fbpx
LOADING

Type to search

உலகம் வர்த்தகம்

சமூகப் பொருளாதாரச் சமத்துவமின்மை: வரலாறு சொல்வதென்ன?

காலச்சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருக்கிறது. நாகரிகமும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் மனிதர்களிடையே மட்டும் சமூகப் பொருளாதாரச் சமநிலை என்பது இன்றும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. சமூகப் பொருளாதாரச் சமத்துவமின்மை என்பது இன்று நேற்றல்ல, மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. காலப்போக்கில் மனிதர்களின் தனிப்பட்ட செல்வவளத்தின் காட்சிகளினூடே நாம் பயணித்தோமானால் இந்தச் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வின் வரலாற்றை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். வாருங்கள் பயணிப்போம்.

இரும்புக் காலத்தில் அதாவது வரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் மூன்று கால முறையின் இறுதியான மற்றும் முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்த மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் பெரிய பெரிய வீடுகளில் வசித்ததாகத் தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. ரோமானியக் குடியரசின் கடைசிக் காலகட்டத்தில் வாழ்ந்த செல்வக் குடிமக்களோ கலை மற்றும் விருந்துகள் மூலம் தங்களது ஆடம்பரத்தைக் காட்டியிருக்கிறார்கள். உயர் இடைக்காலத்திலோ நிலப்பிரபுக்கள் தங்களது அடிமைகளின் மீது முழுமையான பொருளாதார மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் நிலப்பிரபுத்துவமானது நில உரிமையாளர்களுக்கு விவசாயிகளிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது மட்டுமின்றி அவர்களுக்குக் குறைவான சலுகைகளைக் கொடுத்தால் போதும் என்ற உரிமையையும் கொடுத்தது.

பண்டைய கிரீட்டில் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகள் விலைமதிப்பற்ற வாசனைத் திரவியங்கள் மற்றும் வெண்கலம் அல்லது வெள்ளி நகைகளுடன் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கணவர்கள் வாள் மற்றும் ஈட்டிகளுடன் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் தேவைப்படும் சில பொக்கிஷங்கள் அவர்களது மரணத்திலும் கொடுக்கப்பட்டிருப்பது வியப்பாக உள்ளது.

“பாம்பீ என்னும் நகரத்தில் ஒரு காலத்தில் நீங்கள் பிறந்திருந்தால் அங்கே வீட்டில் வசித்திருக்க மாட்டீர்கள். ஒரு டோமஸில்தான் வசித்திருப்பீர்கள். டோமஸ் என்பது 3000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. பல படுக்கையறைகள், பிரம்மாண்டமான தங்கும் அறைகள், வேலைக்காரர்கள் தங்கும் அறைகள், மலர்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தோட்டம், நீச்சல் குளம், விவசாய நிலம் எனச் செல்வச் செழிப்போடு வாழ்ந்திருப்பீர்கள்”, என்கிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் பூமியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று செல்வச்செழிப்பான இளைஞனொருவன் நடத்திய விருந்தைச் சொல்கிறது. அந்த விருந்தில் 456 மூன்று பக்க மஞ்சங்கள் இருந்ததாகவும், ஒவ்வொன்றிலும் 15 பேர் சாய்ந்து கிடந்தார்கள் என்றும் அது கூறுகிறது. இதைப் பார்க்கும் பொழுது செல்வந்த விருந்து என்பது இன்றல்ல நேற்றல்ல பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.

டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆராய்ச்சியில் கிமு 200 மற்றும் கிமு 900 க்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது புதிய கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்துக்கு மாறியபோதுதான் இந்தச் சமத்துவமின்மை தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயப் புரட்சிக்குப் பிறகு தோன்றிய சிக்கலான நாகரிகங்களைக் காட்டிலும் பழமையான வேட்டையாடும் குழுக்கள், தங்களுக்கிடையே எவ்விதப் பாகுபாடுமின்றி மிகவும் சமத்துவமாக இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள். நகரங்கள் உருப்பெற்றபோது குடும்பங்களின் அளவு மற்றும் வடிவங்கள் வெகுவாக வேறுபடத் தொடங்கியிருக்கின்றன என்றும் வீட்டு அளவு மற்றும் தனிப்பட்ட செல்வம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நேர்மறையானத் தொடர்பு இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

விவசாயம் தோன்றியபின் உபரி உற்பத்தி உருவானதால் அவற்றைச் சேமிக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது. உபரி என்பது தானியங்களாகவும் கால்நடைகளாகவும் இருந்த வரையில் இந்த ஏற்றத்தாழ்வு இல்லை. எப்போது மனிதகுலம் நாடோடி வாழ்க்கையில் இருந்து நாகரிக வாழ்வுக்கு மாறியதோ அப்போதுதான் சேமிப்புக்கான தேவை அதிகரித்தது. இதனால் அதிக அளவில் உபரி உருவாக்கப்பட, அதன் தொடர்ச்சியாக நிலவுடைமையும், உழைப்புப் பிரிவினையும் தோன்றிச் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகின. அப்படியானால் நாகரிகம் நோக்கிய நகர்வுதான்தான் இந்தச் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுக்குக் காரணமோ?

சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சினையான இந்தச் சமத்துவமின்மை வறுமை, உடல்நலக் குறைவு மற்றும் சுரண்டலுடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது. தாமஸ் பிக்கட் தனது நூலான மூலதனத்தில், இந்தப் பிரச்சினைக்கு முதலாளித்துவத்தைக் காரணமாகக் கூறுவார். உண்மைதான். ஒரு சாராரிடம் மட்டும் செல்வம் குவிந்து கொண்டிருக்க மற்றவர்கள் ஏழ்மையை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தாமஸ் பிக்கட்டின் கருத்துப்படி 1980க்குப் பிறகு உலகின் அனைத்துப் பகுதிகளிலுமே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றது என்பது கண்கூடு. கடந்த 1990ஆம் ஆண்டு  முதல் 2015 வரையிலான காலத்தில் இந்தியா மற்றும் சீனா உட்பட உலகின் 70 சதவீத மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடுகளில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

செல்வம் மற்றும் சமத்துவமின்மை பற்றிய தனது வரலாற்று ஆய்வில் பேராசிரியர் டர்ச்சின் என்ன கூறுகின்றார் தெரியுமா? சமூகப் பொருளாதாரத்தில் மாற்றம் வேண்டுமென்றால், ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டுமென்றால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மட்டுமே போதாது. அனைவருக்குமான இலவசக் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள், வரி உயர்வு மூலம் வருவாய் மறுபங்கீடு போன்ற திட்டங்களால் மட்டுமே ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியும் என்கிறார் அவர். ஆம், மாற்றங்கள் வேண்டும். ஏனெனில் ஏற்றத்தாழ்வற்ற, சமநிலை கொண்ட சமுதாயத்தை நோக்கி நகர்வது மட்டுமே மனிதகுலத்தை முன்னேற்றும்.

தொடர்புடைய பதிவுகள் :

26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
ட்விட்டரை சாய்க்கத் தயாராகும் மெட்டா!  கயிறை (த்ரெட்ஸ்)  இழுக்கத் தயாராகுங்கள்!!
நீங்கள் சைவ உணவு பிரியரா? இடுப்பு கவனம்!
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
கூகுள் ஏன் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்கிறது?பின்னணி என்ன?
உலகமெங்கும் கிளர்ந்தெழும் இந்திய வம்சாவளி நிறுவனத் தலைவர்களைக் கண்டு அசந்து போயிருக்கும் ‘எலான் மஸ்க...
ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் : பிரிட்டனில் என்னென்ன பண்றாங்க பாருங்க!
விவேக் ராமசாமி என்னுடைய இசையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ராப் ஸ்டார் எமினெம்
ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியில் 80% இந்தியா மற்றும் சீனாவிற்கே!
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *