fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம்

குழந்தைகளுக்குத் தலைவலியா? கண்ணில் பிரச்னை இருக்கலாம்!

child head ache

செய்தி சுருக்கம்:

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரில் 60 சதவீதம் பேர் தலைவலியால் அவதிப்படுவதாக கண் மருத்துவம் சார்ந்த ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகள் தலைவலி என்று கூறினால் அதை அலட்சியம் செய்யக்கூடாது என்றும், கண்களில் குறைபாடு இருப்பதால் தலைவலி ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

அமெரிக்காவில் 2 முதல் 18 வயது கொண்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரில் தலைவலி பாதிப்பு கொண்ட 1,878 பேரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களுள் நால்வரில் ஒரு குழந்தைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரச்னை கண்களில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த கண் பிரச்னை, தலைவலிக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆய்வு நடத்தப்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சமச்சீரற்ற பார்வை ஆகிய குறைபாடுகளும், 4.4 சதவீத குழந்தைகளுக்கு மாறுகண் பிரச்னையும், மிகவும் குறைந்த எண்ணிக்கையுள்ளவர்களுக்கு வேறு பிரச்னைகளும் இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

தலைவலியானது குழந்தைகளின் வாழ்க்கையை, அவர்கள் செயல்திறனை, பள்ளி செல்வதை பாதிப்பதால் பெற்றோர் இது குறித்து மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பின்னணி:

அமெரிக்காவை சேர்ந்த ஒரு தாயார், தன் 11 வயது மகளைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தக் குழந்தை ஒரு நாளில் 8 முதல் 10 மணி நேரம் அழுதுகொண்டே இருந்தது. குழந்தை நல நிபுணர், கோலிக் என்ற குழந்தை அழுகை பிரச்னையாக இருக்கலாம் என்று கருதியுள்ளார்.

ஆனால், அந்தப் பிள்ளை சற்று வளர்ந்தபோது தலைவலிக்கும்போதெல்லாம் வலியின் தீவிரத்தால் தலையில் கையால் அடித்துக்கொண்டிருக்கிறாள்; சுவற்றில் மோதியுள்ளாள். அப்போதும் குழந்தை நல நிபுணர், அது நடத்தை சார்ந்த பிரச்னை என்றே நினைத்துள்ளார்.

மகள் வளர்ந்து பள்ளியில் சேர்ந்தபோது, அவளது ஆசிரியை, அந்தப் பிள்ளை வெயிலில் வெளியே விளையாடிவிட்டு வந்தால் தலைவலிப்பதாக கூறி, ஒதுங்கி படுத்துக்கொள்வதாகவும், அவளுக்கு மைக்ரேன் என்ற தலைவலி இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் குழந்தை நல நிபுணர், அவளை காது, மூக்கு, தொண்டை வைத்தியர், கண் வைத்தியர், நரம்பியல் நிபுணர் என்று பல்வேறு நிபுணர்களிடம் அனுப்பியுள்ளார். பிள்ளையின் காதுகள், மூக்கு, பல் என்று அனைத்து உறுப்புகளுமே நன்றாக இருந்தன. கண் மருத்துவர், பிள்ளை வாசிப்பதில் சிரமப்படுவதை கண்டுபிடித்துள்ளார். ஆம், ஒரு வரியை வாசித்துவிட்டு அடுத்த வரியை வாசிப்பதற்கு அவள் சிரமப்பட்டுள்ளாள். அவளது கண்ணின் இயக்கம் மற்றவர்களின் கண்களின் இயக்கத்திலிருந்து மாறுபட்டிருந்தது என்று அந்த தாயார் கூறியுள்ளார். இவ்வாறு கண்களிலுள்ள பிரச்னையே குழந்தைகளுக்கு தலைவலிக்கான முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

கிட்டப்பார்வை

மயோபியா என்ற கிட்டப்பார்வை குறைபாடு இருப்பவர்களுக்கு, கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவிந்துவிடும். அவர்களால் அருகில் உள்ள பொருள்களை தெளிவாக காண முடியும். ஆனால், தூரத்தில் உள்ளவற்றை தெளிவாக பார்க்க முடியாது. எழுத்துகளை வாசிக்க இயலாது. பொருத்தமான கண்ணாடி அணிவதால் இக்குறைபாட்டை நீக்கலாம்.

தூரப்பார்வை

ஹைபரோபியா என்ற தூரப்பார்வை குறைபாடு இருப்பவர்களுக்கு கண்களில் ஒளியானது விழித்திரையை தாண்டி பின்னால் குவியும். இதனால் அருகில் உள்ள பொருள்கள் துல்லியமாக தெரியாது. பொருத்தமான கண்ணாடி அணிந்து இக்குறைபாட்டையும் நீக்கலாம்.

சமச்சீரற்ற பார்வை

அஸ்டிக்மாடிசம் என்ற சமச்சீரற்ற பார்வை குறைபாடு இருப்பவர்களுக்கு கருவிழி வளைவு சரியாக அமையாததால் தூரத்திலும் அருகிலுமுள்ள பொருள்கள் தெளிவற்று தென்படும். பொருத்தமான கண்ணாடி அணிவதால் இதையும் சரிப்படுத்தலாம்.

மாறுகண்

இரண்டு கண்களும் வெவ்வேறு திசைகளில் பார்க்கும் குறைபாடு மாறுகண் அல்லது ஸ்ட்ராபிஸ்மஸ் என்று கூறப்படுகிறது. ஆரம்ப நிலையில் இதைக் குணப்படுத்தாவிட்டால் சிலருக்கு பார்வையை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. குடும்பத்தில் யாருக்காவது மாறுகண் அல்லது பார்வை திறன் குறைபாடு இருந்தால், குழந்தைக்கு இப்பாதிப்பு வர வாய்ப்புள்ளது. பலவீனமான கண் தசைகள், கண் நரம்பில் ஏற்படும் சிக்கல்களும் மாறுகண் குறைபாடு ஏற்பட காரணமாகலாம்.

யூவியா

நம் கண்ணானது ஸ்கிளீரா, யூவியா மற்றும் ரெட்டினா என்னும் மூன்று அடுக்குகளைக் கொண்டது. நடுவிலுள்ள யூவியா அடுக்கில் பாதிப்பு ஏற்பட்டு வீங்குவதே யூவியைட்டீஸ் எனப்படுகிறது. பெரும்பாலும் நுண்ணுயிரிகளால் இப்பாதிப்பு ஏற்படுகிறது.

இவை பொதுவான கண் குறைபாடுகள். ஆனால், தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவரே கண்டறிந்து உறுதி செய்ய முடியும்.

பெற்றோருக்கான ஆலோசனை

கண் பிரச்னையால் தலைவலி ஏற்படலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் மைக்ரேன் என்ற நரம்பு தொடர்பான தலைவலியை கண் குறைபாடுகள் தீவிரமாக்கக்கூடும். குழந்தை, தலைவலி என்று கூறினால் பொய் சொல்லுகிறது என்று எண்ணாமல் அல்லது அலட்சியம் செய்யாமல் அதை கவனிக்க வேண்டும்.

தலைவலியுடன் குமட்டல் அல்லது வாந்தி இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும். சில குழந்தைகளுக்கு தூக்கம் குறைதல், மன அழுத்தம், உடலில் நீர்ச்சத்து குறைதல், தாமதமாக உண்ணுதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் தலைவலி ஏற்படக்கூடும். பிள்ளைகள் நல்ல ஓய்வெடுப்பதை பெற்றோர் உறுதி செய்யவேண்டும்.

பிள்ளை தொடர்ந்து தலைவலி என்று கூறினால், ஒருவேளை உங்கள் மருத்துவர் அதைப் பொருட்படுத்தாவிட்டால் நீங்கள் வேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்க தயங்க வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள் :

குட்டித் தூக்கம் உடலுக்கும் மூளைக்கும் நல்லதென்று தெரியுமா உங்களுக்கு?
மூளையில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் காயங்களால் குழந்தைகளின் நுண்ணறிவு  பாதிக்கப்படாது: ஆய்வு சொல்லும...
இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் தொடர்ந்து மது அருந்தினால் உயிர் தப்ப முடியாது! ஆய்வாளர்களின்...
மார்பகப்புற்றுநோயின்அறிகுறிகள்
பெரும்பாலான ஆண்களுக்கு சுய இன்பம் என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் ஆய்வு கூறுகிறது
அமெரிக்காவில் பரவும் இறைச்சி அலர்ஜி - ஆபத்துக்குக் காரணம் என்ன?
குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்
தனிமை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்
நொடிப்பொழுதில் கட்டுரை எழுதி தரக்கூடிய ChatGPT செயலியின் நுண்ணறிவு திருடப்பட்டு கட்டமைக்கப்பட்டதா? -...
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *