மணிப்பூர்: மறையுமா மனங்களின் வடு?

செய்தி சுருக்கம்:
இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் முதல் இரு இனத்தவருக்கிடையே சண்டை நடந்து வருகிறது. இனமோதல் வன்முறையாக வெடித்துள்ளது. வீடுகள், வழிபாட்டுதலங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. பெண்கள் வன்முறைக்கு இலக்காக்கப்படுகின்றனர். மாதக்கணக்கில் தொடர்ந்து வரும் இந்த வன்முறை உலக மக்களின் கவனத்தை மணிப்பூரை நோக்கித் திருப்பியுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்தியாவின் ஒரே மாநிலத்தில் வாழும் இரு இனத்தவருக்கிடையே நடைபெறும் மோதல் என்றாலும் பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளை விட்டு துரத்தப்பட்டு, காடுகளுக்குள் தஞ்சம் புகும் அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஓர் இனத்தைச் சேர்ந்த பெண்களை இன்னொரு இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. அந்த மனிததன்மையற்ற செயல் மே மாதம் 4ம் தேதி நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. அந்த சம்பவம் குறித்து ஜூலை 19ம் தேதிதான் வெளியே தெரியவந்தது. மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் நிலைமையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவை அமைத்துள்ளது. மணிப்பூரைப் பற்றி பிரதமர் பேச வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
பின்னணி:
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பங்களாதேஷ் மற்றும் மியான்மர் நாடுகள் அருகே அமைந்துள்ளது மணிப்பூர் மாநிலம். மொத்தம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலத்தை தற்போது பாரதிய ஜனதா அரசு ஆட்சி செய்து வருகிறது. 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இந்த மாநில சட்டப்பேரவைக்கு 60 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஆளும் பா.ஜ. உறுப்பினர்களையும் சேர்த்து 10 பேர் குகி இனத்தவராவர். பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான குகி மக்கள் முன்னணிக்கு சட்டப்பேரவையில் 2 உறுப்பினர் உள்ளனர்.
இனங்கள்
மணிப்பூரில் மெய்தி, குகி மற்றும் நாகா ஆகிய இன மக்கள் வசித்து வருகின்றனர். மெய்தி இனத்தவர் மணிப்பூரிலும் மியான்மர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தவர். அவர்களுள் சிலர் சனமஹி சமயத்தை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. மெய்தி இனத்தவர் இம்பால் பள்ளத்தாக்குகளில் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இவர்கள் 53 சதவீதம் உள்ளனர். ஆகவே, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடைய ஆதிக்கமே இருந்து வருகிறது. இவர்கள் வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கு, மணிப்பூரின் மொத்த நிலப்பரப்பில் பத்து சதவீதமாக அளவிடப்படுகிறது.
குகி இனத்தவர், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகமும் மியான்மர் வரை விரிந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர்.
காரணம்
மணிப்பூரின் மக்கள் தொகையில் குகி மற்றும் நாகா இனத்தவர் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். மணிப்பூர் மொத்த நிலப்பரப்பில் மலைப்பாங்கான இடம் 90 சதவீதமாகும். குகி இனத்தவர் வசிக்கும் பகுதிகளை காப்பு காடுகளாக அறிவித்து அவர்களை வெளியேற்றும் முயற்சி நடப்பதாகவும், இதனால் தங்கள் பாரம்பரியமாக வசித்து வந்த பகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வெளியேற்றப்படுவது மட்டுமல்ல, மறுவாழ்வுக்கான வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வன வளத்தை காப்பதிலிருந்து மாநில அரசு பின்வாங்காது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கஞ்சா பயிர் செய்யப்படுவதை தடுக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. கிராமத்தினர் வெளியேற்றப்படுவது குறித்து அதிருப்தி எழுந்த நிலையில், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி, ஏப்ரல் 11ம் தேதி மூன்று தேவாலயங்கள் உடைக்கப்பட்டன.
மெய்தி இன மக்கள் தங்களுக்கு எஸ்.டி என்னும் பழங்குடி அந்தஸ்து வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக அவர்கள் இதை கோரி வருகின்றனர். மெய்தி இன மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக பழங்குடி அந்தஸ்து கொடுக்கக்கூடாது என்று குகி இனத்தவர் போராடினர். மலைப்பாங்கான 10 மாவட்டங்களில் 2023 மே 3ம் தேதி அவர்கள் ‘பழங்குடி ஒற்றுமை நடைபயணம்’ என்ற போராட்டத்தை நடத்தினர்.
