fbpx
LOADING

Type to search

இந்தியா பல்பொருள் வர்த்தகம்

நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் 76% நோட்டுகள் வங்கிகளில் திரும்ப ஒப்படைக்க பட்டுள்ளதாக RBI செய்தி.

செய்தி சுருக்கம்:

மே 19 அன்று மத்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் மக்களும் நிறுவனங்களும் வங்கிகளில் திருப்பி ஒப்படைக்கும் படி உத்தரவு பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக அனைத்து வங்கிகளும் 20000 ரூபாய் வரை தனிநபர் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தது. ஜூன் 30 வரையிலான கணக்கெடுப்பின் படி இதுவரை 76% நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மையான நோட்டுகள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதன் மூலம் வந்து சேர்ந்துள்ளது என்றும், மிக குறைந்த அளவு நோட்டுகள் மட்டுமே 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு வங்கிகளை வந்தடைந்து உள்ளன என்று RBI செய்திக்குறிப்பு கூறுகிறது.

ரிசர்வ் வங்கியின் தகவலின்படி இந்த உத்தரவை வெளியிட்டதில் இருந்து ஜூன் 30 தேதி வரையிலும் இதுவரை மொத்தம் 2.72 லட்சம் கோடிகள் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளின் மூலமாக கருவூலத்திற்கு வந்து சேர்ந்துள்ளன என்றும், இன்னமும் நாட்டில் புழக்கத்தில் 0.84 லட்சம் கோடிகள் வரையிலான 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மீதமுள்ள இந்த நோட்டுகளும் விரைவில் மாற்றப்பட்டு விடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இந்தியா முழுவதுமாக புழக்கத்தில் இருக்கும் 3.5 லட்சம் கோடிகள் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாகவும் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் அவை செல்லாது எனவும் மே 19 அன்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக அனைத்து மக்களும் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தியும் வங்கிகளில் வேறு நோட்டுகளாய் பரிமாற்றம் செய்தும் வருகின்றனர். ஜூன் மாத இறுதி நிலவரப்படி இதுவரை 2.72 லட்சம் கோடிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் மீதம் 0.84 லட்சம் கோடிகள் விரைவில் வந்தடையும் என்றும் RBI தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள முக்கியமான பொதுத்துறை வங்கிகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் நாடெங்கிலும் புழக்கத்தில் இருந்த இந்த 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததன் மூலமாக மட்டும் 87 சதவிகிதம் திரும்ப பெறப்பட்டுள்ளது, மீதமுள்ள 13 சதவிகித நோட்டுகள் மட்டுமே பண பரிமாற்ற முறையில் மாற்றப்பட்டு ஒப்படைக்கப் பட்டுள்ளது என தெரிகிறது.

பெரும்பாலான மக்கள் வங்கிகளில் தங்கள் கணக்கில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து குறைதுள்ளனர் என்றும், இது banking துறையில் அடைந்த முன்னேற்றத்தை குறிப்பதாக RBI சொல்கிறது. இன்னமும் புழக்கத்தில் இருக்கும் 0.84 லட்சம் கோடிகள் மதிப்பிலான நோட்டுகள் விரைவில் வங்கிகளுக்கு வந்து சேரும் என நம்பிக்கை தெரிவித்தனர். RBI இன் அறிப்பின் படி வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

RBI மீதான பொதுநல வழக்கு:

இந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகின்ற உத்தரவினை வெளியிட RBI-க்கு அதிகாரம் இல்லை என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கினை நிராகரித்து டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த திங்களன்று தீர்ப்பளித்தது. இந்த மனுவில் மனுதாரர் Rajneesh Bhaskar Gupta என்பவர் குறிப்பிட்டுள்ள அம்சங்களை காண்போம். 

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெரும் அதிகாரம் RBI யிடம் இல்லை எனவும், நாட்டின் இம்மாதிரியான நிதி சீரமைப்பு விவகாரங்களில் ஒன்றிய அரசு மட்டுமே இத்தகைய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட முடியும் என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும், மத்திய வங்கியானது இத்தகைய முடிவுகளை எடுக்கும் நேரத்தில் நாடு சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளை பார்ப்பதில்லை எனவும், பொதுமக்களின் இன்னல்களையும் சிக்கல்களையும் கருத்தில் கொள்வதே இல்லை எனவும் சாடியுள்ளார்.

மேலும் அம்மனுவில், RBI இன் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகின்ற உத்தரவானது தன்னிச்சையான அணுகுமுறை என்றும், இத்தனை பெரும் மாற்றத்தை இவர்கள் ஒரு சிறிய அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் சாதிக்க நினைக்கின்றனர், இதனால் நாடு முழுவதும் ஏற்படக்கூடிய பொருளாதார நிர்வகிப்பு சவால்களை இவர்கள் சிந்திப்பதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரும்பப் பெறும் உத்தரவிற்கு சரியான விளக்கங்களை RBI யிடம் கேட்டால் அவர்கள் கறுப்புப்பணம் புழங்குவதை சந்தையில் இருந்து ஒழிப்பதற்காக என்று எப்போதும் கூறுகின்ற சமாதானப் படுத்தும் பதில்களையே முன்வைப்பர், ஆயினும் இன்னும் கறுப்புப்பணம் குறைந்தபாடில்லை என்று இதற்கு முன்னர் ஒருமுறை நிகழ்ந்த பண மதிப்பிழப்பீடு நடவடிக்கையை சுட்டிக்காட்டினார். கடந்த திங்களன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவினை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பின்னணி:

பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிகளில் திருப்பி செலுத்துமாறு மே மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் இதனை செயல்பாட்டில் கொண்டு வந்தன. மேற்படி உத்தரவானது மக்களை சிறிது பாதித்தாலும் நிதி மேலாண்மை நடவடிக்கைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 

இதற்கு முன்பு 2016 இல் நாட்டின் பிரதமர் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று ஒரே இரவில் அறிப்பினை வெளியிட்டது மக்கள் மத்தியில் பரபரப்பினை உண்டாக்கியது. அந்த அறிவிப்பை தொடர்ந்து நவம்பர் 2016 இல் RBI இந்த புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. இதனால் உருவான நெருக்கடி முடிந்தது நிதி நிலைமை நாடு முழுவதும் சீரான பிறகு 2019 இல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது அந்த 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெற செப்டம்பர் 30 வரை கால அவகாசம் குடுத்து மே 19 இல் RBI அறிக்கை வெளியிட்டது. 

இந்த ஒரு மாத காலத்தில் 2.72 லட்சம் கோடிகள் அளவு 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளை வந்து அடைந்து விட்டன, மீதமுள்ள 0.84 லட்சம் கோடிகள் அளவு 2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் வந்து சேர வேண்டியுள்ளது, விரைவில் அனைத்து நோட்டுகளும் முழுமையாக திரும்ப பெறப்பட்டு விடும் என தெரியவருகிறது. 

பைசா, அனா மாற்றங்களை தொடர்ந்து ரூபாய் தாள்களில் மாற்றம் என அடுத்தடுத்து காலத்திற்கு ஏற்றார் போல மாற்றமடைந்த நம் நாட்டின் நாணயங்கள் அடுத்த எந்த விதமான மாற்றத்திற்கு உள்ளாகும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *