தமிழ்நாட்டின் கீழடியில் ‘படிக குவார்ட்ஸ் எடை அலகு’ கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் மதுரையில் இருந்து தென் கிழக்கே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சங்க காலத்தைத் சேர்ந்த படிக குவார்ட்ஸ் எடை அலகு ஒன்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கீழடியில் நடைபெற்ற ஒன்பதாம் கட்ட அகழ்வாய்வில் இந்த எடை அலகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பதாம் கட்ட ஆய்வுப் பணியை முதல்வர் முக ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 8 கிராம் எடை கொண்ட மற்றும் அழகான இந்தப் படிக அலகின் விட்டம் இரண்டு சென்டிமீட்டர் என்றும் உயரம் 1.5 சென்டிமீட்டர் என்றும் தெரிய வருகிறது. இதனுடன் ஒரு டெரகோட்டா ஹாப்ஸ்காட்ச்(கேம் போர்டு), ஒரு இரும்பு ஆணி, ஒரு மண் பாம்பு உருவம், கருப்பு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கின்றன. ஏனெனில் இதற்கு முன் கிடைத்த எடை அலகுகள் யாவும் கற்களால் செய்யப்பட்டவை. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் எடை அலகு படிகத்தால் ஆனது என்பதே அவர்களுடைய உற்சாகத்திற்குக் காரணம். இந்தப் படிக எடை அலகைப் பற்றி அவர்கள் கூறும் போது, இவை பொருள்களின் எடையை அளப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதி என்றும் ஆனால் நெல் அல்லது காய்கறிகளின் எடையை அளக்கப் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது என்றும் தங்கம், விலை உயர்ந்த கற்கள் மற்றும் அவற்றால் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் ஆபரணங்களை எடை போடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படிக எடை அலகானது 8 கிராம் எடையில் இருப்பதாலும் துல்லியமான முடிவுகளைத் தருவது என்பதாலும் காலநிலையைச் சார்ந்து மாறுபடுவது இல்லை என்பதாலும் இது தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது அவர்களுடைய கருத்து. மேலும் இந்த குவார்ட்ஸ் அலகு கிமு 600 – கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட கால கட்டத்தைச் சேர்ந்தது என்றும் கீழடியில் கிடைக்கப்பெற்ற முதல் படிக அலகு இது என்றும் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வீரணன் என்பவரது 35 சென்ட் நிலத்தில் நடைபெற்ற இந்த அகழ்வில் இதுவரை ஒன்பது குழிகளில் தங்க அணிகலன்கள், ஆட்டக் காய்கள், சுடுமண் விலங்கு பொம்மைகள் உள்ளிட்டநூற்று எண்பத்து மூன்று பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்துடன் பூமிக்கடியில் 175 சென்டிமீட்டர் ஆழத்தில் அதாவது ஆறு அடி ஆழத்தில் படிகத்தால் செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட எடை அலகு கிடைக்கப்பெற்றுள்ளது. இது குறித்துத் தொல்லியல் துறை இணை இயக்குனர் ஆர் சிவானந்தம் கூறும்போது, “கீழடியில் ஒன்பதாவது கட்ட அகழாய்வில் படிக குவார்ட்ஸ் எடை அலகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் ஒரு படிக குவார்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இது மேற்பகுதி மற்றும் அடிப்பகுதி ஆகியவை துண்டிக்கப்பட்டு தட்டையாய் உள்ளது மற்றும் மென்மையான மேற்பரப்பைக் கொண்டு ஓரளவு கோள வடிவில் இருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் எட்டு கட்டங்களாக நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு ‘மதுரையும் கீழடியும்’, ‘வேளாண்மையும் நீர் மேலாண்மையும்’, ‘கலம் செய்கோ’, ‘ஆடையும் அணிகலன்களும்’, ‘கடல் வழி வணிகம்’, மற்றும் ‘வாழ்வியல்’ என்னும் ஆறு தலைப்புகளின் அடிப்படையில் தனித்தனிக் கட்டிடங்களில் தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கீழடி, அதனருகே உள்ள கொந்தகை மற்றும் அகரம் உள்ளிட்ட இடங்களில் ஒன்பதாம் கட்ட அகழ்வாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறையும் ஏராளமான பொருள்கள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. அவற்றுள் டெரகோட்டா போர்டு கேம் அக்காலத்து மக்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதாவது ஓய்வு நேரத்தை மதிக்கும் ஒரு சமூகத்தை நம் கண் முன்னே அது சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் மிகவும் நுணுக்கமாகச் செய்யப்பட்டுள்ள மண்ணாலான பாம்பு உருவம் அக்கால மக்களின் கலாச்சார மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளை எடுத்தியம்புகிறது என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். படிக எடை அலகு பயன்பாடு என்பது கோயம்புத்தூர் மற்றும் காங்கேயத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது எனக் கூறும் அவர்கள், இது பண்டைய தமிழர்களின் வணிகச் செழுமையைக் குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டின் கீழடி, இந்தியாவின் கடந்த காலத்தைப் பறைசாற்றும் முக்கியமான வரலாற்று மையமாக இருந்து வருவது நாம் அறிந்ததே. இங்கு கிடைக்கும் பொருள்கள் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு மற்றும் கட்டமைப்பில் தமிழ்ச்சமூகம் சிறந்து விளங்கியது என்பதற்குப் பெரும் சான்றுகளாக உள்ளன
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டு எழுதப்பட வேண்டும் என்று கூறிய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் கூற்றுப்படி இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் தமிழர்களின் தாக்கம் மற்றும் முக்கியத்துவத்தை இந்தத் தொல்பொருள்கள் ஆழமாக உணர்த்துவதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.