fbpx
LOADING

Type to search

உடல் நலம் சிறப்புக் கட்டுரைகள் பல்பொருள்

முதுமையை இனிமையாக்க முத்தான நான்கு வழிகள்

elderly people

செய்தி சுருக்கம்:

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் அல்லது பிள்ளைகள் பெரியவர்களாகி குடும்ப பொறுப்புகளை ஏற்றதும் பலர் என்ன செய்வதென்று திகைக்கிறார்கள். முதுமை, உடல்நலம் குறித்த பிரச்னைகளும் எழும் பருவமாகும். முதுமை பருவத்தில் உடலாலும் மனதாலும் முடங்கிப் போகாமல் மகிழ்ச்சியோடு வாழும் வழியை பல புத்தகங்கள் விவரிக்கின்றன. அவற்றுள் நான்கு வழிகளை காண்போம்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

வயதாகும்போது நண்பர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும். நம்முடைய நண்பர்கள், சிலர் வேறு இடங்களுக்குச் சென்றிருப்பர்; வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் பணி சார்ந்த நட்பு வட்டம் சிறிது சிறிதாக சுருங்கும்; துர்வாய்ப்பாக சிலர் நோயுற்றிருப்பர்; சிலர் உலகை விட்டே மறைந்திருப்பார்கள். பள்ளி, கல்லூரி, பணியிடம் என்று பல்வேறு வழிகளில் நமக்கு நண்பர்கள் கிடைத்திருப்பர். அவ்வாறு கிடைத்த நண்பர்களின் எண்ணிக்கை குறையும்போது, புதிதாக நண்பர்களை தேடுவது சவாலான ஒன்று; ஆனால், முதுமையிலும் புதியவர்களோடு நட்பு உருவாக்கலாம்.

பின்னணி:

உலகம் மிகவும் பரந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள். நாம் முதுமையை எட்டிவிட்டால் உலக இயக்கம் எதுவும் நின்று போகாது. ஆகவே, மனம் துவண்டு விடாமல் உற்சாகமாக இருப்பதற்கு புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்வது முக்கியமாகும்.

புதிய ஆர்வமும் புதிய நட்பும்

பணி ஓய்வு பெற்றதும் பலர் முடங்கிப்போய்விடுகின்றனர். வாழ்நாளின் பெரும் பகுதியை அலுவலகத்திற்குச் சென்று வருவதிலேயே கழித்துவிட்டதால் ஓய்வு பெற்றதும் என்ன செய்வோம் என்ற பதற்றமும் பயமும் பலருக்கு வந்து விடுகிறது. பணி நிமித்தமாக கிடைத்த நட்புகளை தொடர இயலாத நிலை ஏற்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் அல்லது ஈடுபாடு இருக்கும். அனைவருக்கும் ஒன்றாக இல்லாவிட்டாலும் வெவ்வேறு ஈடுபாடு இருக்கும். உதாரணமாக, ஒருவருக்கு சம்பவங்களை நன்றாக, மற்றவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் விவரிப்பதில் ஈடுபாடு இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், ஓய்வுக்கு பிறகு கதைகளை, புதினங்களை எழுத முயற்சி செய்யலாம். புதிதாக எழுத்துலகில் நுழையும்போது எழுத்து சார்ந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எழுத்தாளர்களுக்கான குழுக்களில் இணையும் வாய்ப்பு, உங்கள் படைப்புகளின் வாசகர்களை கண்டு உரையாடி, நண்பர்களாக்கிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

முதுமையில் அப்படியே உட்கார்ந்துவிடாமல் ஏதாவது எளிய விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும். இறகுப் பந்து, பூப்பந்து போன்றவை பெரிய அளவில் உடலை வருத்தாமல் விளையாடக்கூடியவை. அவை உடலை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளவும் உதவும். நீங்கள் வசிக்கும் பகுதியில் விளையாட்டுக்கான மைதானம் அல்லது அவற்றுக்கான தனியார் மையங்கள் இருக்குமானால் அவற்றில் உறுப்பினராகலாம். விளையாட்டின் மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

சிலருக்கு இயற்கையோடு இசைந்து வாழும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தோட்டக்கலை சார்ந்து தங்கள் ஓய்வு நேரத்தை செலவிட முயற்சிக்கலாம். என்னென்ன செடிகளை வளர்க்கலாம்; மரங்களை நடலாம்; அவற்றை எப்படி பராமரிக்கலாம்; எப்படி பலன் பெறலாம் என்பவற்றை அவற்றுக்கு உரிய அமைப்புகளில் உறுப்பினராகி கற்றுக்கொள்ளலாம். தோட்டம் அமைத்து பராமரிப்பது நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க உதவுவதோடு, அது சார்ந்த நண்பர்களையும் உருவாக்க முடியும்.

சமுதாய குழுக்களில் உறுப்பினராக சேர்த்தல்

முதுமையில் அல்லது பணி ஓய்வுக்குப் பிறகு வேறு மாநிலம் அல்லது மாவட்டத்திற்கு குடிபெயர நேர்ந்தால் அங்கு உடனடியாக நண்பர்களை உருவாக்கிக் கொள்வது இயலாத ஒன்று. அங்கு நம் ஆர்வம் சார்ந்த குழுக்களில் இணைந்து கொள்ளலாம்.

சிலருக்கு ஆன்மீகத்தில், சிலருக்கு சுற்றுலா செல்வதில், சிலருக்கு சமுதாய சேவை செய்வதில் ஆர்வம் இருக்கும். அதற்கேற்ற குழுக்களில் இணைவது மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், புதிய நட்பு வட்டத்தையும் உருவாக்கிக்கொடுக்கும்.

ஆன்மீக உரைகளை கேட்டல், ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்தல் போன்று அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப சமய குழுக்களோடு இணைந்து கொள்ளலாம்.

சிலருக்கு புதிய இடங்களை காண ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இயங்கும் சுற்றுலா குழுக்களில் உறுப்பினராக சேர்ந்துகொள்ளலாம். முதியவர்கள் பாதுகாப்பாக சென்று வரக்கூடிய இடங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலாக்களில் இணைந்து புதிய இடங்களை கண்டு மகிழலாம்; புதிய நண்பர்களை பெறலாம்.

மற்றவர்களுக்காக நேரத்தை செலவிடுதல்

நேரம் கிடைக்கும்போது மனவளர்ச்சி குன்றியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் போன்ற அமைப்புகளில் தன்னார்வமாக சேவை செய்யலாம். பணத்தை மட்டும் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும் என்பதல்ல; நம்முடைய நேரத்தையும் நாம் நன்கொடையாக அளிக்கலாம். நேரடியாக சென்று தன்னார்வ சேவை செய்தல், மனதுக்கு திருப்தியை அளிக்கும்.

இதுபோன்று நாம் சேவை செய்யும்போது, முன்பு இருந்த நண்பர்களைக் காட்டிலும் நம்மோடு ஆத்மார்த்தமாக பழகக்கூடியவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

முன் வந்து பழகுதல்

‘நட்பு’ தானாக மலர்ந்துவிடாது. அதற்கு சற்று முயற்சி எடுக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புதியவரை சந்திக்க நேரும்போது, பழக வாய்ப்பு ஏற்படும்போது, சந்திப்பை காஃபி அருந்துவது, மதிய உணவு சேர்ந்து சாப்பிடுவது போன்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்யுங்கள்.

உதாரணமாக, பூங்காவில் நடைபயிற்சி செய்யும்போது, ஓய்வாக அங்குள்ள இருக்கையில் அமரும்போது அதே இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒத்த வயது கொண்டவரிடம் உரையாடலை தொடங்கலாம். சிலர் அவ்வாறு உரையாட ஆரம்பித்து, நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பர். பூங்காக்களில் சந்திக்க ஆரம்பித்து, வேறு ஊருக்கு குடிபெயர்ந்து சென்ற பிறகும் தொடர்பில் இருக்கும் வாக்கிங் ஃப்ரண்ட்ஸ் அநேகர் இருக்கிறார்கள்.

ஆகவே, மனதிற்கு ஒத்த நண்பர்களை கண்டு, புதிய நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்வது முதுமை பருவத்தை இனிதாக்கும்.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *