தூக்கத்திற்கு மெலட்டோனின் பயன்படுத்துவது கெடுதலா?

மெலட்டோனின் என்பது உலகெங்கிலும் பரவலான அறியப்படும் ஒரு துணைப்பொருள். தூக்கம் வராமல் தவிக்கும் மக்கள் தற்போது அதிக அளவில் மெலட்டோனினைப் பயன்படுத்த் தொடங்கியுள்ளனர். பல ஆய்வுகள் 1999 முதல் 2018 வரை அனைத்து மக்கள்தொகைக் குழுக்களிலும் மெலட்டோனின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது எனக் காட்டுகின்றன. வயதுவந்த மக்களிடையே ஒட்டுமொத்த மெலட்டோனின் பயன்பாடு இன்னும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மெலட்டோனின் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க பல மடங்கு அதிகரிப்பை ஆய்வுகள் ஆவணப்படுத்துகின்றன.
மெலட்டோனின் என்றால் என்ன?
மெலட்டோனின் என்பது நமது மூளையின் கூம்புச் சுரப்பி (pineal gland) எனும் பகுதியில் சுரக்கும் முக்கியமான ஹார்மோனாகும். இது வெளிச்சத்தில் மிகக்குறைந்த அளவிலும் இருளில் அதிகமாகவும் சுரந்து மனிதனின் தூக்கத்தையும் அவனது ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதில் பங்குவகிக்கிறது.
மெலட்டோனின் என்பது ஒரு பொதுவான துணைப்பொருள். இது தூங்க உதவும் துணைப்பொருள் என்று உலகெங்கிலும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் மெலட்டோனின் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் பரவலாக் கிடைக்கிறது. ஆனால் ஐரோப்பா போன்ற உலகின் பிற பகுதிகளில் மெலட்டோனினை வாங்க மருந்துச்சீட்டு தேவைப்படுகிறது.
மெலட்டோனின் எவ்வாறு இயங்குகிறது?
மெலட்டோனின் அதிகம் சுரக்கும் இரவில் விழித்திருப்பதும், மெலட்டோனின் குறைவாகச் சுரக்கும் பகலில் உறங்குவதும் அதன் உற்பத்தியைத் தடுக்கும். நமது இயற்கையான தூக்கச் சுழற்சியை நிர்வகிக்க உதவும் நமது உடலின் பொழுது ஒழுங்கியல்பு (circadian rhythm) இதன் முதன்மைப் பொறுப்பாகும். எனவே, நம் உடலில் உள்ள மெலட்டோனினின் அளவைப் பொறுத்தே நம் உடல் பகல்/இரவுப் பொழுதுகளுக்கு ஏற்ப சீராக இயங்கும். அதனால் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு மெலட்டோனினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தமுடியும்.
மெலட்டோனின் எப்படித் தயாரிக்கப்படுகின்றது?
மெலட்டோனினை விலங்குகளிடமிருந்தோ நுண்ணுயிரிகளிலிருந்தோ தயாரிக்கலாம். ஆனால் பெரும்பாலும் அது செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றனது.
மெலட்டோனின் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
ஒரு மருந்தாக மெலட்டோனினைக் கொண்டு நீண்டதூர விமானப்பயணக் களைப்பு, தாமதமான தூக்கம், தூக்கக்கோளாறுகள், அறுவைசிகிச்சை சமயத்தில் நோயாளிக்கு ஏற்படும் பதற்றம் போன்ற சில பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
மெலட்டோனின் உடலில் எவ்வாறு இயங்குகிறது?
உடல் இயற்கையாகவே மெலட்டோனினை உற்பத்தி செய்கிறது. இது நம்மைத் தூங்க வைக்காது, ஆனால் மாலையில் மெலட்டோனின் அளவுகள் உயரும்போது அது நம்மை அமைதியான நிலைக்குக் கொண்டுசெல்கிறது. இது தூங்குவதற்கு உதவுகிறது.
பெரும்பாலான மக்களின் உடல்கள் தாமே தூங்குவதற்குப் போதுமான மெலட்டோனினை உற்பத்தி செய்கின்றன. அந்த இயற்கையான மெலட்டோனின் உற்பத்தியை சரியாகப் பயன்படுத்த நாம் எடுக்கக்கூடிய சில வழிமுறைகள் உள்ளன. தூக்கமின்மை/தூக்கக்கோளாறுகள் இருந்தாலோ நீண்டதூர விமானப்பயணக் களைப்பை சரிசெய்யவேண்டியிருந்தாலோ, குறுகியகால அடிப்படையில் ஒரு மெலட்டோனினைப் பயன்படுத்தலாம்.
மெலட்டோனினை யார் பயன்படுத்தலாம்?
பொதுவாக ஆழ்ந்து தூங்குபவர்களுக்குக் கூட சில நேரங்களில் தூங்குவதில் அல்லது தொடர்ந்து தூங்குவதில் சிக்கல் ஏற்படுவதுண்டு. சில நாட்களுக்கு மேல் தூங்குவதில் சிரமம் இருந்தால் தூக்கத்திற்காக மெலட்டோனினை மருந்தாகப் பயன்படுத்திப்பார்க்கலாம். தூக்கமின்மை உள்ளவர்களுக்கு இம்மருந்து சற்று சீக்கிரம் உறங்க உதவக்கூடும் என்றும் தூக்கக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு மெலட்டோனின் மருந்துகளால் பெரிய நன்மைகள் இருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மெலட்டோனின் தூக்க மருந்துகளை எவ்வாறு பயன்படுத்தவேண்டும்?
மெலட்டோனின் தூக்க மருந்துகளை குறைவாகவும் கண்டிப்பாகத் தேவையேற்படும்போதும் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மருத்துவர் கூறும் முறையில்தான் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரையின்படி படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன் 1-3 மில்லிகிராம் எடுத்துக் கொள்ளலாம். நீண்டதூர விமானப்பயணக் களைப்பைத் தவிர்க்க, பயணத்திற்குச் சில நாட்களுக்கு முன், படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன் மெலட்டோனின் உட்கொள்ளலாம். மெலட்டோனின் தூக்க மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டும் போதாது. படுக்கைக்குச் செல்லுமுன் ஓய்வெடுப்பதும் அமைதியான மனநிலையில் இருப்பதும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மங்கலாக்கப்பட்ட விளக்குகள், வசதியான படுக்கை, சரியான வெப்பநிலையுள்ள அறை போன்றவையும் ஒருவர் நன்கு தூங்க உதவும்.
மெலட்டோனின் தூக்க மருந்துகளை புத்திசாலித்தனமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதோடு எப்போது நிறுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். தூக்கத்திற்காக மெலட்டோனின் எடுத்துக்கோண்டு அது ஒரு சில நாட்களுக்குப் பிறகோ ஒரு சில வாரங்களுக்குப் பிறகோ உதவவில்லை என்றால் அதைப் பயன்படுத்துவதை நிறுத்துவதே நல்லது. தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் அது குறித்துப் பேசவேண்டும். மெலட்டோனின் உதவுவதாகத் தோன்றினால், ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை இரவில் எடுத்துக்கொள்வது பெரும்பாலான மக்களுக்குப் பாதுகாப்பானதுதான் எனக் கருதப்படுகிறது. அதன் பிறகு, மருந்தை நிறுத்தித் தூக்கம் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
தூக்கத்திற்கு மெலட்டோனின் பயன்படுத்துவதை யார் தவிர்க்கவேண்டும்?
மெலட்டோனினை சில வகையான மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் பிரச்சினை ஏற்படலாம். இரத்தம் உறைதலைக் குறைக்கும் மருந்து, வலிப்புக்கான மருந்து, பிறப்புக் கட்டுப்பாட்டு மருந்து, உயர் இரத்த அழுத்த மருந்து, நீரிழிவு நோய் மருந்து, நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து, கல்லீரல் சம்பந்தப்பட்ட மருந்து ஆகியவற்றை உட்கொள்ளும் நபர்கள் தம் மருத்துவரிடம் கேட்டுப் பின்னரே மெலட்டோனினை மருந்தாகப் பயன்படுத்தவேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (autoimmune diseases), வலிப்பு நோய், அல்லது மனச்சோர்வு இருப்போர் மெலட்டோனைத் தவிர்க்க வேண்டும். மெலட்டோனின் இரத்தச்சர்க்கரை அளவு, இரத்த அழுத்த அளவு ஆகியவற்றை அதிகரிக்கலாம். எனவே நீரிழிவுநோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருப்போர் தம் மருத்துவரிடம் கேட்டுப் பின்னர் மெலட்டோனினைப் பயன்படுத்தவேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மெலட்டோனின் கொடுப்பதற்கு முன்பு அது பற்றிக் குழந்தைமருத்துவரிடம் கட்டாயம் பேச வேண்டும்.
மெலட்டோனின் பக்க விளைவுகள் யாவை?
முதியவர்கள், அறுவைசிகிச்சை நோயாளிகள், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் பங்குபெற்ற பல்வேறு குறுகியகால ஆய்வுகள் மெலட்டோனின் லேசான பக்கவிளைவுகள் மட்டுமே பதிவாகியதாகக் காட்டுகின்றன. ஆய்வுகளில் பலரால் அதிகமாகத் தெரிவிக்கப்பட்ட பக்கவிளைவுகள் தலைவலி, தலைசுற்றல், குமட்டல், அரைத்தூக்கநிலை, பகல்தூக்கம் ஆகியவை. குறைவாகக் காணப்பட்ட சில பக்கவிளைவுகள் கனவுகள், எரிச்சல், வயிற்றுப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசி குறைதல், கீழே விழும் அபாயம், வலிப்பு ஏற்படும் அபாயம், குழப்பம், கவனம் திசைதிரும்புதல், மனநிலை மாற்றங்கள், குறைந்த விழிப்புணர்வு போன்றவை.
முடிவுரை
மெலட்டோனினின் குறுகியகாலப் பயன்பாடு பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது. ஆனால் அதன் நீண்டகாலப் பயன்பாட்டின் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் குறைவாகவே கிடைத்துள்ளன. மெலட்டோனின் மருந்துகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சரியான அளவில் பயன்படுத்தவும் வேண்டும்.
மெலட்டோனின் தூக்கக்கலக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதை எடுத்துக்கொண்ட சில மணிநேரத்திற்குள் வாகனங்களை ஓட்டுவதையும் பெரும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதையும் மக்கள் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
அதிகமான மக்கள் தூங்க உதவ மெலட்டோனினைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள் என்றாலும் இது அனைவருக்குமான ஒரே தீர்வாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பல நாடுகளிலும் மெலட்டோனின் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருந்தாலும் தூக்க வல்லுநர்களும் மருந்தாளுநர்களும் மெலட்டோனின் பலருக்குப் பயனளிக்காமல் போகலாம் எனக் கூறுகிறார்கள். ஏனெனில் தூக்கம் வராதது ஒரு சிக்கலான பிரச்சினை. சில நேரங்களில் அது பிற மருத்துவக் காரணிகளுடன் தொடர்பு கொண்டிருக்க்கூடியது.
அதிக அளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தூங்க உதவ மெலட்டோனின் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மெலட்டோனின் ஒரு ஹார்மோன் என்பதால், பருவமடைதல், மாதவிடாய் சுழற்சிகள் போன்றவை உள்ளிட்ட பல உடல் செயல்பாடுகளை மெலட்டோனின் பாதிக்கலாம் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்றும் மெலட்டோனின் எடுத்துக்கொள்வது மிகக்கவனத்துடன் செய்யப்படவேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.