதிக்கப்பட்டு வரும் பல விலங்குகள் மற்றும் மில்லியன் கணக்கான மனிதர்களுக்கு உதவ இன்னும் நேரம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அவர்களின் அறிக்கையில் அப்பகுதியில் காணப்படும் சிற்றுயிர்களைப் பாதுகாப்பதற்கான முறையான பாதுகாப்புகள் உட்பட பல கொள்கைகளும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. விவசாயம் மற்றும் நீர்வளம் போன்ற  பிறதுறை வல்லுநர்களின் கருத்துக்களையும் எடுத்துக்கொண்டு ஆய்வில் ஈடுபடவேண்டும் என்பது இவ்வாய்வாளர்களின் கருத்து. 

தட்பவெப்ப மாற்றத்தில் சாமானியர்களான நமது பங்கு என்ன?

அரசாங்கங்களும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே இந்த காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்திட முடியாது என்பதை சாமானியர்களும் உணரவேண்டிய தருணம் இது. இயலும்போதெல்லாம் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும். காணும் இடமெங்கும் கானகமாக்குவதற்கு உறுதி பூண்டு கணக்கில்லாமல் மரங்களை நட்டு வளர்க்கவேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை அறிந்தும் அறியாமலும் மண்ணில் இட்டு மண்ணை மலடாக்காமல் இருக்க வேண்டும். இன்னும் நாம் செய்ய இதில் ஆயிரம் உண்டு என்பதை உணர வேண்டும். 

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கடல் புவியியலின் பேராசிரியரான மார்கோ டெடெஸ்கோ கூறுவதுபோல, இப்பனிப்பாறை அழிவும், காலநிலை மாற்றங்களும் நம்மை, நம் சந்ததியினை நேரடியாக பாதிக்கக்கூடியது என்ற விழிப்புணர்வை அடைவதுதான் நாம் உடனடியாக இப்பிரச்சனையில் செய்யக்கூடியது!

தொடர்புடைய பதிவுகள் :

Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *