fbpx
LOADING

Type to search

உடல் நலம்

பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் கவனிக்கப்படாததால் ஏற்படும் ஆபத்துகள்

பொதுவாக ஊட்டச்சத்துப் பிரச்சினை மற்றும் குழந்தைப்பருவ இரத்தசோகைக்கு முக்கியமான காரணமாக இருப்பது இரும்புச்சத்துக் குறைபாடு. நம்முடைய உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லையென்றால் நம் உடலில் இருக்கும் தசைகள் மற்றும் திசுக்கள் முறையாக இயங்குவதற்குப் போதுமான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதுவே இரத்தசோகை ஏற்படுவதற்கான முக்கியக் காரணம்.

நம்முடைய உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படும் அத்தியாவசியமான கனிமம் இரும்புச்சத்து. இரத்த உற்பத்திக்கு மிக முக்கியமான காரணியாக இருக்கும் இந்த இரும்புச்சத்தின் மூலமே ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து அனைத்துப் பாகங்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும். ஹீமோகுளோபின் என்பது இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள புரதம். உடலில் ஹீமோகுளோபின் அளவானது 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் 11 முதல் 15 கிராம் வரை இருக்கவேண்டும். நம்முடைய உடலில் இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். உடலால் போதுமான அளவு இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாத நிலையில்தான் இரத்தசோகை ஏற்படுகிறது.

பொதுவாக இந்த இரும்புச்சத்துக் குறைபாடு என்பது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக அளவில் ஏற்படும் பிரச்சனை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். உலக அளவில் ஐந்து வயதிற்குட்பட்ட 42 சதவீதம் குழந்தைகள் மற்றும் 40 சதவீதம் கர்ப்பிணிப் பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. உடலில் இரும்பின் அளவு பெண்களுக்கு 12 முதல் 15.5 கிராம் வரையில் இருக்கும். இந்த அளவுக்குக் கீழ் இருந்தால் அவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்.

இதற்கான அறிகுறிகளாகத் தலைசுற்றல், கிறுகிறுப்பு, மூச்சுத்திணறல், பசியின்மை, அழற்சிக்கு உட்பட்ட நாக்கு, நெஞ்சுவலி, குளிர்ச்சியாய் உணர்தல், நகங்கள் உடைதல், வெளிறிய தோல், முடி கொட்டுதல், அரிப்பது போன்று உணர்தல், மனச்சோர்வு, அடிக்கடி தொற்று ஏற்படுதல் ஆகியவை கூறப்படுகின்றன.

இந்தியாவில் தேசிய குடும்பநல ஆணையத்தின்  2019 – 20 சர்வேயின்படி, கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பதும் கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுகளின்படி 15 லிருந்து 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 59.1 சதவீதம் பேருக்கு இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இரண்டில் ஒருவருக்கு இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பதாக கூறப்படுகின்றது. வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இல்லை.

உலகளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இந்த இரத்தசோகை ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஒன்பதிலிருந்து 11 சதவீதம் குழந்தைகள், பருவப் பெண்கள் மற்றும் குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு ஒவ்வொரு ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இரத்த

சோகைக்கான இரத்தப் பரிசோதனையை சிடிசி பரிந்துரைத்த போதிலும் மருத்துவர்கள் இதை முறையாகச்  செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பெண்களுக்கு ஒரு நாளைக்கு 15லிருந்து 18 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து முக்கியம் என்பதால்தான் கர்ப்பக் காலத்தின் ஆரம்பத்தில் போலிக் அமில மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றன.

மாதவிலக்கு மற்றும் கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்துக் குறைபாடும் அதிக அளவில் இருக்கும். அது தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். அதனால்தான் ஒவ்வொரு மாதமும் தாயின் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை பரிசோதிக்கப்படுகிறது. ஒன்பதாவது மாதத்தில் போதிய ஹீமோகுளோபின் இல்லையெனில் இரத்தம் செலுத்தப்படுகின்றது. இரும்புச்சத்துக் குறைபாட்டால் தாய்ப்பால் சுரப்பது குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். மகப்பேறு காலத்தில் அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கும் இது காரணமாய் அமைகிறது.

