தனிமை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்

தனிமையுணர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் தாக்கத்தை அதிகரிக்கலாமென புதிய ஆராய்ச்சி அறிக்கை அறிவிக்கிறது .
உணவு, உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் காட்டிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்க்கான ஆபத்து காரணி ‘தனிமை’ அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முதுமை, மனஅழுத்தம், நெருக்கமானவர்களின் பிரிவு என்று தனிமைக்கான காரணங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான் என இந்த சமூகம் உணரவேண்டும்.
தனிமை இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வது. இதை லோன்லினெஸ் என்று கூறுகிறார்கள். வேறு சிலர் தாமாகவே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அதில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் பழைய நிலைமைக்குத் திரும்பும்போது எல்லோருடனும் சஜகமாகப் பழகத் தொடங்கிவிடுவார்கள். தனிமை என்பது ஒருவர் தனியாக இருந்தால் மட்டுமே வரக்கூடிய உணர்வு என்று இல்லை பெருங்கூட்டத்தில் இருக்கும்போது, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும்கூட தனிமை உணர்வு வரலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை கவனித்தே தீரவேண்டும். தனிமை என்பது மனச் சோர்வுடன் மிக நெருக்கமான தொடர்புடையது. நீரிழவு நோயாளிகள் மேலும் நோய்வாய்ப்பட தனிமை காரணியாக அமையலாம் என்கிறது ஆராய்ச்சி.
ஐரோப்பிய இருதயவியல் சங்கத்தின் (ESC) இதழான ஐரோப்பிய இதய இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தனிமையில் இருப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் டிராபிகல் மெடிசின் ஆய்வு ஆசிரியர் லு குய் “உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தில் தனிமையின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்கிறார்.
மனிதர்கள் தனிமையில் வாழ்வது ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகளை புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னவோ அதே அளவு பாதிப்பை கொடுக்கும் என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் கார்லா எம் பெரிசினோட்டோ.
ஆராய்ச்சியாளர்கள் ஐபத்தாயிர மில்லியனுக்கும் மேற்பட்ட பிரிட்டன் மக்கள் மருத்துவ தகவல்கள் கொண்ட UK Biobank தரவுகளில் ஆராய்ந்த போது கிடைத்த தகவல்படி சுமார் 40% பேர் தனிமை மற்றும் 55% சமூக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இதய நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.மாரடைப்பு, இதய செயலிழப்பு, வாத இதய நோய், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன், பக்கவாதம், நிலையற்ற இஸ்கிமிக் தாக்குதல், பெருநாடி அனீரிசம், அல்லது பெரிஃபெரல் நோய் ஆகிய இதய நோய்கள் தனிமையில் வாழும் நீரிழிவு நோயாளிகளில் அதிகம் காணப்பட்டுள்ளது.
மனித இனம் இயல்பாகவே சமூகமாக கூடி வாழும் இயல்புடையது. மனிதர்களுக்கு மற்றவர்களின் இருப்பு தேவைப்படுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக வளர அர்த்தமுள்ள சமூக உறவை நம்பியிருக்கிறது.குடும்பம், நண்பர்கள், அண்டை வீட்டாருடன் அல்லது சக ஊழியர்களுடனான தொடர்புகள் நமது உடல் மற்றும் மனநலத்திற்கு மாபெரும் வகையில் பங்களிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தனிமையில் இருக்கும் நோயாளிகள் அல்லது சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் நோயே இல்லாதவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் 37 முதல் 73 வயதுக்குட்பட்ட 18,509 நோயாளிகளிடம் அவர்களின் பாலினம், வயது, பற்றாக்குறை, உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), மருந்துகள், உடல் செயல்பாடு, உணவு, மது, புகைபிடித்தல் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் தரவுகளுடன் உறவுகளுடன் பழகுதல், எவ்வளவு தனிமையாக உணர்கிறார்கள் என கேள்விகள் கேட்டு பதில்கள் பெறப்பட்டது.
10.7 வருடங்களின் சராசரி பின்தொடர்தலின் போது, 3,247 பங்கேற்பாளர்கள் இருதய நோய்க்கு ஆளாகினர், அதில் 2,771 பேர் கரோனரி ஹார்ட் டிசீஸ் மற்றும் 701 பேர் பக்கவாத்ததால் பாதிக்கப்பட்ட்டனர். சில நோயாளிகளுக்கு இரண்டும் இருந்தது. தனிமையில் இல்லாதவர்களை காட்டிலும் தனிமையில் வாழ்பவர்கள் 26% அதிகம் இருதய நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர்.
மற்ற ஆபத்து காரணிகளுடன் ஒப்பிடுகையில், இருதய நோய்களின் தாக்கத்தை தனிமையின் முக்கியத்துவத்தையும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர். தனிமை சிறுநீரக செயல்பாடு, கொலஸ்ட்ரால் மற்றும் பிஎம்ஐ ஆகியவற்றை விட பலவீனமான தாக்கத்தை காட்டுகிறது. ஆனால் மனச்சோர்வு, புகைபிடித்தல், உடல் செயல்பாடு மற்றும் உணவுமுறை ஆகியவற்றை விட வலுவான தாக்கமுள்ளதாக காட்டுகிறது.
பேராசிரியர் குய் “தனிமையாக உணரும் நீரிழிவு நோயாளிகளை ஒரு குழு அல்லது வகுப்பில் சேர நான் ஊக்குவிப்பேன் மற்றும் அவர்கள் மனதிற்கினிய பொழுதுபோக்குகளை பகிர்ந்து கொள்ளும் நபர்களுடன் நட்பு கொள்ள சொல்லி முயற்சிப்பேன்” என்கிறார். மேலும் அவர் ஆராய்ச்சியை விவரித்து முடிக்கையில் நீரிழிவு நோயாளிகளிடம் தனிமையைப் பற்றி கேட்பது நிலையான மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்கிறார்.