உடல்நலனை மட்டுமல்ல மனநலனையும் பாதிக்கும் ஜங்க் உணவுகள்! எதைத் தின்கிறோமோ.. அதுவாகிறோம்…!!

ஓரு பொருள் உற்பத்தியாகும் இடம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அதை உண்ணாதீர்கள் என்பார் நம்மாழ்வார் ஐயா. ஒரு உணவுப்பொருளில் என்னென்ன இருக்கின்றன அதை எப்படித் தயாரிக்கின்றனர், அதில் உள்ள மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கின்றன போன்ற தரவுகள் தெரியாத ஒரு உணவை நாம் அடியோடு மறுத்தால் மட்டுமே நம் ஆரோக்கியத்திய நம்மால் பேணிக்காக்க முடியும்.
ஒரு தளபதி ஒரு நாள் சாப்பிட அமர்கிறான். அவனுக்கு ஒரு உணவு பரிமாறப்படுகிறது. அதை அவன் முழுவதுமாக உண்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. மிகவும் கோபமும், ஆத்திரமும், கொலை வெறியும் உருவாகிறது. தன்னில் நிகழும் இந்த மாற்றத்தைக் கண்ணுற்ற அந்தத் தளபதி அதற்கான காரணத்தை ஆராய்கிறான். தான் உண்ட உணவின் காரணமாகவே இது நிகழ்கிறது என்று உணர்கிறான். அந்த உணவு எங்கிருந்து வந்தது என்று ஆராய்கிறான். அன்று அவன் உண்ட உணவு ஒரு கொள்ளைக்காரனை கைது செய்யும்போது கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது என்ற உண்மையை அறிந்து ஆச்சரியம் அடைகிறான்.
உணவுப்பொருட்கள் உருவாகும் இடத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்தக் கதை கூறப்படுகிறது. நம் நாட்டில் இப்பொழுது வெகுவாக புழக்கத்தில் இருக்கும் துரித உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் எனப்படும் குப்பை உணவுகள் பற்றியும் நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். இன்னும் சிறிது வருடங்களில் இந்த உணவுகளால் உருவான பின்விளைவுகளை அனுபவிக்கப்போவது நாம்தான்.
ஜங்க் உணவுகள் குறித்த புதிய ஆய்வு!
பதப்படுத்தப்பட்ட ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் பதின்வயதினர், பிற்காலத்தில் மனநல கோளாறுகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மெல்போர்னில் இருந்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது .
மனநலப் பிரச்சனைகளுக்கு இந்த ஜங்க் உணவுகள் ஒரு காரணமாக இருக்கின்றது. மனச்சோர்வு பிரச்சனை மிகவும் பரவலான மனநலக் கோளாறுகளில் ஒன்றாகும். மனச்சோர்வுக்கான ஒரு ஆபத்து காரணியாக உணவின் தரம் இருக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில், 13 மற்றும் 17 வயதுக்குட்பட்ட 23,299 பங்கேற்பாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தி, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்பவர்கள் மனநல நெருக்கடிகளை அனுபவிக்கும் வாய்ப்பு 14 சதவீதம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
வயது பாகுபாடே இல்லை.. எல்லாரும் பாதிக்கப்படுகின்றனர்!
மேலும் என்னவென்றால், பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்வதால் பாதிக்கப்படுவதில் பாலினம், வயது மற்றும் உடல் நிறை குறியீட்டெண் ஆகியவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜங்க் ஃபுட் சம்பந்தப்பட்ட மற்றொரு ஆய்வில், புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் மோசமான அறிவாற்றல் செயல்பாடு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளில் 25 சதவிகிதம் அதிகரிப்பதைக் கவனித்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஜங்க் புட் நுகர்வின் ஒவ்வொரு 10 சதவிகிதம் அதிகரிப்பிற்கும் இரண்டு சதவிகிதம் புற்றுநோயின் அபாயத்தைக் கொண்டிருக்கிறதாம்.
15 வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், பெரும்பாலும் வயதான பெரியவர்கள் (50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்) அதிக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது, மனச்சோர்வு மற்றும் உயர்ந்த உளவியல் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எதையெல்லாம் சாப்பிடக்கூடாது..?
நீங்கள் எதைச் சாப்பிடக் கூடாது என்பது குறித்த பட்டியலில் குளிர்பானங்கள் முதலிடம் வகிக்கின்றன. அதைத் தொடர்ந்து சிப்ஸ், லாலி பாப்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு மற்றும் காரமான பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டிகளும், காலை உணவு தானியங்கள், காலை உணவு பார்கள் மற்றும் பானங்கள் போன்ற முன் தயாரிக்கப்பட்ட உணவுகள் உள்ளன.
பீஸ்ஸாக்கள், பொறித்த சிக்கன் உணவுகள், ஹாட் டாக் மற்றும் பிற இறைச்சி கொண்ட பொருட்கள். மார்கரின் மற்றும் உடனடி நூடுல்ஸ் மற்றும் சூப்கள் போன்ற அதிக அளவில் பதப்படுத்தப்படும் உணவுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியவை.
எவற்றைச் சாப்பிடவேண்டும்?
அதற்குப் பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், மீன் மற்றும் முட்டை போன்ற நல்ல கொழுப்புகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகேடோ எண்ணெய் போன்ற சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களை உண்ணலாம்.
சில தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு அதிகமாகவும், நுண்ணூட்டச்சத்துக்கள் குறைவாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுவது சரிதான். உதாரணமாக, வைட்டமின் டி, பி வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் மனச்சோர்வைத் தடுக்க உதவும்.
எத்தகைய நல்ல தன்மைகளும் அற்ற இந்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உடலையும் மனதையும் கெடுத்து விடுகின்றன. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கொண்டிருந்த நமது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நடத்தலே நாம் பிழைத்திருக்க ஒரே வழி. இல்லையென்றால் இந்த பெருமுதலாளிகள் விரிக்கும் விளம்பர வலையில் விழுந்து கண்டதையும் தின்று அவர்களது மருத்துவமனைகளில் நோயாளிகளாக வாழ வேண்டியதுதான்.