சின்னச் சின்ன இன்பங்களில் இருக்கு ரகசியம்! அன்றாடம் அனுபவிக்கும் சிறிய இன்பங்கள் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறதாம்!!

அன்றாட இன்பங்கள் என்னென்ன?
உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். என்னதான் ஒரு அடிமையாக இருந்தாலும் அவனுக்கும் தனிப்பட்ட இன்பங்களும் ஓய்வும் அவசியம் என்பதற்கான சொல்லப்படும் பழமொழி இது. இதயமும் மூளையும் நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை இடைவிடாது செயல்பட்டாலும் அவற்றிற்கும் சிறிது ஓய்வும் இன்பம் அளிக்கும் இடைவெளியும் தேவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிடித்த இசையைக் கேட்பது மற்றும் காபி குடிப்பது போன்ற சிறிய செயல்பாடுகள் கூட ஒரு நபரின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துமாம். இவை செயல்திறனை மேம்படுத்தும் வழிகளில் கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றல் தேவைப்படும் பணிகள் உட்பட பல செயல்பாடுகளில் திறனை மேம்படுத்துமாம்.
MINDWATCH தொழில்நுட்பம்!
NYU டாண்டனின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் அசோசியேட் பேராசிரியர் Rose Faghih என்பவரால் கடந்த ஆறு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது MINDWATCH தொழில்நுட்பம்.
இது, எலக்ட்ரோடெர்மல் செயல்பாட்டை (EDA) கண்காணிக்கக்கூடிய, அணியக்கூடிய சாதனம் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து ஒரு நபரின் மூளை செயல்பாட்டை பகுப்பாய்வு செய்யும் ஒரு வழிமுறையாகும். வியர்வை உருவாகும் தன்மையையும் கண்காணித்து, உணர்ச்சி அழுத்தத்தால் தூண்டப்படும் மின் கடத்துத்திறனில் ஏற்படும் மாற்றங்களை இந்த அமைப்பு பதிவு செய்துகொள்கிறது.
MINDWATCH மூலம் செய்யப்பட்ட ஆய்வு!
நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட இந்த சமீபத்திய MINDWATCH ஆய்வில், தோல்-கண்காணிப்பு மணிக்கட்டு மற்றும் மூளை கண்காணிப்பு ஹெட் பேண்ட்களை அணிந்துகொண்ட ஆய்வாளர்கள் இசையைக் கேட்கும்போதும், காபி அருந்தும்போதும், வாசனை திரவியங்களை நுகர்ந்தபோதும், தங்கள் தனிப்பட்ட விருப்பங்களைப் பிரதிபலிக்கும் போதும் அறிவாற்றல் சோதனைகளை செய்துபார்த்தனர்.
பிறகு அந்த சிறிய இன்பமளிக்கு செயல்பாடுகள் எதுவுமின்றி அந்த சோதனைகளையும் முடித்தனர்.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட அறிவாற்றல் சோதனை – n-பேக் டெஸ்ட் எனப்படும் படங்கள் அல்லது ஒலிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தரவுகள் ஒவ்வொன்றாக வழங்குவதை உள்ளடக்கியது.
ஆய்வு முடிவு சொல்வதென்ன?
ஆராய்ச்சியாளர்கள் இரு வகையான இசையை சோதித்தனர் – ஆய்வுக்கு உட்படுபவர்களுக்கு நன்கு தெரிந்த நிதானமான இசை, அத்துடன் அவரது விருப்பத்தை பிரதிபலிக்கும் இசை.
பழக்கமான ஆற்றல்மிக்க இசை பெரிய செயல்திறன் ஆதாயங்களை வழங்கியது. இருப்பினும், நிதானமான இசையை விட. அவருக்கு விருப்பமான இசை மிகப்பெரிய மேம்பாட்டைக் காட்டியது.
இசையைக் கேட்பதைவிட காபி குடிப்பது இன்னும் அறிவுத்திறன் மேம்பாட்டை அளித்தது.
இறுதியாக அனைத்து ஆய்வு முடிவும் தெரிவிப்பது, கடுமையான வேலைகளுக்கு இடையில் சிறிய சிறிய இன்பமளிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது நமது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது என்பதைத்தான். புகை பிடிப்பது போன்ற செயல்பாடுகள் இதில் சேராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். புகை பிடித்தல் உங்களுக்கு இன்பமளித்தலும் உள்ளூர அது உடலுக்குத் தீங்கானது என்ற விழிப்புணர்வும் குற்ற உணர்வும் உங்களுக்கு இருக்கும். அது எந்த வகையிலும் உங்களுக்கு உற்சாகத்தைத் தராது.
எனவே சின்ன சின்ன இடைவெளிகள் எடுத்துக்கொள்வோம். நம்மை நாமே இன்பமளித்துக்கொள்வோம். கையில் எடுக்கும் காரியமனைத்திலும் வெல்வோம்!!