இந்தியாவுடன் மணிப்பூர் இணைவதற்கு முன்னர் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து இருந்ததாகவும் அதை மீண்டும் அளிக்குமாறும் மெய்தி இனத்தவர் நீதிமன்றத்தில் கோரினர். மணிப்பூர் உயர்நீதிமன்றம், மெய்தி இனத்தவருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குமாறு ஒன்றிய பழங்குடி நல அமைச்சகத்துக்கு பரிந்துரைக்குமாறு மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மெய்தி இனத்தவர் ஏற்கனவே அரசிலும் சமுதாயத்திலும் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களை குகி இனத்தவர் இருக்கும் பகுதிகளில் நிலங்களை வாங்கி, குடியேற அனுமதித்தால் அவர்கள் செல்வாக்கு இன்னும் கூடிவிடும் என்பது குகி இனத்தவரின் வாதம். மெய்தி இனத்தவர்களால் நடத்தப்படும் அரசு, தங்கள் சமுதாயத்தை அழிப்பதற்காக போதை மருந்து குறித்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகவும் குகி இனத்தவர் கூறுகின்றனர்.
மணிப்பூரில் கஞ்சா பயிர் செய்யப்படுவது குறித்து 2022 ஜூலை மாதமே சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் காஞ்சுஜாம் ரஞ்சித் சிங் குரல் எழுப்பினார். சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கும்படி கடுமையான சட்டத்தை கொண்டு வரும்படி அவர் கோரினார்.
மிசோராம், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்கள் மியான்மரோடு எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. சர்வதேச போதைப்பொருள் தடுப்பு வாரியமும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்ற தடுப்பு அலுவலகமும், ஆசிய கண்டத்தின் முக்கிய போதைப்பொருள் தயாரிப்பு மையமாக மியான்மரை குறிப்பிடுகின்றன.
பிரேன்சிங் தலைமையிலான மாநில அரசு போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதாக கூறி, குகி இனத்தவரை குறிவைப்பதாக அந்த இனத்தவர் கூறுகின்றனர். குகி இனம் முழுமையுமே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதுபோன்று அவர் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக மணிப்பூரில் மக்கள் குடியேறுவதும், பெருகும் ஜனத்தொகைக்கு ஏற்பட்ட நிலத்தை பயன்படுத்துவதும், வேலையில்லாத திண்டாட்டமும் அங்கு பிரச்னையை தீவிரப்படுத்துவதாக உள்ளன. இதன் காரணமாக இளைஞர்கள் பல்வேறு பயங்கரவாத குழுக்களால் ஈர்க்கப்படுகின்றனர்.
பெண்களுக்குக் கொடுமை
மெய்தி இனப்பெண் குகி பயங்கரவாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற பொய்ச் செய்தி பரவியதால் பழிக்குப் பழி வாங்கும் வண்ணம் மெய்தி இன கும்பல் குகி பழங்குடி பெண்களை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. 800 முதல் 100 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்களின் குடும்பத்தினர் இருவரை கொலை செய்துள்ளது. காவல்துறையினர் பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் கும்பல் தங்களை இழுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய சகோதரரின் நண்பரே இந்தச் செயலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மே 18ம் தேதிதான் காவல்துறையில் புகார் அளிக்க முடிந்துள்ளது. சம்பவம் நடந்து 75 நாள்கள் கடந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“பகிரப்பட்டு வரும் வீடியோ எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அரசு ஏதாவது உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். சமுதாய கலவரம் நடக்கும் இடத்தில் பெண்களை கருவிகளாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இது அரசியலமைப்பை மீறும் செயல்,” என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
மாநில முதலமைச்சரான பிரேன் சிங், சுராசந்த்பூர் என்ற மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தார். நியூ லம்கா டவுண் என்ற இடத்தில் கூட்டம் நடக்க இருந்த இடத்தை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி தீயிட்டனர். அவர் தொடங்கி வைக்க இருந்த உடற்பயிற்சிக் கூடமும் தாக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம், வீடுகளை இழந்தோருக்கான மறுவாழ்வு முகாம்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அனுப்பப்பட்டுள்ள படை விபரம், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஜூலை 10ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
ஜூலை 3ம் தேதி நிலவரப்படி மணிப்பூர் வன்முறையில் ஏறத்தாழ 120 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இராணுவத்தையும் துணை இராணுவத்தையும் அனுப்பும்படி கேட்டுக்கொண்டதை ஜூலை 11ம் தேதி உச்சநீதிமன்றம் மறுத்தது. தேசத்தின் வரலாற்றில் கடந்த 72 ஆண்டுகள் இந்த நீதிமன்றம் இந்திய இராணுவத்திற்கு அப்படி உத்தரவை கொடுத்ததில்லை. இராணுவ படைகளை குடிமக்கள் கட்டுப்படுத்துவதே ஜனநாயத்தின் மிகச்சிறந்த பண்பாகும். நாங்கள் அதை உடைக்கவில்லை,” என்று கூறியது.
ஆகஸ்ட் 7ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு இரண்டு மாத காலம் தாமதமாகி இருப்பதை கண்டு இரண்டு மாதங்கள் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாமல் இருப்பதாக குறிப்பிட்டது.
மணிப்பூரில் நடைபெற்ற கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட கொடிய குற்றங்களைக் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கைகளை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கான காவல்நிலையங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த தகவல் அறிக்கைகளை முறையான தகவல் அறிக்கைகளாக அந்த காவல்நிலையங்கள் மாற்றும் செயல்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சாட்சிகளை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அறிக்கைகளை சட்டப்படி பதிவு செய்வதில் கவனக்குறைவு நிகழ்ந்துள்ளது. கொடிய குற்றங்களில் ஈடுபட்டோரை கைது செய்யும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதில் குறைபாடு காணப்பட்டுள்ளது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறி, மகாராஷ்டிராவின் முன்னாள் டி.ஜி.பியும், முன்னாள் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகருமான தத்தாத்ரே பாட்சால்கிகரை மணிப்பூரில் மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) விசாரணையையும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையையும் கண்காணிக்க நியமித்துள்ளது. வெவ்வேறு மாநிலங்களிலிருந்து விசாரணைக்கு ஐந்து அதிகாரிகளை நியமிக்கவும் அவர்களில் ஒருவர் பெண் அதிகாரியாக இருக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்படும் இழப்பீடு, மறுவாழ்வு பணிகள் மேற்பார்வையிட ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் முன்னார் தலைமை நீதிபதி கீதா மிட்டல், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆஷா மேனன் மற்றும் ஷாலினி பி ஜோஷி ஆகியோர் அடங்கிய குழுவையும் நியமித்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
மத்திய அரசின் மேல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. காங்கிரஸை சேர்ந்த கௌரவ் கோகோய் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். “மணிப்பூர் மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மணிப்பூர் பிரச்னையை குறித்து பேச வேண்டும்,” என்ற இரு குறிக்கோள்களோடு நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மேல் பிரதமர் மோடி 2 மணி நேரம் 13 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.
பிரதமர் மோடி பொருளாதாரம் குறித்து, பணவீக்கம் குறித்து, வேலையின்மை குறித்தும், மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்தும் பேசுவார் என்று தாம் எதிர்பார்த்ததாகவும் அவரது பேச்சு எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றியே இருந்ததாகவும் தேசியவாத கட்சியின் உறுப்பினர் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
தன்னுடைய பேச்சில் பிரதமர் மணிப்பூர் பற்றி குறிப்பிடாதது அவமானகரமானது என்று திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது மற்ற அமைச்சர்கள் பேசியபோதிலும் மணிப்பூரை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணையமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங் பேசுவதற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் சொந்த வீடு கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாறாத வடு
‘ஆபரணம் அணிந்த நிலம்’ என்று அர்த்தம் கொள்ளும் அழகிய மணிப்பூர் வன்முறையின் பிடியில் சிக்கியிருப்பது வேதனைக்குரிய விஷயம். போதைப்பொருள் குறித்த குற்றச்சாட்டு, பூர்வீக இடங்களிலிருந்து காப்புகாடுகளைக் காட்டி வெளியேற்றுவது, இனக்கலவரத்தில் பெண்களை மானபங்கப்படுத்தியது போன்ற வடுக்கள் எளிதில் மறையக்கூடியவை அல்ல. அரசும் சட்டமும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை குகி இனத்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதே முதல் தேவையாகும். ஆனாலும், அவர்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள வடுக்கள் மறைவதற்கு நீண்டகாலம் தேவைப்படும்.