fbpx
LOADING

Type to search

உடல் நலம் சிறப்புக் கட்டுரைகள் பல்பொருள்

திருமணத்தை மீறிய உறவு: ஏழு ஆண்டுகளே எல்லையா?

Infidelity

செய்தி சுருக்கம்:

இல்லற வாழ்வு சலிக்கும்போது திருமணத்தை மீறிய உறவுகள் உருவாகின்றன. திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கழித்து தம்பதியருக்குள் சலிப்பு எட்டிப் பார்க்கிறது; எப்போது திருமண பந்தத்தை விட்டு வெளியே மற்றொரு உறவை அவர்கள் நாடுகிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. உண்மையில் திருமண வாழ்வு கசக்குமா என்ற கேள்விக்கு இந்த ஆய்வு பதில் தருகிறது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

திருமணத்தை மீறிய உறவுகள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகவே பெரிதும் அமைகின்றன. அவை பல குற்றச்செயல்களுக்கும் காரணமாகின்றன. மணமுறிவு என்னும் விவாகரத்துகளின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து வரும் சூழலில், உண்மையில் தம்பதியருக்கிடையே ஏன் விலக்கம் ஏற்படுகிறது என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருமணமாகி ஏழு ஆண்டுகள் கடக்கும்போது, வாழ்க்கை துணையுடனான உறவில் சலிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இது உண்மையா என்பதைக் குறித்து செய்யப்பட்ட ஆய்வு கூறும் தகவல்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

பின்னணி:

சில நேரங்களில் திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், நிஜ வாழ்வில் அப்படியே எடுத்தாளப்படுமளவுக்கு பிரபலமாகிவிடுவதுண்டு. அதேபோன்றுதான் இந்த ஏழு ஆண்டு திருமண வாழ்க்கையும் பொதுமக்கள் மனதில் பதிந்துவிட்டது. மர்லின் மன்றோ நடித்த திரைப்படம் ‘த செவன் இயர் இட்ச்’ என்பதாகும். 1955ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் திருமணமான ஓர் ஆண், மர்லின் மன்றோ மீது ஈர்ப்பு கொண்டு, தன் மனைவியை ஏமாற்ற திட்டமிடுவான். அந்த நபர், மனநல மருத்துவர் ஒருவரின் குறிப்புகளை வாசிப்பான். அதில் அந்த மருத்துவர், திருமண வாழ்வின் ஏழாவது ஆண்டில் ஆண்டகள் ஏமாற்ற தொடங்குவர் என்று எழுதியிருப்பார். படத்தில் அந்த மனிதனுக்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கும். இவ்வாறுதான் ‘திருமணமாகி ஏழு ஆண்டுகள்’ என்ற கால அளவு பொதுவழக்கில் புழக்கத்திற்கு வந்தது.
இது உண்மை என்பதற்கு நிரூபணமான ஆதாரம் இல்லை. ஆனாலும், முதன்முறை திருமண வாழ்வில் ஈடுபடுவோர் ஏழு அல்லது எட்டாவது ஆண்டில் மணமுறிவு பெறும் சதவீதம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே, திருமண வாழ்க்கை ஏழு ஆண்டுகளில் சலித்துப்போகும். அதனால் திருமணத்தை மீறிய உறவுகள் ஏற்படும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. இந்தக் கருத்தின் உண்மை தன்மை அறியும்படி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எல்லை மீறிய உறவு: ஓர் ஆய்வு

ஒருபாலின உறவு சட்டப்பூர்வமாக்கப்படும் முன்னரே, ஆண்-பெண் பாலின உறவு மட்டும் சட்டப்பூர்வமாக இருக்கும்போது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தனை ஆண்டுகளில் இல்லற வாழ்வில் சலிப்பு ஏற்படும் என்று கூறுகிறது.

திருமணத்தில் இணைந்து குறைந்தது ஓராண்டு நிறைவு பெற்றிருந்த 313 இஸ்ரேலியர்களிடம் இந்த கணக்கெடுப்பு செய்யப்பட்டது. சராசரியாக 32 முதல் 33 வயது நிரம்பியவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்றவர்களில் திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு உட்பட்டோர் குறுகிய பிரிவிலும், ஆறு முதல் பத்து வருடங்கள் இல்லறத்தில் ஈடுபடுவோர் இடைநிலை பிரிவிலும், பதினொன்று மற்றும் அதற்கு மேற்பட்ட திருமண வாழ்க்கை கொண்டோர் நெடிய பிரிவிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் திருமணத்திற்கு புறம்பான உறவில் அவர்கள் ஈடுபடுகிறார்களா என்று கேட்கப்பட்டு, அவர்களுடைய திருமண வாழ்க்கையின் ஆண்டும் குறிக்கப்பட்டது. நெடிய கால இல்லறத்தில் இருப்போரே பெரும்பாலும் இணையை ஏமாற்றக்கூடிய எண்ணத்தோடு இருப்பது தெரிய வந்தது.