பொதுவாகப் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் முப்பதிலிருந்து ஐம்பது மில்லி லிட்டர் இரத்த இழப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு இதை விட அதிகளவிலும் ஏற்படலாம். இரும்புச்சத்துக் குறைபாட்டால் சீரான மாதவிடாய் இராது. ஹார்மோன் சமநிலையின்மை, கருப்பைக் கட்டிகள், பிறப்புறுப்பில் புற்றுநோய் மற்றும் சினைக்கட்டிகள் போன்றவையும் ஏற்படலாம். குழந்தைகளுக்கு இரும்புச்சத்துக் குறைபாட்டினால் அவர்களுடைய செயல்திறன் மற்றும் அறிவாற்றல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இவ்வளவு பாதிப்புகளைத் தரும் இரும்புச் சத்துக் குறைபாட்டினைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்று கேட்பவர்களுக்கு இதோ பதில். பிராக்கோலி, முருங்கைக்கீரை, பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள், கடல் உணவுகள், வைட்டமின் சி நிறைந்த தக்காளி, உலர் பழங்கள், சிட்ரஸ் பழங்களைச் சேர்ப்பதன் மூலம் இரும்புச்சத்தை அதிகரிக்கலாம். முளைகட்டிய பயறு வகைகள், அசைவ உணவுகளான சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றையும்  சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவற்றில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளன. முட்டை, கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் ஆகியவையும் இரும்புச்சத்தை அதிகரிக்கும் உணவு வகைகள்.

பொதுவாக எந்த விதமான உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பெண்களுக்குத் தெரியாததே இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.  மேலும் இந்த நோயைக் கண்டறிவது கடினம் என்றும் கண்டறியும் முன்பே சம்பந்தப்பட்ட நபர் நோயாளி ஆகி விடுகிறார் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தக் குறைபாடு பெருமளவில் உடலைப் பாதிக்கும்படியான வீரியம் மிக்கது என எச்சரிக்கவும் செய்கிறார்கள். எனவே மிகுந்த விழிப்புணர்வு அவசியம். குடும்ப நலத்தைப் பேணும் பெண்கள் தங்களது உடல் நலத்தையும் பேணுதல் நலம். கர்ப்பம் உறுதியானால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்து மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும், குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை டயட்டீஷியனை அணுகிச் சோதனை செய்து கொள்வதும் மிக மிக முக்கியம்.

ஆகவே பெண்களே! இரும்புச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகளில் எவ்வித அலட்சியமும் காட்டாதீர்கள். இரும்புப் பெண்மணிகளாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள் :

உடல் பருமன் என்பது ஆரோக்கியக் குறைவே - ஆய்வு முடிவு..!!
வெயிட் லாஸ்'க்கு இப்படி சாப்பிடுங்கள். எளிமையாக கொழுப்பை கரைக்க எளிமையான மூன்று டிப்ஸ்.
குட்டித் தூக்கம் உடலுக்கும் மூளைக்கும் நல்லதென்று தெரியுமா உங்களுக்கு?
குழந்தைகளுக்குத் தலைவலியா? கண்ணில் பிரச்னை இருக்கலாம்!
நீங்கள் சைவ உணவு பிரியரா? இடுப்பு கவனம்!
மூளையில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் காயங்களால் குழந்தைகளின் நுண்ணறிவு  பாதிக்கப்படாது: ஆய்வு சொல்லும...
உடலுறவுக்குப் பிறகான செயல்பாடுகள் உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிக்கின்றன!! தம்பதிகளே தயாரா..?!
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!
உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உடலுறவு அவசியமா? நெருக்கமும் உடலுறவும் ஒன்றா..? வித்தியாசத்தைத் த...
இந்தியாவிற்கு வெளியே ‘கறி’ பற்றிய பழைமையான ஆதாரங்கள்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *