அரிசி மூட்டைகளை வாங்கிக்குவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்! அரிசி ஏற்றுமதித் தடையின் விளைவுகள்!!

செய்தி சுருக்கம்:
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, சமீபத்தில் பாஸ்மதி அல்லாத அனைத்து வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதித்தது. இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் குறைவான அரிசி உற்பத்தி காரணமாக உள்நாட்டு அரிசி விலைகள் உச்சத்தை எட்டியதால், அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தத் தடையானது உலக அரிசிச் சந்தையைப் பாதித்தது மட்டுமின்றி பணவீக்க அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரிசி இன்றி அணுவும் அசையாது!
உலகெங்கிலும் உள்ள 3 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும், உலகின் 90 சதவிகித அரிசி தேவை ஆசியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
உலகின் அரிசி ஏற்றுமதியில் 40 விழுக்காட்டைக் கொண்ட இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் தடை, உலகத்தில் உள்ள அனைத்து அரிசியை பிரதான உணவாகக் கொண்டவர்களை கணிசமாக பாதித்துள்ளது.
வரவிருக்கும் நாட்களில் உலக அளவில் அரிசியின் விலை கணிசமாக உயரும் என்று வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
வாங்கிக் குவிக்கும் இந்தியர்கள் – குறிப்பாக தெலுங்கு மக்கள்!
அரிசித் தடையானது வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் வாழும் பெரும்பாலான தெலுங்கு மக்களிடையே அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியை உருவாக்கியுள்ளது. உள்ளூர் மளிகைக் கடைகளில் அரிசி மூடைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) தங்கள் உள்ளூர் மளிகைக் கடைகளில் இருந்து டஜன் கணக்கான அரிசி மூட்டைகளை வீட்டிற்கு கொண்டு வருகின்றனர்.
இனி வரும் நாட்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படுவதோடு விலையும் விண்ணோக்கி உயரக்கூடும் என்று அம்மக்கள் அச்சப்படுகின்றனர்.
அரிசி மூட்டையின் விலையும் ஒருவருக்கு ஒரு மூட்டைதான் என்ற கட்டுப்பாடுகளும்!!
அரிசித் தடையானது வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள தெலுங்கு மக்களிடையே பானிக் பையிங்க் எனப்படும் பீதியில் வாங்கிக்குவித்தல் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, பிராந்தியம் முழுவதும் உள்ள இந்திய மளிகைக் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன “9 கிலோ அரிசி ஒரு மூட்டை $27க்கு விற்கப்படுகிறது!
டெக்சாஸ், மிச்சிகன் மற்றும் நியூ ஜெர்சி போன்ற முக்கிய நகரங்களில் பானிக் பையின் எனப்படும் பீதியில் வாங்கிக் குவித்தல் நிலை காணப்படுகிறது. இங்கு இந்த நகரங்களில், ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு அரிசி மூட்டை மட்டுமே விற்பனை செய்ய இயலும் என்ற விற்பனை வரம்புகளை சில கடைகள் விதித்துள்ளன.
உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இதுநாள் வரை தடையின்றி பெற்று வந்த ஒரு பிரதான உணவுப் பொருளுக்கு திடீரென்று தடையை உருவாக்குவதால் அந்த வெளிநாடு வாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் இந்திய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் லட்சங்களிலும் கோடிகளிலும் சம்பளம் வாங்கும் இந்தியர்கள் மட்டும் வசிக்கவில்லை. அன்றாடம் கூலி பெற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்தும் இந்தியர்களும் வாழத்தான் செய்கிறார்கள்.