ஏழு ஆண்டுகள் இல்லறத்திற்குப் பிறகு திருமணத்திற்கு புறம்பான உறவுநோக்கி ஈர்க்கப்படுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சற்று வித்தியாசம் உள்ளது. திருமண வாழ்க்கையின் காலம் நீளமாவதைப் பொறுத்து ஆண்கள், துணையை ஏமாற்றுவதும் அதிகமாகிறது. குறிப்பாக, திருமணமாகி ஏழு ஆண்டுகள் கடந்த ஆண்கள், திருமண உறவுக்கு வெளியான உறவில் ஈடுபடுவது பதினெட்டு ஆண்டு திருமண ஆண்டு வரைக்கும் குறைவதாகவும், பதினெட்டு ஆண்டுகள் கடந்ததும் மீண்டும் புறம்பான உறவில் நாட்டம் அதிகரித்து முப்பதாவது இல்லற ஆண்டுகளில் உச்சத்தை அடைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை பிரிவை சேர்ந்த பெண்களே குறுகிய மற்றும் நெடிய திருமண வாழ்க்கையில் இருப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக ஏமாற்றுவதில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. ஆண்கள், பெண்கள் இருவருக்குமே ஏழு ஆண்டு திருமண வாழ்வு பாதிப்பு இருப்பது இதனால் உறுதியாகியுள்ளது.

இதுபோன்று சலிப்பு ஏற்படுவதற்கு தம்பதியருக்குள் போதுமான உரையாடல் இல்லாமற்போவது, ஒருவர் கூறுவதை மற்றவர் சரியாக கவனிக்காமற்போவது, போதுமான கரிசனை காட்டாதிருத்தல், யதார்த்தமல்லாத எதிர்பார்ப்புகள் போன்றவையே முக்கிய காரணமாகின்றன. குழந்தை வளர்ப்பு, பொருளாதாரத்தை நிர்வகித்தல், பண்பாடு, சமயம் மற்றும் அரசியல் சார்ந்த நம்பிக்கைகள் இவையும் காலப்போக்கில் தம்பதியரிடையே மனவிலக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அறிகுறிகள்

உடல் மற்றும் உணர்வு ரீதியான அணுக்கம் குறைதல், போதுமான அளவுக்கு உரையாடல் இல்லாதிருத்தல், முரண்பாடுகள், வாதங்கள், புண்படுத்தும் வார்த்தைகள், இரகசியங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளாதிருத்தல், போதிய அளவு ஒருமித்து நேரம் செலவழிக்காமை ஆகியவை தம்பதியருக்குள் மனவிலக்கம் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.

ஏழு ஆண்டு எல்லை: மேற்கொள்வது எப்படி?

திருமண வாழ்வில் ஏழு ஆண்டுகள் என்பது வெறுமனே ஒரு திரைப்படத்தின் சாராம்சம் மட்டுமே என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். அது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆகவே, திருமணமாகி ஏழு ஆண்டுகள் கடந்ததும் தம்பதியருக்குள் சலிப்பு ஏற்படுவது இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது.

ஒருவேளை தன் இணையுடன் தனக்கு அல்லது தன்னிடம் இணைக்கு ஈர்ப்பு குறைவதாக உணர்ந்தால், இருவரும் நன்றாக பேசிக்கொள்ளவேண்டும். பேசிக்கொள்ளாமல் எந்த பிரச்னையையும் தீர்க்க இயலாது. இணையை பற்றி தங்கள் கரிசனையை வார்த்தையில் வெளிப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, சலிப்பு ஏற்படுவதான யூகத்தை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். உண்மையில் சலிப்பு ஏற்பட்டுவிட்டதா அல்லாமல் ஏழு ஆண்டுகள் என்ற எண்ணம் சலிப்பு ஏற்பட்டுவிட்டதாக நம்ப வைக்கிறதா என்பதை யோசிக்கவேண்டும். இருவரும் ஒருமித்து அதிக நேரம் செலவழித்தால் சலிப்பு ஓடிப்போகும். இணையர் ஒருவர்மீது இன்னொருவருக்கு இருக்கும் அக்கறையையும் கரிசனையையும் வெளிப்படுத்தி, ஒருவரையொருவர் தேவையான நேரங்களில் பாராட்டி, மனம்விட்டு பேசினால் உறவில் சலிப்பு ஏற்படாமல், உறவு பெலப்படும்.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *