22 பேருடன் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தைத் தொடங்க முடியும்..! எந்தமாதிரியான குணமுள்ள மனிதர்கள் தேவை..? விஞ்ஞானிகள் கூறுவதென்ன..?

உலக விண்வெளி அரங்கில் இந்தியா தனது சந்திராயன் -3 ஐ வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதித்துள்ள இந்த சூழலில் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களைச் செய்யத் தேவைப்படும் அடிப்படையான விசயங்களைப் பற்றிய புதிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
கணினி உருவகப்படுத்துதல் முறை மூலம் செவ்வாய் கிரகத்தில் 28 ஆண்டுகள் தங்கியிருக்க எந்தமாதிரியான குண நலன்களைக் கொண்ட மனிதர்கள் தேவை என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த முன்மாதிரி செவ்வாய் கிரக குடியேற்றத்திற்கு வெறும் 22 பேர் மட்டுமே இருந்தால் போதுமாம். இதற்கு முன் செய்யப்பட்ட பலவிதமான ஆய்வில், இதுபோன்ற செவ்வாய் கிரக குடியேற்றத்திற்குப் பல நூறு பேர் தேவை என்று கணிக்கப்பட்டிருந்தது.
ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகம், ஃபேர்ஃபாக்ஸ், வர்ஜீனியா மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் தங்கியிருப்பவர்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்றும், அவற்றைத் தீர்க்கவும் தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள அவர்களுக்கு என்னென்ன தேவை என்றும் முடிவுகள் வெளிவந்துள்ளன.
ஒரு நிலையான குடியிருப்பை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க என்ன மாதிரியான சூழ்நிலை அங்கு தேவை? அந்த புதிரான கிரகத்தில் கூடி சேர்ந்து வாழ்வதற்கு எந்த மாதிரியான குணநலன்களைக் கொண்டவர்கள் சரிவருவார்கள்? அங்கு நேரிடும் சிறு விபத்துகள் மற்றும் தேவையான பொருட்களை மீண்டும் நிரப்ப தேவைப்படும் இரண்டு வருட காலம் ஆகியவற்றாய் சமாளிக்க எத்தனை பேர் தேவை? போன்ற கேள்விகளுக்கு இந்த ஆய்வு பதிலளிக்கிறது.
2 டஜன் மனிதர்களே போதும்!
இந்த ஆய்வின்படி, இரண்டு டஜன் (24) பேர் மட்டுமே இந்த முதற்கட்ட செவ்வாய் கிரக குடியேற்றத்திற்கு போதுமானது என்ற முடிவிற்கு வந்திருக்கின்றனர்.
இந்த ஆய்வாளர்கள் கூறுகையில், “பெரும் கும்பலாக இல்லாமல், எல்லா குணநலன்களையும் உடைய சிறிய மனிதக் குழுவைக் கொண்டு 28 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தில் குடியிருக்க இயலும். தொடக்க காலத்தில் வெறும் 22 பேர் கொண்ட குழுவே போதுமானது என்று எங்கள் கணினி தூண்டல் மற்றும் உருவாக்க முறை மூலம் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது” என்றனர்.
செவ்வாய் மாதிரி குடியிருப்பு!
செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தை நிகழ்த்துவதில் இருக்கும் அடிப்படைக் கேள்விகளுக்கும், அங்கே குடியேறும் மனிதர்களுக்குத் தேவையான குணநலன்கள், பழக்கங்கள் மற்றும் மனோதத்துவ ரீதியான உரையாடல்கள் போன்றவற்றை ஏஜென்ட் பேஸ்டு மாடலிங் (ABM) என்ற முறையில் கண்டறிந்துள்ளனர்.
இந்த ABM மாடலானது, செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே உணவு, காற்று மற்றும் நீர் வசதிகளை உண்டாக்கிவிட்டதாக உருவகப்படுத்திக்கொண்டது. பிறகு அங்கு அத்தகைய அழுத்தமான சூழலில் ஒவ்வொருவரும் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதான கற்பனை உரையாடல் மற்றும் நிகழ்வுகளை நிகழ்த்தி பரிசோதித்தது.
இந்த ABM மாடல் செவ்வாய் கிரகத்தில் முதற்கட்டமாக 7 ஆண்டுகளுக்கான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக எடுத்துக்கொண்டது. இந்த மாடல், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் தனிமங்களை பூமிக்கு எடுத்து வருவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
10 முதல் 170 பேர் வரை முதற்கட்டமாக செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதாக கற்பனை நிகழ்வுகள் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. அதில், 22 பேர்களை மட்டுமே கொண்டு 28 வருடங்களுக்கு செவ்வாயில் குடியேற்றத்தை நிகழ்த்தலாம் என்பது முடிவாகத் தெரியவந்துள்ளது.
எந்த குணநலன் கொண்டவர்கள் செவ்வாய் குடியேற்றத்திற்குத் தேவை?
ABM மாடலானது, நான்கு குணநலன் கொண்ட மனிதர்களை முதற்கட்ட செவ்வாய் கிரக குடியேற்றத்திற்குத் தேவையானவர்கள் என்று வகைப்படுத்தியுள்ளது. அவர்கள் இணக்கமானவர்கள், நேசமானவர்கள், எதிர்வினையாற்றக்கூடியவர்கள் மற்றும் தீவிரமானவர்கள் என்ற நான்கு வகையைச் சேர்ந்தவர்கள்.
இணக்கமானவர்கள் என்ற வகையைச் சேர்ந்தவர்கள் குறைவான போட்டி மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள், எதிலும் குறைந்த தீவிரத்தன்மை இருக்கும். நேசமானவர்கள் என்ற தரப்பினர் மிதமான போட்டி மனப்பான்மையும், வெளிப்படையாக பேசக்கூடியவர்களாகவும், குழு விவாதங்களை முன்னெடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
எதிர்வினையாற்றக்கூடியவர்கள் என்பவர்கள், மிதமான எதிர்வினையாற்றக்கூடியவர்கள் மற்றும் மற்றவர்களுக்கிடையில் போட்டியிடக்கூடியவர்களாகவும், தொடர்ந்து செய்யக்கூடிய வேலைகளில் கவனமாகவும் இருக்கக் கூடியவர்கள்.
தீவிரமானவர்கள் என்பவர்கள் எதிலும் தீவிரமாகவும், அதிகம் போட்டியிடக்கூடியவர்களாகவும், தொடர்ந்து செய்யக்கூடிய வேலைகளில் எளிதில் ஒன்றுபவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த மாடலில் இந்நான்கு வகை மனிதர்களும் சமமான எண்ணிக்கையில் இருப்பதாக சோதனை தொடங்கியது. அனைத்து சோதனைகளிலும், ‘இணக்கமானவர்கள்’ என்ற வகையைச் சேர்ந்த மனிதர்கள் மட்டுமே தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியும் என்ற பதில் கிடைத்தது.
இணக்கமாய் இருப்பவர்கள் மட்டுமே வாழமுடியும்!
ஆய்வாளர்கள் கூறுகையில், ‘இணக்கமானவர்கள் மட்டுமே இந்த செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து வசிக்க முடியும் என்று கண்டோம். மன அழுத்தம் நிறைந்த அந்த சூழலில் எதிர்பாராத விபத்துகளும், மற்ற குடியிருப்புவாசிகளுக்கிடையில் உரையாட வேண்டிய தேவையும் இந்த வகை “இணக்கமானவர்களுக்கு” மட்டுமே சாத்தியம். தீவிரமானவர்கள் என்ற வகையினர் செவ்வாய் கிரகத்தில் வசிக்க குறைவான வாய்ப்புகளே உள்ளன’ என்றனர்.
.மற்றவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுதல், தீவிரமான சூழ்நிலையில் மற்றவர்களோடு இணக்கமாய் இருத்தல் போன்றவையே செவ்வாய் கிரகத்தில் முதற்கட்ட குடியிருப்புகளை ஏற்படுத்த தேவையானவை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இணக்கமாய் இருப்பவர்கள் செவ்வாய் கிரகத்திற்கு மட்டுமல்ல, நமது பூமிக்குமே அதிகம் தேவைதான், என்ன சொல்கின்றீர்கள்..?!