ஒளிரும் மரகதப் பச்சை – வானில் வர்ணஜாலம்

செய்தி சுருக்கம்:
சூரியன் மறையும்போது அல்லது உதிக்கும்போது பச்சை நிற ஒளிக்கீற்று காணக்கிடைப்பது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஒரு காலத்தில் பச்சை ஒளிக்கீற்று தெரிவதாகக் கூறப்படுவது கட்டுக்கதையாக எண்ணப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் பல்வேறு அடுக்குகள் வழியாக சூரிய ஒளி பாயும்போது ஒளிவிலக்கமடைந்து பச்சை ஒளிக்கீற்று தெரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நொடிப்பொழுதே இந்தக் காட்சி தெரியும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
முப்பட்டகம் வழியே சூரிய ஒளி செல்லும்போது, வெள்ளை நிற ஒளியானது ஏழு வண்ணங்களாக பிரிகிறது. அதுபோன்றே வளிமண்டலமானது பட்டகம் போன்றும் லென்ஸ் போன்றும் செயல்பட்டு, சூரிய ஒளியிலிருந்து பச்சை ஒளிக்கீற்றை தோன்றச் செய்கிறது.
சூரியன் தொடுவானத்திற்கும் கீழாக இருக்கும்போது, அதன் மேல்முனை மட்டும் தெரியும்போது பச்சை ஒளிக்கீற்று தெரியும். அதாவது சூரியனின் வெளிப்புற வட்டம் சில நொடிகள் பச்சை நிறத்தில் காணப்படும். இந்தக் காட்சியை காணக்கிடைக்காதா என்று ஏங்குவோருக்கு இது அற்புதமான அனுபவமாக அமையும்.
வளிமண்டலமானது பல அடுக்குகள் கொண்டது. ஒவ்வொரு அடுக்கின் அடர்த்தியும் வேறுபடும். சூரியனை தொடுவானத்தின் கீழே நாம் பார்க்கும்போது, அதிக அடர்த்தி கொண்ட வளிமண்டலத்தின் வழியாக நோக்குகிறோம். அடர்த்தி வேறுபட்ட அடுக்குகள் வழியே சூரியஒளி பாயும்போது விலக்கமடையும்.
வளிமண்டலத்திலுள்ள நீர்த்துளிகள் சூரிய ஒளியிலுள்ள மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன. காற்று மூலக்கூறுகள் வயலட் என்னும் ஊதா நிறத்தை சிதறடிக்கின்றன. இதன் காரணமாக சிவப்பு, நீலப் பச்சை நிறங்கள் நேராக பார்ப்பவர்களை நோக்கி வருகின்றன. தொடுவானத்திற்கு அருகில் சூரிய ஒளி மிக அதிகமாக விலக்கமடைகிறது. அப்போது சிவப்பு நிறத்தில் ஒன்றும், நீலப் பச்சை நிறத்தில் ஒன்றுமாக இரண்டு சூரியன்கள் ஒன்றின்மேல் ஒன்று படர்ந்ததுபோன்ற காட்சி தெரிகிறது. அதிலும் சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் சிவப்பு நிறம் தொடுவானத்திற்கு மிக அருகில் இருப்பதால் நீலப் பச்சை வட்டை மட்டுமே மனிதர்கள் காண இயலும். அதுவே பச்சை ஒளிக்கீற்று என்று அழைக்கப்படுகிறது.
இதை இன்னுமொருவிதமாகவும் விளக்குகின்றனர். நீலம், ஊதா மற்றும் பச்சை ஆகிய நிறங்கள் குறுகிய அலைவரிசை அதாவது ஷார்ட்டர் வேவ்லென்த் கொண்டவை. மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்கள் நெடிய அலைவரிசை கொண்டவை. குறுகிய அலைவரிசை கொண்ட நிறங்கள் அதிகமாக ஒளிவிலக்கமடையும். இதன் காரணமாக நீலமும் ஊதாவும் வளிமண்டலத்தில் சிதறுகின்றன. சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் உள்ளீர்க்கப்படுகின்றன. விடுபட்ட பச்சை நிறம் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது.
பின்னணி:
2019 ஆம் ஆண்டு, ஜூன் மாதம். வட அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள பெர்முடா தீவை நோக்கி உல்லாச கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஜோ ராவ் என்பவரும் அவரது மனைவி ரெனேட்டும் பயணித்தனர். வானம் தெளிவாக இருந்தது. சூரியன் அடிவானில் மறைந்துகொண்டிருந்தது. சூரியனின் மேற்பகுதி மறையும் தருணத்தில் பிரகாசமான பச்சை ஒளியை அடிவானில் தம்பதியர் பார்த்தனர்.
முதன்முதலாக ஒளிரும் மரகத பச்சை என்று அர்த்தம் கொள்ளும் டாஸ்லிங் எமரால்டு கிரீன் என்ற பெயரிட்டு அறிவியல் பதிவை டபிள்யூ. ஸ்வான் என்பவர் பதிவு செய்தார். 1865ம் ஆண்டு ஒருநாள் சூரிய உதயத்தின்போது தாம் கண்டதை, பின்னரும் பலர் கண்டதாக கூறியதால் 1883ம் ஆண்டு அவர் பதிவு செய்தார்.
வில்லியம் தாம்சன் என்ற பிரிட்டிஷ் கணித மற்றும் அறிவியல் அறிஞரும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிளாங்க் என்ற மலையில் இதைக் கண்டதாக 1899ம் ஆண்டு எழுதியுள்ளார். முன்பே 1822ம் ஆண்டு வெளிவந்த ஜூஸ் வெர்னே என்பவரின் நாவலிலும் இதைக் குறித்து எழுதப்பட்டிருப்பதாக வில்லியம் தாம்சன் நினைவுகூர்ந்துள்ளார்.
வானம் தெளிவாக இருக்கும்போதும், தொடுவானத்தை பார்க்கக்கூடிய இடத்தில் இருக்கும்போது இக்காட்சியை காண வாய்ப்புள்ளது. அதாவது மலையுச்சி அல்லது உயரமான கட்டடங்களின் மேல் நிற்கலாம். ஆனாலும், பெரும்பாலும் கடற்கரைகளில் இருப்போரும் படகுகளில் செல்வோரும் தொடுவானத்தை பார்க்க முடிவதால், இக்காட்சியும் அவர்களுக்கே காணக்கிடைக்கிறது. தொடுவானம் தெரியும் வெட்டவெளியில் இருந்தாலும் பார்க்க முடியும்.
சூரியன் கிட்டத்தட்ட மறைந்த நிலையில் இருக்கும்போது கவனிக்கவேண்டும். பச்சை ஒளிக்கீற்றை பார்க்கும் ஆவலில் நெடுநேரம் சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தால், அது தொடுவானத்திற்கு கீழே இறங்கும்போது இந்த அரிய நிகழ்வை கண்களால் துல்லியமாக காண இயலாமல் போகலாம். சூரியன் மறையும்போது மட்டுமல்ல, இதைப் பார்க்கவேண்டும் என்று முயற்சிப்பவர்கள், சூரிய உதயத்தின்போதும் அரிய வாய்ப்பு கிடைக்கப்பெறுகிறார்கள்.
கிரீன் ஃப்ளாஷ் என்னும் பச்சை ஒளிக்கீற்றுகளில் இன்ஃபீரியர் மிரேஜ் என்னும் தாழ்நிலை காட்சி மாயம், மாக் மிரேஜ் என்னும் போலி காட்சி மாயம், சப்டக்ட் ஃப்ளாஷ் என்னும் பிறை ஒளிக்கீற்று மற்றும் கிரீன் ரே என்னும் பச்சை ஒளிக்கதிர் ஆகிய நான்கு வகைகள் உள்ளன.
இன்ஃப்ரீயர் மிரேஜ், கடல்நீரின் வெப்பநிலையானது அதற்கு மேலே இருக்கும் காற்றின் வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமாய் இருப்பதால் தோன்றுகிறது. இது நீள்வட்டம் மற்றும் தட்டை வடிவில் காணப்படும்.
மாக் மிரேஜ், பூமி பரப்பின் வெப்பநிலையானது அதற்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தின் வெப்பநிலையைக் காட்டிலும் குறைவாக இருக்கும்போது வானின் மேற்பகுதியில் தோன்றும். சூரியனிலிருந்து ஒரு மெல்லிய கூரான துண்டு உடைந்துவந்ததுபோல் இது காட்சியளிக்கும். ஒன்று அல்லது இரண்டு விநாடி காலமே இதைப் பார்க்க முடியும்.
வெப்பமான காற்று, தரைக்கு அருகே குளிர்ந்த காற்றையும், ஈரப்பதத்தையும் தழுவும்போது சப்டக்ட் ஃப்ளாஷ் உருவாகிறது. இது 15 நொடிகள் வரை நீடிக்கக்கூடும்.
இதில் மிகவும் அரிதான நிகழ்வு பச்சை ஒளிக்கதிர் எனப்படும் கிரீன் ரே ஆகும். பச்சை ஒளிக்கீற்றானது காற்று மண்டலத்தின் அடர்த்தி வேறுபாட்டால் ஒரு கதிர்போல மேலே எழுந்து அடங்குவது பச்சை ஒளிக்கதிர் எனப்படுகிறது.
1929ம் ஆண்டு அண்டார்டிகா துருவ பகுதிக்கு பயணித்த ரிச்சர்ட் பைரிட் என்பவரும் அவரது குழுவினரும் பச்சை சூரியனை 35 நிமிட நேரம் பார்த்ததாக பதிவு செய்துள்ளார்கள். பச்சை ஒளிக்கீற்று போன்ற சம்பவம் நெடுநேரம் நீடித்திருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.